உறவை கொண்டாடும் ஆடிப்பெருக்கு

“ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிக உகந்த மாதம். ஆடிப்பெருக்கு அன்று கலந்த சாதம் செய்து எடுத்துக் கொண்டு எங்கள் கிருஷ்ணாபுரம் (கடையநல்லூர்) கிராம ஊருணிக் கரையில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வழக்கம் உள்ளது. சிறியவர்கள். பெரியவர்கள், – ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் பழகுவதற்கும் புது உறவுகளை ஏற்படுத்தவும் பழைய கசடான கசப்பு சம்பவங்களை மறந்து குதூகலம் ததும்பவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. வறுமை காரணமாக சில வீடுகளில் பல்வகை உணவு தயார் செய்யமுடியாத சூழல் இருக்கலாம். அவ்வகையோரை முதலில் எங்களோடு உட்கார வைத்து உணவு பரிமாறிக் கொள்வோம்.

இதனால் அவர்களின் மனதில் ஏக்கம் மறைந்து நம்பிக்கை கலந்த ஏற்ற எண்ணமும் மிகும்.பெண்கள் அம்மனை மட்டுமின்றி ஆற்றையும் தெய்வமாக எண்ணி வழிபட்டு மாங்கல்ய பலம் வேண்டுவோம். ஆறு பெண்பாலையே குறிக்கும். பாரம்பரியமிக்க இந்த ஆடிப்பெருக்கு ஒற்றுமையை வளர்ப்பதிலும் நம் ஆறுகளையும் இதர இயற்கை வளங்களையும் தெய்வமாக எண்ணி வழிபட்டு வருவதிலும் முதன்மையாக இருப்பதில் சந்தேகமே இல்லை.
– ராஜி ரமேஷ்