சி. பி. ராமசாமி ஐயர்

சேத்துப்பட்டு பட்டாபிராம இராம சுவாமி ஐயர் என்ற  சி. பி. ராமசாமி ஐயர், வழக்கறிஞர், அரசியல்வாதி, ஆளுநர் என தேசப் பணியினை செய்தவர். சி.பி.ராமஸ்வாமி ஐயரின் மூதாதையர்கள் தமிழ்நாட்டின் வட ஆற்காட்டில் சேத்துப்பட்டு என்ற ஊரில் பிறந்தவர்.

தன் தந்தையின் விருப்பப்படி 1903ல், வழக்கறிஞரானார் சி. பி. ராமசாமி ஐயர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார், ஆனால் அவர் அதை நிராகரித்தார். 1920ல், அவர் மெட்ராஸின் அட்வகேட் ஜெனரலானார். அன்னி பெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் லீக் இயக்கத்தை ஏற்பாடு செய்ததுடன் அதன் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

1917ல், இந்திய தேசிய காங்கிரசின் செயலாளரானார். 1929 முதல் 1932க்குள்ளாக ரூ. 67.5 மில்லியன் செலவில், மேட்டூர் அணை கட்டும் பணிகளை தொடங்கினார். பைகாரா ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்தால் கோவை தொழில் மயமாக்கலைத் தூண்டினார். முத்துலட்சுமி ரெட்டி முன்மொழிந்த தேவதாசி ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியலமைப்பை உருவாக்கினார்.

1931ல், சித்திர திருநாள் திருவாங்கூர் மகாராஜாவாகத் தடை செய்யப்பட்டபோது, இந்திய வைஸ்ராயுடன் பேசி, சித்திர திருநாளுக்கு முடிசூட்ட, இளம் மன்னரின் ஆலோசகராக சி. பி. ராமசாமி ஐயர் செயல்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வைஸ்ராய் ஒப்புக்கொள்ள, இளவரசரின் சட்ட, அரசியலமைப்பு ஆலோசகராக பணியாற்றினார். 1936ல் மகாராஜா சித்திர திருநாள் வேண்டுகோளின்படி, திருவாங்கூரின் திவானாக பத்து வருட காலத்திற்கு பணியாற்றினார்.

அங்கு திவானாக இருந்த காலத்தில், திருவாங்கூர் தொழில்துறை வளர்ச்சியில் வேகமாக முன்னேறியது. ஆலுவா நகரில் ஒரு தொழிற்சாலையை அமைக்க இந்திய அலுமினியம் நிறுவனம் அமைக்கப்பட்டது. பாரதத்தின் முதல் உர ஆலையான பேக்ட் நிறுவப்பட்டது.அனைத்து ஜாதி ஹிந்துக்களுக்கும் மாநிலத்தில் உள்ள ஹிந்து கோவில்களில் நுழையும் உரிமையை வழங்க ஏற்பாடு செய்தார். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றினார், ஒரே நேரத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராகப் பணியாற்றிய முதல் இந்தியர் ஆனார்.