தேவை மூன்றாவதில் முழு கவனம்

இந்த இதழ் வாசகர்கள் கையை சென்றடையும்போது ஊரடங்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் நுழையுமா நுழையாதா என்பது தெளிவாகியிருக்கும். ஆனால் ஊருக்குள் நுழைந்த தொற்று துடைத்தெறியப்பட்டிருக்குமா? முக கவசம் / தனிநபர் இடைவெளி / அடிக்கடி கை கழுவுதல் போன்ற அடிப்படை முன்னெச்சரிக்கை பழக்கங்கள் துளிகூட குறையாமல் மக்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதுதான் தொற்று மறுபடியும் ஊரில் தலை தூக்காமல் இருக்க வழி. அதில் சந்தேகம் இல்லை.

இதற்கிடையில், மூன்றாம் அலை பற்றிய பேச்சு வந்தது. அது குழந்தைகளையே பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் வீடுவீடாகத் தாய்மார்களுக்கு விழிப்புணர்வூட்டி, பயிற்சி கொடுத்து குழந்தைகளை தொற்றிலிருந்து காப்பாற்ற திட்டமிட்ட முயற்சிகள் பொறுப்பான சமூக சேவை அமைப்புகள் வாயிலாக நடைபெறத் தொடங்கியுள்ளன.

ஆனால் மருத்துவ நிபுணர்கள் சிலர் தொற்றை குழந்தைகள் சுலபமாக சமாளிப்பார்கள் என்பதால், பள்ளிக் கூடம் திறக்கும் போது தொடக்கப்பள்ளி வகுப்புகளை முதலில் திறக்கலாம் என்று சென்ற வாரம் யோசனை தெரிவித்தார்கள்.

பள்ளிக்கூடம் என்பது மீன் சந்தை போலவோ கடைவீதி போலவோ நெரிசலான இடம் அல்ல, அதனால் அங்கே தொற்று பாதிக்கும் வாய்ப்பு குறைவுதான் என்று சிலர் சொல்கிறார்கள். முதல் அலையும் இரண்டாவது அலையும் தேசத்தை தாக்கிய காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டில் தானே இருந்தார்கள் என்று வாதிடுகிறார்கள்.

பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள் மற்ற குழந்தைகளிடமிருந்து தொற்றைப் பெற்று வருவார்களே? அதனால் வீடு பெரிதாக பாதிக்கப்படுமே? வீட்டில் மற்ற எல்லோருக்கும் 2 தடுப்பூசிகள் போட்டிருந்தால் தான் பாதுகாப்பு. இல்லையென்றால் தொற்று ஆபத்து வாசல்படி தாண்டி உள்ளே வரத்தானே செய்யும்?

ஆகஸ்டில் அரசு அறிவிக்கக்கூடிய தளர்வின் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறந்தாலும் கூட தொடக்கப் பள்ளி வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் தீர்க்கமாக யோசித்து செயல்படுவது அவசியம்.