சைபர் தாக்குதல் எச்சரிக்கை

சமூக வலைதளங்கள் பயன்பாட்டில் முன்னிலையில் உள்ள பாரதத்தில், முகநூலை 41 கோடி பேர், வாட்ஸப் செயலியை சுமார் 53 கோடி பேர், இன்ஸ்டாகிராம் செயலியை, 21 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் முகநூலில் உள்ள பாரதத்தை சேர்ந்தவர்கள் 61 லட்சம் பேர் உட்பட உலகம் முழுவதும் 45 கோடி பேருக்கும் அதிகமானோரின் தனிபட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன என செய்திகள் வருகின்றன. ஆனால், இது, 2019ல் நடைபெற்ற சம்பவம். பழைய தகவல்களே திருடப்பட்டன. அது அந்த ஆண்டே சரி செய்யப்பட்டு விட்டது’ என முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையதள தாக்குதல்களில் இருந்து பாரதத்தை சேர்ந்தவர்களின் தகவல்களை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள ‘செர்ட்இன்’ என்ற அமைப்பு, சமூக வலைத்தளங்களில் நடக்கும் இணையதளத் தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்து, அரசுக்கும், மக்களுக்கும் அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கிறது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் ‘டேட்டா ஸ்கிராப்பிங்’ தொழில்நுட்பத்தைக் கொண்டு சமூக வலைத்தளங்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளன. பயனாளிகளின், ‘இ – மெயில்’ முகவரி, அவர்களது முழு பெயர், தொலைபேசி எண், பிறந்த தேதி, பணியாற்றும் இடம் போன்ற தகவல்கள் திருடப்பட்டுள்ளன. ஒருவரது தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதுபோன்று தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதை தடுக்க, உங்களது முகநூல் கணக்கில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நம் தகவல்களை யார் பார்க்கலாம் என்பதை நாம்தான் நிர்ணயிக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளது.