தவம் தரும் சக்தி

சுவாமி விவேகானந்தர் தனது சுற்றுப்பயணத்தின்போது ஒருமுறை மீரட்டில் தங்கியிருந்தார். ஜான் ஒப்பக் என்பவர் எழுதிய நூல்களைப் படிக்க விரும்பினார். சக துறவியான அகண்டானந்தர் அவற்றை அருகில் உள்ள நூல் நிலையத்தில் இருந்து எடுத்து வந்து தந்தார். பெரிய தலையணை அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை ஒரே நாளில் படித்து முடித்துவிட்டார். மறுநாள் அகண்டானந்தர் அந்தப் புத்தகத்தை நூலகத்தில் திருப்பிக் கொடுக்கச் சென்றார். ஆனால் நூல் நிலையக் காப்பாளருக்கு ஒரே சந்தேகம் ஏன் உடனே கொடுக்கிறீர்கள்… படிக்கவில்லையா?” என்று அகண்டானந்தரிடம் கேட்டார். அதற்கு அகண்டானந்தர், விவேகானந்தர் படித்து முடித்துவிட்டார். அதனால்தான் நான் திருப்பிக் கொடுக்க வந்தேன்” என்றார்.

ஆனால் நூலகருக்கு அதை நம்ப முடியவில்லை. மிகப்பெரிய புத்தகத்தை எப்படி ஒரே நாளில் படிக்க முடியும் என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. படித்து முடிக்க வாய்ப்பே இல்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.

அகண்டானந்தர் நடந்த விஷயத்தை சுவாமி விவேகானந்தரிடம் தெரிவித்தார். சுவாமி விவேகானந்தர் வாருங்கள், அந்த நூலகரைப் பார்த்து வரலாம்” என்று சொல்லி அகண்டானந்தரையும் அழைத்துக்கொண்டு நூலகத்திற்கு வந்தார். தான் அந்த புத்தகம் முழுவதையும் படித்துவிட்டதாக நூலகரிடம் சுவாமிஜி தெரிவித்தார். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அந்தப் புத்தகத்திலிருந்து எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் என்னிடம் கேள்வி கேளுங்கள்” என்றார் சுவாமிஜி.

நூலகரும் அந்தப் புத்தகத்திலிருந்து பல கேள்விகளைக் கேட்டார். எல்லாவற்றுக்கும் சுவாமிஜி தெள்ளத் தெளிவாக பதில் கூறினார். நூலகருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சுவாமிஜி மிகப்பெரிய மேதைதான் என்பதை ஒப்புக்கொண்டு எப்படி இது சாத்தியம்?” என்று கேட்டார்.

அதற்கு சுவாமிஜி ஒருவன் பிரம்மசரியத்தை அனுஷ்டித்தால் அவனுக்கு இத்தகைய எல்லா திறமைகளும் வரும்” என்று தெரிவித்தார்.

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்