வங்கிகள் இணைப்பு யார் யார் எதிர்ப்பு – வேம்படியான்

வங்கிகள் இணைப்பை எதிர்ப்பவர்கள் யார் யார்? பணியாளர்கள், அலுவலர்கள் போன்றவர்கள் எதிர்ப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் இடதுசாரிகள் என்று சொல்லிக்கொள்பவை. (நெருங்கிப் பார்த்தால் புரியும் இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் வாழ்க்கை முறை பெருமுதலாளிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று). அலுவலர் சங்கங்கள் நிலையோ இன்னும் வேடிக்கையானது.

இவர்களைத்தவிர கண்ணுக்குத் தெரியாத திரைமறைவில் இயங்கும் சில எதிர்ப்பாளர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்.

யார் அவர்கள்? இவர்கள் பலவித அடையாளங்களுடன் வருவார்கள்.

நிதி மேலாண்மையாளர்கள், பொருளாதார பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், முன்னாள் வங்கி (ரிசர்வ் வங்கி உள்ளிட்ட )அதிகாரிகள், நிதிதுறை / தொழிற்துறை போன்றவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பட்டயக் கணக்காளர்கள் (சார்ட்டர்ட அக்கௌன்டன்ட்டுகள் – சி ஏக்கள் ) என்று ஒரு பெரும் பட்டாளமே உண்டு.

இவர்கள் எல்லாம் பல கார்பரேட்டு நிறுவனங்களிடம் இருந்தும் அரசுத்துறைகளிடம் இருந்தும் டெபாசிட் வாங்கி கொடுப்பதற்கும், சாமானியர்களுக்கு கிடைக்ககூடியதைவிட அதிக வட்டி பெற்றுத் தருவதற்கும் வழி செய்து கொடுப்பவர்கள். அதை போலவே, குறைந்த வட்டியில் கடன் வசதி ஏற்படுத்தி தருபவர்கள்.  இவர்கள் தங்கள் நலத்திற்காக ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு டெபாசிட்டை மாற்றி கொடுப்பார்கள். இரண்டு பக்கமும் கமிஷன் உண்டு(அவர்கள் என்னபொதுச் சேவையா செய்கிறார்கள்?). கவுரவமாக  ‘நிதி ஆலோசகர்கள் ‘ என்று தங்களுக்கு தாங்களே பட்டம் அளித்துக் கொள்வார்கள். அவர்களை புரோக்கர்கள் என்று நீங்கள் அழைத்தால் தவறேதும் இல்லை.

மத்திய அரசு வங்கிகளை இணைத்தால் இந்த கோஷ்டியினரின் ‘ வாழ்வாதாரமே’ பாதிக்கப்படுமல்லவா? அதனால்தான் இவர்கள் நேரடியாக களத்திற்கு வராமல் ஊடகங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் அமைப்புகள் மூலமாகவும் மறைந்திருந்து அரசாங்கத்தின் மன உறுதியைக் கலைக்கப் பார்ப்பார்கள். ஊடகங்களுக்கும் இவர்களை மிகவும் பிடிக்கும் ,இவர்களை பெரிய பொருளாதார மேதைகள் என்று வருணிக்கும்.  இது காறும், பொதுக்கருத்தை உருவாக்குவதில், அப்பாவி மக்களைக் குழப்புவதில் வெற்றியும் கண்டவர்கள்.