வளி, ஒளி வழியே மின் உற்பத்தியின் இலவச இணைப்பு – வேலைவாய்ப்பு மூன்று லட்சம் 

தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. புவி சூடேற்றம் உக்கிரமாகிக்கொண்டே இருக்கிறது. பருவ நிலை மாற்றத்தால் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்தி சரிந்து வருகிறது. மக்கள் தொகை அதிகரித்து வருவதால் உணவுப் பஞ்சம் அச்சுறுத்துகிறது.

கடல் மட்டம் ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது. கடல் சீற்றத்தால் பல தீவுகள் மூழ்கிவிட்டன. தமிழ்நாட்டிலும் கூட கடலோர கிராமங்கள் சில, பாதிப்புக்கு இலக்காகியுள்ளன.

இத்தகைய சூழலில் நம்பிக்கை தரும் வெளிச்சக்கீற்றாக புதுப்பிக்க வல்ல எரிசக்தி துறை வளர்ந்தோங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பற்ற மாற்று எரிசக்தித் துறையில் சமீப காலமாக பாரதம் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றம் உலகுக்கே முன்னேடியாக இருக்கிறது. மாற்று எரிசக்தி துறையில் அமெரிக்காவுடனும் சீனாவுடனும் பாரதம் போட்டி போட்டு வருகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் அமெரிக்காவின் பங்களிப்பு 100 ஜிகாவாட்டை தொட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பை உருவாக்க அமெரிக்காவுக்கு பல ஆண்டுகள் பிடித்தன. இந்தியாவில் மாற்று எரிசக்தி உற்பத்தி இலக்கு, 175 ஜிகாவாட் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்குள் சோலார் எனர்ஜி எனப்படும் ஒளி மின் உற்பத்தி, விண்ட் எனப்படும் வளி மின் உற்பத்தி ஆகியவை 175 ஜிகாவாட்டை எட்டுவதன் மூலம் சர்வதேச அளவில் பாரதம் முதன்மை பெறும் என்பது திண்ணம்.

மாற்று எரிசக்தி துறையில் 2020 ம் ஆண்டுக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது என்று பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். கடந்தாண்டில் மட்டும் புதிதாக 21,000 வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்பதையும் இத்துறையில் மஹாராஷ்ட்ரா, குஜராத், உத்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கணிசமான வேலைவாய்ப்பு புதிதாக உருவாகும், என்பதையும் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

புதுப்பிக்க வல்ல எரிசக்தியின் பிரதான சிறப்பம்சம், இதனால் சுற்றுசூழலுக்கு சற்றும் கேடு ஏற்படுவதில்லை என்பதுதான். மேலும், அனல் மின்சாரம், புனல் மின்சாரம் போன்றவற்றை விட இவற்றை  குறைந்த விலையில் உற்பத்தி செய்வது சாத்தியமே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.