இந்திய துறைமுகச் சட்டம் பழையன கழித்தலும், புதிய புகுத்தலும்

மத்திய அரசு, 1908ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய துறைமுகச் சட்டம் (Indian Ports Act) என்பதற்குப் பதிலாக,புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சட்டத்தின் பெயர் மாறவில்லை; ஆனால் 2021ம் ஆண்டுக்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே இந்தச் சட்டம் எவ்வளவு ஆண்டுகள் கழித்து தூசி தட்டப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்திய துறைமுகச் சட்டம் 1908ம் ஆண்டு கொண்டு வரப்பட்டபோது, இன்றைய மாநிலங்கள் எதுவுமில்லை. நாடு விடுதலை அடைந்த பிறகு, ஒவ்வொரு கடலோர மாநிலமும் கடல்சார் கழகங்களை (State Maritime Boards) அமைக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தியது.

1963ல் குஜராத், 1964ல் மஹாராஷ்டிரம் என ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு ஆண்டுகளில் கடல்சார் கழகங்களை உருவாக்கின. கோவாவும், ஒடிஸாவும் இன்றுவரை இத்தகைய அமைப்பை ஏற்படுத்தவில்லை.பழைய சட்டத்தின்படி ஓர் அரசாணை வெளியிடப்பட்டிருந்தால் அதனை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. 1963ல் வந்த ஆணை என்றால் அது குஜராத்துக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற மாநிலங்களுக்குப் பொருந்தாது. 1964ல் வந்திருந்தால் அது குஜராத், மஹாராஷ்டிரா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்குப் பொருந்தும்; ஏனைய மாநிலங்களுக்குப் பொருந்தாது. இத்தகைய சிக்கல்களைப் போக்குவது இந்தப் புதிய சட்டத்தின் தலையாய கடமை.

அடுத்ததாக, ஐ.நா.சபை என்ற புதிய கூட்டாளியையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். துறைமுகங்கள் தொடர்பாக, பல்வேறு ஐ.நா. ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், அமல்படுத்தும் அதிகாரம் இல்லை. காரணம், சிறு துறைமுகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இதற்காக, கடலோர மாநில வளர்ச்சி கழகம் (Maritime States Development Council -– MSDC) என்ற அமைப்பை உருவாக்க புதிய சட்டம் வழி செய்கிறது.பழைய சட்டத்தில், நீராவி இயந்திரக் கப்பலைக் குறித்து மட்டுமே ஷரத்துகள் உள்ளன. இன்றைய நவீன கப்பல்களுக்கேற்றபடி இந்தச் சட்டத்தை மாற்ற முடியாத அளவிற்கு இதில் சிக்கல்கள் உள்ளன.

மேலும், தனியார் துறைமுகங்களைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. இதனையும் சரிசெய்ய வேண்டியது அவசியம். துறைமுகம் தொடர்பாக இரண்டு மாநிலங்களுக்குள் பிரச்சினை எழுந்தால் தீர்த்துக்கொள்ள அமைப்பு ரீதியாக வழியில்லை. நீதிமன்றத்துக்குத்தான் போகவேண்டும். இதையும் புதிய சட்டம் சரிசெய்கிறது.சரி, இந்தச் சட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகிறதா என்றால் இல்லவே இல்லை. மாறாக, அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது இருக்கும் சட்டத்தில் 69 பிரிவுகள் உள்ளன. அவை அப்படியே புதிய சட்டத்திலும் உள்ளன. கூடுதலாக, சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடலோர மாநிலங்கள் வளர்ச்சிக்குழு என்று ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதைத்தான், தமிழக முதல்வர் விமர்சிக்கிறார்.

இந்தக் குழு எந்தவகையிலும் மாநிலங்களின் துறைமுக நிர்வாகத்தில் தலையிட வழியில்லை. இதன் முக்கியப் பணி, இரண்டு துறைமுகங்களுக்கு இடையே பிரச்சினை வந்தால் தீர்த்து வைப்பது, உலக அளவில் துறைமுகம் சம்பந்தமாக பாரதம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களின்படி எல்லா துறைமுகங்களும் செயல்படுகின்றனவா என்று கண்காணிப்பது, புள்ளிவிவரங்களைத் திரட்டுவது, பகிர்ந்துகொள்வது, வளர்ச்சித் திட்டங்களைப் பரிந்துரை செய்வது, ஆய்வுகள் மேற்கொள்வது போன்றவற்றை மட்டும்தான் இந்தக் குழு செய்ய முடியும்.துறைமுக நிர்வாகம் முழுக்க முழுக்க மாநில அரசுகளிடம் மட்டுமே இருக்கும். சுருக்கமாகச் சொல்வதானால், ஒட்டுப்போட்ட சால்வைக்குப் பதிலாக, காலத்திற்கேற்ற புதிய சால்வையை இந்தச் சட்டம் தருகிறது.

அது மட்டுமல்லாமல், தனியார் துறைமுகங்களையும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கொடுத்து மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தையும் அளித்திருக்கிறது. பட்டினமருதூர், எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களைக் கண்காணிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.புதிய சட்டத்தின்படி, மாநில கடல்சார் கழங்கள் அனைத்தும் சிவில் நீதிமன்றங்களின் அதிகாரத்தைப் பெறுகின்றன. இதனால், சட்டப் பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாநில கடலோர வளர்ச்சி கழகமானது, மேல்முறையீட்டு நீதிமன்றமாக விளங்கும். சம்பந்தப்பட்ட அனைவரும் துறைசார் அனுபவம் உள்ளவர்கள் என்பதாலும், வேறெந்த வழக்குகளும் இந்த நீதிமன்றங்களுக்கு வராது என்பதாலும், விரைவாக தீர்ப்பு வரும் என்பது உறுதி.

இரண்டு மாநிலங்கள் அமைந்துள்ள துறைமுகங்களை உள்ளடக்கிய ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றால் இன்றைய காலகட்டத்தில் அது குதிரைக்கொம்பு. கடல்சார் மாநிலங்கள் வளர்ச்சிக் குழு இப்பணியை மேற்கொண்டு ஆய்வு செய்யலாம்; பரிந்துரை செய்யலாம்; அமல்படுத்தவும் செய்யலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இதற்காக பணி செய்வது கடல்சார் மாநிலங்கள் வளர்ச்சிக் குழு, பலனை அனுபவிப்பது துறைமுகங்களைக் கட்டுப்படுத்தும் மாநில அரசுகள். பழைய சட்டம் வழங்கிய அனைத்து அதிகாரங்களும் அப்படியே இருக்கின்றன. புதிய சட்டத்தால் கூடுதல் அதிகாரங்களும் கிடைக்கின்றன. நவீன உலகத்திற்கேற்ற புதிய சட்டமும் வருகிறது. இதில் வருத்தமடைய என்ன இருக்கிறது?
கட்டுரையாளர் : எழுத்தாளர், லாஜிஸ்டிக் வல்லுநர்