ஆடி மாதத்தில் பாடி வரவேற்போம்

‘‘ஆடிப்பட்டம் தேடி விதையப்பா, விளைச்சல் எல்லாம் கூடிவரும் அப்பா’’ என்று விவசாயிகள் ஆடிப்பாடி மகிழும் மாதம் ஆடி. முன்னோர்கள் கூறிய இந்தப் பழமொழி அறிவியலோடு சம்பந்தப்பட்டது. ஒரு பயிரின் விளைச்சலுக்கு, நல்ல வளமான மண், நீர், தரமான விதைகள் போன்றவை கண்டிப்பாகத் தேவை தானே? இந்த மாதத்தில் விட்டு விட்டுப் பெய்யும் மழையானது, காய்கறிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். மழைக் காலத்தில் பனிப்பொழிவு இல்லாததால், பயிர்களைத் தாக்கும் நோய்களும் மிகக் குறைவு. அதனால் பயிர்ப் பாதுகாப்பு செலவுகளும் அதிகம் இருக்காது. ஆடி மாதம் இந்த மண்ணுக்கும் விதைகளுக்குமான வரம் என்கின்றனர் விவசாயிகள்.
‘‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்று நம் நாட்டிற்கு உழவர்களே அச்சாணியாக விளங்குகின்றனர். “சித்திரைப்பட்டம்” என சித்திரை மாதத்தில், ஏர் பூட்டி, நல்லேறு உழுவார்கள். அடுத்தது, ஆடிப்பட்டத்தில் தேடித் தேடி விதைப்பார்கள். பின்வரும் தைப் பட்டத்தில் வயலின் அறுவடை முடிந்த சமயமாதலால் எள்ளு, கொள்ளு போன்றவைகளை விதைப்பார்கள். இந்த ஆடி மாதம் மங்களகரமான மாதம். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என கடுமையான வெப்ப நாட்கள் முடிந்து சற்றே குளிர்க்காற்றுடன் ஓரளவு பருவமழையும் பெய்யக்கூடிய மாதமாக ஆடி விளங்குகிறது. அப்போது மண் இளகுவதால், மண்புழுக்களும் நத்தைகளும் சர்வ சகஜமாக ஈரப்பதமான மண்ணில், சாரை சாரையாய்த் துள்ளி ஓடும். நத்தைகள் மொத்தை மொத்தையாய் சபக் சபக் என நடந்தால் நம் கால்களிலேயே ஒட்டிக்கொள்ளும். இவைகளே மண் செழிக்கக்காரணமாக அமையும். ஆடு, மாடு போன்ற மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளும் தன் பங்கிற்கு வயலில் தன் கழிவுகளை அந்நிலங்களில் சேர்க்கும்.
ஆடி மாதத்தில் சூரியன் பூமியை நோக்கி மிக அருகில் இருக்கும். இந்த மாதத்தில் உண்டாகும் கரையான்களால் மண்ணும் அரிக்கப்பட்டு மென்மையாகும். வயலில் பாம்புகள் பெருகும். அதனால் எலிகள் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். “ஆடி அடைச்சாரல்” என்று திருக்குற்றாலத்தில் மூலிகை நீரில் நனைய, மக்கள் தொடர்ந்து செல்லுவார்கள். மலையிலிருந்து வரும் மூலிகை நீரில் நீராடுவது ஒரு சுகமான அனுபவம். புது மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என அறுசுவை உண்டியோடு கொடுத்து மகிழ்வார்கள். ஆடி மாதம் அம்மன் கோயில்களிலும், அவரவர் வீட்டு வழக்கப்படி அரிசி மாவில் வெல்லம் சேர்த்து பிசைந்து நெய் திரியிட்டும் அம்மனுக்கு மாவிளக்கு போடுவார்கள். அம்மன் கோயில்களில் ஆடிக்கூழும், ஜாதி மத பேதம் பாராமல் அனைத்து வழிபோக்கர்களுக்கும் ஊற்றுவார்கள். ஹிந்துக்கள் ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்து அவர்களை குளிர்விப்பார்கள். ஆடி செவ்வாயன்று சுமங்கலிகளை அழைத்து வெற்றிலை, பாக்கு, பழங்கள், ரவிக்கை துணி கொடுத்து அவர்களை அம்பிகையாகவே பாவித்து உபசரிப்பார்கள்.
ஆடிப்பெருக்கை தமிழர்கள் மாபெரும் விழாவாகவே கொண்டாடி மகிழ்வார்கள். நதிகளைப் பெண்ணாக போற்றி வணங்கும் நம் நாட்டில், நீர்நிலைகளில் தண்ணீர்வரத்து அதிகமாக இந்த காவிரி அன்னை கருவுற்று இருப்பதாகப் போற்றி அவளை வணங்கி மக்கள் நதிகளில் வாழை இலையில் கருகமணி, காசோலை, காசு, புத்தாடை, சர்க்கரைப் பொங்கல் வைத்து ஆற்றில் விட்டு வணங்குவார்கள். இந்த நாளில் நாம் செய்யும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பெருகும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.
