ரஜோரியை மீட்ட மாவீரன்

ஏப்ரல் 8, 1948 . . .
பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானுடன் 1947 அக்டோபரில் ஆரம்பித்த போர் 7 மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த சூழல்.
மார்ச் மாத கடைசியில் ரஜோரியைக் கைப்பற்றிய பாகிஸ்தானிய, பத்தானியப் படை தொடர்ந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டது. மேலும் நம் ராணுவம் நெருங்க முடியாத அளவு வழிநெடுக கண்ணிவெடிகளைப் புதைத்திருந்தது. அவற்றை அப்புறப்படுத்தி முன்னேறினால்தான் ரஜோரியை மீட்க முடியும். இரண்டாம் நிலை லெஃப்டினண்ட் ராமா ரகோபா ரானே தலைமையிலான படைக் குழு ஏப்ரல் 8 காலை நௌஷேரா – ரஜோரி சாலையில் 26 வது மைல் தொலைவில் தடைகளை அகற்றத் தொடங்கியது.
சற்று நேரத்திலேயே சிறு பீரங்கிகள், துப்பாக்கிகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் நமது இரு வீரர்கள் உயிரிழந்தனர், ரானே உட்பட மூவருக்குப் படுகாயம். எதையும் பொருட்படுத்தாமல் நம் ராணுவ பீரங்கியின் பின்னே பதுங்கித் தமது வேலையைத் தொடர்ந்தனர் நம் வீரர்கள்.
சில நாட்களில் அதிகாலை 4.45 முதலும், இரவு 10 மணி வரையிலும் தொடர்ந்து நான்கு நாட்கள் எதிரிகளின் குண்டு மழைக்கு நடுவே கண்ணி வெடிகளை அகற்றி, மரங்களை அழித்து, வழிகளைச் செப்பனிட்டு, பாறைகளைத் தகர்த்து, புதிய பாதைகளை உருவாக்கினார் ரானே. ஏப்ரல் 12ம் தேதி ரஜோரி மீண்டது.
தமது உயிரைத் துச்சமென மதித்து ரஜோரி மீட்புக்கு அடிகோலிய மேஜர் ராமா ரகோபா ரானேவின் மனத் திடத்தைப் பாராட்டி நமது அரசு 1948ம் ஆண்டு பரம்வீர் சக்ரா விருது வழங்கிக் கௌரவித்தது.
– கரிகாலன்