வெற்றி மட்டுமே இலக்கு

ஜூன் 1960: பெல்ஜியத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற உடனேயே அந்நாட்டின் பூர்வகுடி மக்களுக்கும், வெள்ளையர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. கடங்கா, தெற்கு கசாய் என்ற இரு இடங்களில் இருந்த வெள்ளையர்களைப் பாதுகாக்க வந்த பெல்ஜிய ராணுவம் கடங்காவைத் துண்டித்துத் தனி நாடாக அறிவித்தது. காங்கோ கோரியபடி வந்த ஐ.நா. அமைதிப் படையில் 3,000 பாரத ராணுவத்தினர் பாதுகாப்பு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.

நவம்பர் 24, 1961: பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் பிரச்சனை தீராததால், படைப் பலத்தைப் பயன்படுத்தி அப்பகுதியில் அமைதியை நிலை நாட்ட ஐநா பாதுகாப்பு சபை தீர்மானம் இயற்றியது. அதை எதிர்த்த கோர்க்கா ரைஃபில்ஸ் பிரிவின் மேஜர் அஜித் சிங், அவரது ஓட்டுனரையும் கொன்றனர். அங்கு பணிபுரிந்த ஐ.நா அமைதிப்படையின் பிரிவுகளை ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள இயலாதபடி தடையை ஏற்படுத்தினர். இதை எதிர்கொள்ள “உனோகாட் திட்டம்” தயாரானது.

டிசம்பர் 5, 1961: நடுப்பகலில் விமான நிலையப் பாதையில் உள்ள தடை மீது கேப்டன் சலாரியா தலைமையில் ஆல்பா குழுவினர் எதிரிகள் திரும்பிச் செல்ல முடியாதபடி தாக்குவதாகவும் திட்டமிடப்பட்டது. தடைக்கு மிக அருகில் (1.4 கி.மீ) சென்ற மிகச்சிறிய சலாரியாபடை ஏவுகணைகளை வீசி ஆயுத வாகனங்களை அழித்தது. எதிரி சுதாரிப்பதற்கு முன் அழித்துவிட நினைத்த சலாரியா, “தாக்குதலைக் தொடங்குகிறேன், நிச்சயம் வெல்வேன்” என்று படையினருக்குத் தகவல் கொடுத்து விட்டு ”கோர்கா வந்துவிட்டான்” என்ற போர் முழக்கத்துடன் களத்தில் குதித்தார். ”குக்ரி” என்ற குறு வாளால் எதிரிகளைக் குத்திக் கிழித்தார்.

கழுத்தில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையிலும் போரிட்டு 40 எதிரிகளைக் கொன்றார். நிலைகுலைந்த கடாங்கி பெல்ஜியப் படையினர் உயிரிழந்தோர், காயமுற்றோர் அனைவரையும் விட்டுவிட்டுப் பிழைத்தால் போதுமென்று தப்பி ஓடினர். வெற்றிக்கு மிக அருகில் சென்று விட்ட சலாரியா மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வீர மரணம் அடைந்தார். காங்கோவை அந்நிய நாடென்று கருதாமல் தாயகத்தைக் காப்பதுபோல் தன் உயிரைத் தந்து மீட்டெடுக்க உதவிய கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா வீரத்தை, துணிச்சலைப் போற்றி மத்திய அரசு பரம்வீர் சக்ரா விருது வழங்கிக் கௌரவித்தது.
– கரிகாலன்