சக்தியே பலம் மிக்கவளாக இருப்பதால் அவளின் வல்லமையை அதிகரித்துக் காட்டவே ஆடி மாதம் முழுதும் அம்பிகையை வழிபடுகிறோம். ஆடி முதல் தேதி, ஆடிப்பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிக்கிருத்திகை போன்ற திருநாட்கள் இம்மாதத்தில் சிறப்பானவை. அம்பிகை ஈசனின் ஆணைப்படி ஊசிமுனையில் தவம் செய்து, ஆடி மாதம் உத்திராடநட்சத்திரத்தன்று ஹரியும் சிவனும் இணைந்த சங்கரநாராயணர் சங்கரன்கோயிலில் ஆடித்தபசு என்ற வைபவத்தில் காட்சியளிக்கிறார். 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இந்த ஆடித்தபசு விழா. அப்போது விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களை வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கன்னிப் பெண்களும் ஒளவையார் விரதம் என்ற ரகசியமான விரதம் இருப்பார்கள். இதற்கு ஆண்களை அனுமதிக்கமாட்டார்கள். ஒரு சொம்பில் வைக்கோல், புங்க இலை, புளிய இலைகளைப்பரப்பி, அதன்மேல் தேங்காய் வைத்து ஒளவையாரை அஷ்டோத்திரம் செய்து பூஜிப்பார்கள்.
ஜமதக்கினி முனிவர் தலையை கார்த்தவீர்யார்ஜுனன் கொய்ய, அவருடன் உடன்கட்டை ஏறிய அவரது கற்புக்கரசியான மனைவி ரேணுகாதேவியை இந்திரன் மழை பெய்வித்துக் காப்பாற்ற, தேவி தீக்காயங்களால் வெற்றுடல் ஆனாள். அதனால் அருகிலிருந்த வேப்பிலைக்கொத்துக்களை ஆடையாக அணிந்தாள். கிராமவாசிகளிடம் பச்சரிசி, வெல்லம் கேட்டு கூழ் காய்ச்சி உண்டு, பசியாறினாள். மனம் குளிர்ந்த அவள், ‘ஆடி மாதத்தில் கூழ் ஊற்றி என்னை வழிபடுவோருக்கு எந்த நோயும் அணுகாது’ என்ற வரமும் அளித்தாள்.
ஆடிப்பூர நன்னாளில் தான் பூமாதேவி ஆண்டாளாக பூமியில் துளசி வனத்தில் பெரியாழ்வாருக்குக் குழந்தையாக கிடைத்தாள். உமாதேவியும் இந்த நாளில்தான் அவதரித்தாள். ஆடிப்பூரத்தன்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு சீமந்த விழா நடைபெறும். பின் வளையல்களை குழந்தை இல்லாத பெண்களுக்கு அணியக் கொடுப்பார்கள். திருவாரூர் கமலாம்பாள், மயிலை கற்பகாம்பாள், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை போன்ற அம்மன்களுக்கு அந்நாளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்வார்கள்.
ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆடி மாதத்தில் மஞ்சள் அபிஷேகம் என்ற நிகழ்ச்சி எற்பாடு செய்யப்படுகிறது. அன்று வேப்பிலை, மஞ்சள் நீர் நிரம்பிய குடத்தை தலை மீது வைத்து கொண்டு பெண்கள் ஊர்வலமாகச் செல்வார்கள். இப்படியொரு திருவிழா சென்னை, திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பிரபலமாகி வருகிறது. “ஆடிசெவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி” என்பார்கள். கிராமங்களில் பண்டரிபுரத்தில் ஆடிமாத ஏகாதசியை “ஆஷாட ஏகாதசி” என்று விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அன்று அவரை தரிசிக்க, “வாரி யாத்திரை” என இருபத்தோரு நாட்கள் யாத்திரை செய்து வருவார்கள்.
பக்தர்கள் ஞானேஸ்வர் மகராஜ் அவதரித்த ஆலந்தியிலிருந்து வெள்ளியால் ஆன அவரின் விக்கிரகத்தையும், தேகுவிலிருந்து துக்காராம் மகராஜ் விக்கிரகத்தையும், நாசிக்கிலிருந்து நாமதேவர் விக்கிரகத்தையும், பைதானிலிருந்து ஏகநாதர் விக்கிரகத்தையும், திரியம்பகேஸ்வரத்திலிருந்து நிவ்ருதிநாதர் விக்கிரகத்தையும், முக்தாபாய் நகரிலிருந்து முக்தாபாய் விக்கிரகத்தையும், ஸஸ்வாடியிலிருந்து ஷோபானுதேவர் விக்கிரகத்தையும், ஷேகானிலிருந்து கஜானன் மஹராஜ் விக்கிரகத்தையும், ஸ்வர்ண பாதுகை யையும், பல்லக்குகளில் சுமந்துகொண்டு, இருபத்தோரு நாட்கள் ஊர்வலமாய் பாத யாத்திரையாய்ப் பண்டரிபுரம் அடைந்து பண்டரிநாதனைக் கண்ணார தரிசிப்பார்கள்.
அவர்கள் எழுதிய அபங்கங்களை வாத்தியகோஷத்துடன் பக்தர்கள் பாடிக்கொண்டே வரும் காட்சி வைகுந்தமோ இது என்று மயிர்க்கூச்செரிய வைக்கும். அமர்நீதி நாயனார், கோட்புலி நாயனார், காரி நாயனார்.இவ்வாறாக ஆடி மாதம் அம்பிகையின் மாதமாகவும், பயிர்த்தொழிலுக்கேற்ற மாதமாகவும், ஆன்மிக மாதமாகவும் நம் வாழ்வில் வளம் சேர்க்கிறது.
கட்டுரையாளர் : ஹரிகதை வல்லுநர்