சுவடிகளைத் தேடி

ஓலைச்சுவடியோடு அழிந்து போயிருக்க வேண்டிய பல நூறு தமிழ் இலக்கியங்களை புத்தக வடிவாக்கி தமிழன்னைக்கு காணிக்கையாக்கியவர் தமிழ் தாத்தா உ.வே.சா. இவர் இலக்கிய சுவடி ஒன்றினை தேடி அலையும்போது புலவர் ஒருவரின் இல்லத்தில் இருக்க வாய்ப்புண்டு என்ற செய்தி அறிந்தார். உடனே அந்த ஊருக்குச் சென்று புலவரின் இல்லத்தைத் தேடி கண்டுபிடித்தார். அவரது உறவினரிடம் சென்று தான் வந்த நோக்கத்தை சொல்லி ஓலைச்சுவடிகளை பார்வைக்குத் தருமாறு வேண்டினார். அந்த உறவினருக்கு பெரும் கோபம். ”உங்களுக்கெல்லாம் எங்கள் வீட்டில் ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவதற்கென்று வைத்திருக்கின்ற சுவடிகளை கண்டால் பொறுக்காதே. அதெல்லாம் தரமுடியாது. வெளியேறுங்கள்” என்று கோபமாகப் பேசி அனுப்பிவிட்டார்.

இதுபோன்ற பல அனுபவங்களை சந்தித்திருந்த உ.வே.சா. அதற்கெல்லாம் மனங்கலங்காது அந்த ஊரிலே உள்ள கோயில் ஒன்றில் இரவு தங்கினார். விடிந்தால் ஆடிப்பெருக்கு. சம்பந்தப்பட்ட புலவரின் உறவினர் ஓலைச்சுவடிகளை எடுத்துக்கொண்டு ஆற்றில் விடுவதற்கு செல்லுகையில் அவருக்கே தெரியாமல் பின்தொடர்ந்து ஆற்றில் இறங்கி காத்திருந்தார். புலவரின் உறவினர் சுவடிகளை ஆற்றில் விட்டு மூழ்கி எழுவதற்குள் பாய்ந்து சென்று சுவடிகளை கைப்பற்றி கரையேறினார். இப்படி பல்வேறு கஷ்டங்கள் ஏச்சு அவமரியாதை, எல்லாவற்றையும் சந்தித்து அளப்பரிய செயல்களை செய்து முடித்தார். தமிழன்னையின் வெளிவராத பல நூல்களை வெளிக்கொணரும் லட்சியம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தனது பாதையில் வெற்றி கண்டவர் நமது தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாதய்யர்.