லட்சத்தீவு மர்மங்கள் தீவுக் கூட்டத்தில் தீமைகள் கூட்டம்?

இலங்கையில் 2019ல் ஈஸ்டர் திருவிழாவின்போது சர்ச்சுகளில் மனித வெடிகுண்டு வெடிப்பு நடத்திவிட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் லட்சத்தீவில் பதுங்கியதாகத் தகவல் கசிந்தது. அந்த பயங்கரவாதிகளுக்கு லட்சத்தீவு ஏன் பாதுகாப்பானதாகப் பட்டது? லட்சத்தீவில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த நூற்றாண்டுகள் பழமையான புத்தர் சிலைகள் அகத்தி தீவில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. (முன்பு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் பாமியான் புத்தர் சிலைகளை வேட்டுவைத்து சிதைத்தார்களே அதே போல) இந்த புத்தர் சிலைகளின் முகம் சிதைக்கப்பட்டு உள்ளன. (லட்சத்தீவில் மகாத்மா காந்தி சிலை கொண்டுவரப்பட்டபோது ’லட்சத்தீவு முஸ்லீம்கள் பகுதி, அங்கே விக்கிரகம் நுழையக் கூடாது’ என்பதற்காக வந்த கப்பலிலேயே திருப்பி அனுப்பினார்கள். இந்த அவமானம் மத்திய அரசில் காங்கிரஸ் தர்பார் நடந்தபோது நிகழ்ந்த சம்பவம். தொடர்ந்து லட்சத்தீவு தன்னை ஒரு மதப் பேட்டையாகவே காட்டிக் கொள்ளப் பார்க்கிறது என்பது தெளிவு). பாரத கப்பற்படை லட்சத்தீவுக் கூட்டங்களில் பல்வேறு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை நடத்தி வருகிறது. அது பற்றி பொதுவெளியில் விவாதிப்பது கூட அரிது. இந்திய பிரஜைகள் கூட பங்காரம் தீவில் உள்ள ரிசார்ட்டில் விடுமுறையை கழிப்பதற்கு தனி அனுமதி பெற்றாக வேண்டும் என்பது அங்குள்ள நிலை. இன்று லட்சத்தீவு தொடர்ந்து பாரதப் பிரதேசமாக இருக்கும்படி செய்ய பாரத அரசு எடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கூக்குரல்கள் கேரளத்திலிருந்து கிளம்புவதுதான் கூத்து. படியுங்கள்:

லட்சத்தீவுக்கு கேரளத்துடன் நெருங்கிய பிணைப்பு உள்ளது. 32 சதுர கி.மீ. பரப்பளவே உள்ள இந்த மிகச் சிறிய யூனியன் பிரதேசத்தில் வசிப்பவர்கள் சுமார் 70,000 பேர். இதில் 96% பேர் முஸ்லிம்கள். சுமார் 84 சதவீதம் பேர் பேசுவது மலையாளம்.சட்டசபை கிடையாது, ஆனால் லோக் சபாவுக்கு ஒரு எம்.பி.யை அனுப்புகிறது லட்சத்தீவு. இவர் பொதுவாக கேரளத்துக்காரராகவே இருக்கிறார். (தற்போது கரீம்).மத்திய அரசு நியமிக்கும் “நிர்வாகி” வழியாக நேரடியாக தில்லி ஆட்சி நடத்தி வருகிறது. அண்மையில் புதிய நிர்வாகியாகப் பொறுப்பேற்ற பிரபுல் கோடா பட்டேல் பல உத்தரவுகளைப் பிறப்பித்தார். சட்ட முன்வரைவுகள் அறிவிக்கப்பட்டன. நாட்டின் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது போல குண்டர்கள் வரைவு சட்டம் அறிவிக்கப்பட்டது. மிருகங்கள் பாதுகாப்பு சட்ட வரைவு அறிவிக்கப்பட்டது. பஞ்சாயத்து ஒழுங்காற்று வரைவு சட்டம் அறிவிக்கப்பட்டது.

லட்சத்தீவு மேம்பாட்டு ஆணையம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டது. தொடங்கிவிட்டது கொந்தளிப்பு கோஷ்டி ஒப்பாரி. “லட்சத்தீவின் அமைதியையும் கலாசாரத்தையும் குலைக்க பாஜகவின் சதி” என்று கூப்பாடு. குற்றங்கள் குறைவாக உள்ளனவே – எதற்கு இங்கே குண்டர் சட்டம் என்று ஒரு கேள்வி. உண்மைதான். இதற்கு முக்கிய காரணம், முஸ்லிம்களிடையே வழக்கத்தில் உள்ள மொஹல்லா கமிட்டி மூலமாக பல சச்சரவுகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. இந்த நடைமுறை எல்லா விதமான வழக்குகளுக்கும் எல்லா காலத்துக்கும் ஏற்றதுதானா? இப்போதே போதை மருந்து கடத்தல் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவது காவல்துறைக்கும் கடலோர காவல் படைக்கும் தெரிந்திருக்கிறது. மதுபானங்களை கடத்தி வரும் படகுகளும் பிடிபட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஏற்றி வந்த படகு பிடிபட்டது.

ஐந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விழிப்புணர்வுடன் செயல்பட்ட கடலோர காவல் படையினர் இவற்றைத் தடுத்து கைப்பற்றினர். சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் மறைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் 36 தீவுகளில் 9 காவல் நிலையங்கள் உள்ளன. மூன்று போலீஸ் எய்ட் போஸ்டுகள் உள்ளன. இன்றைய நிலை இப்படி. வருங்காலத்தில் தவறுகள் நடக்கக் கூடாது என்றும் முக்கிய சுற்றுலா மையமாக மேம்படுத்தப் போவதாலும் புதிய சட்ட விதிமுறைகள் ஏற்படுத்தப்படுகின்றன. சர்வதேச கடல் வழித்தடத்தில் லட்சத்தீவு இருப்பதும் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.

லட்சத்தீவில் இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் பிரிவு உள்ள பஞ்சாயத்து ஒழுங்காற்று சட்ட வரைவும் பாஜக எதிர்ப்பாளர்களின் ஆட்சேபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போதுள்ள எவருக்கும் இதனால் பதவி இழப்பு நேராது, புதிய தேர்தலுக்குப் பிறகே இது நடைமுறைக்கு வருவதாக உள்ளது. லட்சத்தீவு பஞ்சாயத்து ஒழுங்காற்று சட்ட வரைவில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் எண்ணிக்கையைப் பொறுத்து, உள்ளாட்சி அமைப்புகளின் வேட்பாளர்கள் தகுதி நிர்ணய விதிமுறைகள் ஏற்கனவே கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட் மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என்று அந்த மாநிலங்களில் யாரும் இந்தப் பிரிவு தொடர்பாக கூப்பாடு போடவில்லையே?

லட்சத்தீவு கலாசாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் விரோதமாக புதிய நிர்வாகி அங்கு சாராயம் ஆறாக ஓடுவதற்கு வழி செய்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு. சுற்றுலா பயணிகள் வந்து தங்கும் ரிசார்ட்டுகள் லட்சத்தீவில் உள்ளன. பங்காரம் என்ற தீவில் ரிசார்ட்டுகளில் சுற்றுலா பயணிகளுக்காக மட்டும் ஏற்கனவே மதுபானங்கள் கிடைக்கிறது. சுற்றுலா மேம்பாட்டின் ஒரு பகுதியாக வேறு சில தீவுகளிலும், அதிலும், ரிசார்ட்டுகளில் மட்டும், சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் கிடைக்கச் செய்ய எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதுபானம் இஸ்லாத்துக்கு விரோதமானது, அதை அனுமதிக்கக் கூடாது என்று கூப்பாடு போடுகிற கும்பலில் கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் உண்டு. முதல்வர் பிணராயி விஜயனும் தனிக்குரல் கொடுக்கிறார். மதுபானக் குப்பிகள் கடத்திவரும் படகுகள் சிக்கினவே? அதற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்கள்?

தமிழ்நாட்டில் டாஸ்மாக் போல, கேரளத்தில் பெவரேஜஸ் கார்ப்பரேஷன் மது விற்பனை செய்து கஜானாவுக்குப் பெருந்தொகை கொய்து தருகிறது. பெவரேஜஸ் கார்ப்பரேஷனுக்கு ஸ்மார்ட்போன் செயலியே இருக்கிறது. அதன் வழி லட்சக்கணக்கான பேர் பதிவு செய்து மதுபானம் வாங்கி வருகிறார்கள். அதாவது, கேரளத்தில் மதுபானம் வேண்டும். ஆனால் லட்சத்தீவின் “கலாசாரம்” கெட்டுவிடக் கூடாது. அதனால் லட்சத்தீவில் மது கூடாது – இது முற்றிலும் மதரீதியான நோக்கம் கொண்ட எதிர்ப்பு. லட்சத்தீவில் பெரும்பான்மையாகவும் தேசத்தின் பிற இடங்களில் சிறுபான்மையாகவும் உள்ளவர்களைத் “திருப்திப்படுத்துவது” இந்த எதிர்ப்பின் நோக்கம்.
மதுக் கொள்கை என்றால் ஏதோ விஸ்கி, பிராந்தி வகைகளுக்கு மட்டுமல்ல. மார்க்சிஸ்ட் கட்சி உள்பட இவர்களின் மதுக் கொள்கை என்ன? மற்ற தொழிற்சங்கங்கள் போல கள்ளு இறக்குவோருக்கும் கேரளத்தில் யூனியன்கள் உண்டு. அவற்றுக்கு மார்க்சிஸ்ட் கட்சி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு யூனியன்களுடன் இணைப்பும் உண்டு என்பதே உண்மை. இதுதான் கேரள அரசியல் கட்சிகளின் மதுக்கொள்கை. லட்சத்தீவின் மதுக் கொள்கையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடைய நிலைப்பாடு முழுக்க முழுக்க மத அடிப்படையிலானது. முஸ்லிம்களைக் குதூகலப்படுத்தவே லட்சத்தீவில் மதுவிலக்கு கோரப்படுகிறது.

சுற்றுலா, பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரியில் 26 தீவுகளில் மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இவற்றில் 16 தீவுகள் அந்தமான் நிக்கோபாரில் உள்ளவை. பத்து தீவுகள் லட்சத்தீவைச் சேர்ந்தவை. எனவே, லட்சத்தீவையும் அதன் பெரும்பான்மை முஸ்லிம்களையும் குறிவைத்து பாஜக தீவிரமாகச் செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டுக்கு அடிப்படையே இல்லை.நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட வரைவு உத்தரவுகளை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சட்டம் இன்னும் வரைவு வடிவில்தான் உள்ளது, அதைத் தடை செய்யவோ ரத்து செய்யவோ அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. குண்டர் சட்டம், மிருகங்கள் பாதுகாப்பு சட்டம், பஞ்சாயத்து ஒழுங்காற்று சட்டம் இவை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளன. லட்சத்தீவின் பொதுவான மேம்பாட்டை உத்தேசித்து எடுத்த சில முடிவுகளுக்கு மதச்சாயம் பூசும் முயற்சி நடக்கிறது என்பது வெளிப்படை.
-டி.சஜீவன்