அரசியல் நாடகங்கள்

கடந்த இரு தினங்களாக, அதிகமாக விவாதிக்கப்படும் விஷயம் ‘பா.ஜ.கவினரால் மமதா தாக்கப்பட்டார், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதி’ என்பதுதான்.

மமதா பேனர்ஜி, நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல் செய்த பின் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ‘தான் காரில் ஏறும்போது, தன்னை நான்கு அல்லது ஐந்து பேர் தாக்கினர். இதனால் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு காவல் பணியில் யாரும் இல்லை’ என்று கூறினார். ‘தேர்தலுக்காக, மக்களிடையே அனுதாபம் தேட முயற்சிக்கிறார் மமதா. அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது நாடகம். மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது’ என பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது. தேர்தல் கமிஷனும் இது குறித்து அறிக்கை கேட்டுள்ளது.

இந்நிலையில் ‘இச்சம்பவத்தை நேரில் கண்ட பல உள்ளூர்வாசிகள், மமதா பானர்ஜி கார் நகர்ந்து கொண்டிருந்தது, சாலையோரம் காத்திருந்த மக்களை பார்த்து பேச கதவைத் திறந்து வைத்திருந்தார். அப்போது, காரின் கதவு ஒரு தூணில் மோதியது, இதனால் கதவு வேகமாக மூடியது. இதனால் மமதாவின் காலில் அடிபட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்’ என்பதாக ‘டி.வி 9 பாரத் வர்ஷ்’ என்ற தொலைகாட்சி தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க முதல்வரான மமதாவுக்கு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறைக்கும் அமைச்சரான இவரின் பாதுகாப்பிற்காக அங்கு 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதை எல்லாம் மீறி அவரை யாரும் தாக்கியிருக்க முடியாது. அப்படி யாராவது தாக்கியிருந்தால், ஊடக பார்வையில் இருந்து அவர்கள் தப்பியிருக்க முடியாது. அவர்கள் இந்த நேரம் பிடிபட்டிருப்பார்கள் என்பது நிதர்சனம். தேர்தல் தோல்வி பயம் காரணமாக, அனுதாப ஓட்டுகளைப்பெற இப்படி ஒரு நாடகத்தை மமதா நடத்த சாத்தியக்கூறு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி ‘இதேபோல பல வருடங்களுக்கு முன்பு, விமான நிலையத்தில் ஸ்டாலினை ஒருவர் கத்தியால் குத்த முயன்றது, அதை காரணம் காட்டி ஸ்டாலினுக்கு ‘இசட் பிரிவு’ பாதுகாப்பு வழங்க கருணாநிதி கோரிக்கை வைத்தது, குத்த முயன்ற அந்த மாயாவி இன்றுவரை பிடிபடாதது’ குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.