அயோத்தி ராமரை 2023ல் தரிசிக்கலாம்

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்களுடனான இரண்டு நாள் சந்திப்புக்குப் பின்னர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், வெளியிட்ட அறிவிப்பில், ‘அயோத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஸ்ரீராமர் கோயில் பணிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரும் 2023ம் ஆண்டு இறுதியில் மக்கள் ஸ்ரீராமரை கோயிலுக்குள் சென்று தரிசிக்கலாம். எனினும் முழுமையான கட்டுமானங்கள் வரும் 2025ம் ஆண்டில்தான் முடிவடையும்’ என தெரிவித்தார்.

முன்னதாக, கோயில் கட்டுமானம் மேற்கொள்ள உள்ள இடத்தின் கீழ் நீரோட்டத்தை பொறியாளர்கள் கண்டுபிடித்ததை அடுத்து இந்த ஆண்டு ஜனவரியில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தற்போது, ​​கோயிலின் அஸ்திவாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது செப்டம்பர் 15க்குள் முடிக்கப்பட வாய்ப்புள்ளது.

தீபாவளிக்குப் பிறகு இந்த ஆண்டு நவம்பரில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்படும். உத்தர பிரதேசம் மிர்சாபூர் மற்றும் ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து மணல் கற்கள், ராஜஸ்தானின் மக்ரானாவிலிருந்து பளிங்கு கற்கள், ராஜஸ்தானின் பன்சி பஹார்பூரில் இருந்து இளஞ்சிவப்பு கற்கள் ஆகியவை கோயில் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.