மராத்தா இடஒதுக்கீடு செல்லாது

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தச் சட்டம் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு தீர்ப்பு கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க கோரி மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு கடந்த 2018ல் கொண்டு வந்தது.  இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர். மும்பை உயர் நீதிமன்றம், இட ஒதுக்கீடு வழங்குவதை தடை செய்யவில்லை. ஆனால் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது. ஆனால், அவர்களுக்கு கல்வியில் 12 சதவீத இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் 13 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மராத்தாக்கள் கல்வியிலேயோ பொருளாதாரத்திலேயோ பின்தங்கிய சமூகத்தினர் அல்ல. மராத்தாக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசியல் சட்டத்திற்கு முரணானது. எனவே அந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு, துரதிருஷ்டவசமானது, ஏமாற்றம் அளிக்கிறது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.