பிரிட்டன் எம்.பிக்களின் பேச்சுகள்

பிரிட்டனின் அனைத்து கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம், அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்தது. அதில், காஷ்மீரில் மனித உரிமைகள் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. அதில் பேசிய ஆசிய விவகாரங்களுக்கான அமைச்சர் அமாண்டா மில்லிங் ”காஷ்மீர் பிரச்னையை தீர்க்க பாரதம் பாகிஸ்தான் நாடுகள்தான் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும். இதில் பிரிட்டன் தீர்வு சொல்லக் கூடாது” என்றார். இதனை அடுத்து பேசிய பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி நாஸ் ஷா, பாரத அரசு, அதன் தலைவர்கள் குறித்து சில தவறான கருத்துகளைத் தெரிவித்தார்.

இஸ்லாமிய சக்திகள் காஷ்மீரில் இருந்து ஜனநாயகத்தை அகற்றும் என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன், ‘காஷ்மீர் பல பயங்கரவாத தாக்குதல்கள், கொலைகள், கட்டாய மதமாற்றங்களால் கறைபடுத்தப்பட்டுள்ளது. முஸ்லீம் ஆதிக்கம் கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில், மத சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

காஷ்மீர் சட்டபூர்வமாக பாரத குடியரசின் ஒருங்கிணைந்த பகுதி. எதார்த்தத்தை நீங்கள் உணர வேண்டும்.  ஜம்மு காஷ்மீர் பகுதி தலிபான்கள் ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தானாக இன்னும் மாறாததற்கு பாரத ராணுவத்தின் சீரிய முயற்சிதான் காரணம்’ என தெரிவித்தார். பாகிஸ்தான் வம்சாவளி எம்.பியின் கருத்துக்கு பாரத வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.