கணக்கா இருக்கணும்!

ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்களுக்கான (க்ஷேத்ர பிரச்சாரகர்கள்) ஒரு கூட்டம் கன்யாகுமரி விவேகானந்தாபுரத்தில் 1972ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவராக இருந்த ஸ்ரீ குருஜி கோல்வல்கரும் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தின் ஏற்பாடுகள் பொறுப்பு சூரிஜியிடம் (சஹ க்ஷேத்ர பிரச்சாரக்) ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கூட்டம் முடிந்த பிறகு அதற்கான வரவு செலவு கணக்கை ஸ்ரீ குருஜியின் உதவியாளரான ஆபாஜியிடம் சூரிஜி ஒப்படைத்தார். கணக்கு  துல்லியமாக இருந்தது. ஆபாஜி அந்தத் தொகையை சூரிஜியிடம் கொடுக்கும்போது, மீதி தரவேண்டிய ஐந்து பைசா குறைவாக இருந்தது. சூரிஜி அதற்கென்ன பரவாயில்லை என்று கூறிவிட்டார். இந்த விவரம் பற்றி ஆபாஜியிடம் ஸ்ரீ குருஜி கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அடுத்த மாதம் (1972 மார்ச்) நாகபுரியில் அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சூரிஜியும் கலந்து கொண்டார்.

ஸ்ரீ குருஜி கூட்டத்திற்கு வந்து தனது ஆசனத்தில் உட்கார்ந்தார். சூரிஜியைப் பார்த்ததும் தன்னுடைய குர்தா பைக்குள் கையை விட்டார். பிறகு மூடிய தன்னுடைய கையை சூரிஜியிடம் நீட்டினார். சூரிஜியும் அதை அப்படியே வாங்கி சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டார்.

கூட்டம் முடிந்த பிறகு சிலர் சூரிஜியிடம் சென்று, ஸ்ரீ குருஜி உங்களுக்கு என்ன கொடுத்தார்?” என்று கேட்டனர். சூரிஜி சட்டைப் பையிலிருந்து ஐந்து பைசாவை எடுத்துக்காட்டி, இதுதான் குருஜி கொடுத்தது” என்றார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்போது சூரிஜி நடந்த விவரத்தைக் கூறினார்.

ஸ்ரீ குருஜி ஒரு பெரிய இயக்கத்தின் அகில பாரத தலைவராக இருந்தபோதும்
ஐந்து பைசா கணக்கைத் தீர்ப்பதில் கவனமாய் இருந்தார். இதுதான் ஸ்ரீ குருஜி.

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்