திருந்தாத திருமாவளவன்

தி.மு.க., கூட்டணியில் உள்ள திருமாவளவன், ‘திருவள்ளுவரின் உருவத்தை முதலில் வரைந்த வேணுகோபால் சர்மா, ஓர் அந்தணர். அவர் தனது ஜாதிய அடையாளமாக வள்ளுவருக்குப் பூணுால் அணிவித்தார். கருணாநிதி, ‘திருவள்ளுவரை ஒரு ஜாதிக்குள் அடைக்கக் கூடாது, அவர் அனைவருக்கும் பொதுவானவர். பூணுாலைக் கழற்றி எறியுங்கள், எனச் சொல்லி, பூணுாலை அறுத்து எறிந்தார்’ என்று பேசி, மீண்டும் திருவள்ளுவர் குறித்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ‘வள்ளுவர் படம் என் தந்தையால் 12 ஆண்டுகள் முயற்சி செய்து மேம்படுத்தப்பட்டு வரையப்பட்டது. 1959ல், இதை முதல் ஆளாகப் பார்த்து, வியந்து பாராட்டியவர் பாரதிதாசன். வள்ளுவர் கழுத்தில் கிடந்த பருத்தி நுால் சரடைப் பார்த்து, ‘வள்ளுவனே ஓர் இலக்கணம்; அவனுக்கு எதுக்கு புது இலக்கணம்? அதனை அகற்றி விடுங்கள்’ எந்று, அப்பாவிடம் தெரிவித்தார். அதை மதித்து திருவள்ளுவர் கழுத்தில் இருந்த பருத்தி நுால் சரடை, அப்பா நீக்கினார். அதற்கான ஒலி நாடா என்னிடம் இருக்கிறது. 1964ல் முதல்வர் பக்தவத்சலம், அப்பா வரைந்த வள்ளுவர் ஓவியத்தை சட்டசபையில் திறந்து வைத்தார். 1967ல் முதல்வரான அண்ணாதுரை, அரசு அலுவலகங்களில் அந்த ஓவியத்தை வைக்க அரசாணை வெளியிட்டார். உண்மை இப்படி இருக்கையில், சம்பந்தமே இல்லாமல் கருணாநிதியை இந்த விஷயத்தில் திருமாவளவன் ஏன் இழுத்துவிடுகிறார் என தெரியவில்லை. இதே கருத்தை காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னபோது, அவருக்கு இதனைப் புரியவைத்தேன். அவர் உடனே வருத்தம் தெரிவித்தார்’ என்று கூறியுள்ளார் ஓவியர் சர்மாவின் மகன் விநாயக் வே ஸ்ரீராம்.