பரதன் பதில்கள்

திருப்பதி கோயிலில் பலமணி நேரம் கால் வலிக்க நின்று  சாமி கும்பிடுவது அவசியம் தானா?

– வி. சசிதரன், திருச்சி

நாம் நிற்பது சில மணி நேரங்கள் தான். ஆனால் அவரோ நமக்கு ஆசி வழங்க எப்போதும் நின்றுகொண்டே இருக்கிறாரே…! அதை நினைத்துப் பார்த்தால் நமது வலி எல்லாம் மறந்து போகும். மலையேற பஸ் இருந்தாலும் மலைப் பாதையில் தங்களை வருத்தி நடந்து செல்கிறார்களே… சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்து பாதயாத்திரையாக செல்பவர்கள் ஏராளமாச்சே…!

ஏதாவது என் நண்பரிடம் கேட்டால் என் மனைவியிடம் கலந்து பேசி சொல்கிறேன்” என்கிறாரே… இது சரிதானா?

– கே. வினோத், மதுரை

இது நல்ல குணம்தான். அதேபோன்று மனைவியிடம் கேட்டாலும் என் கணவரிடம் கலந்து சொல்கிறேன்” என்று கூறவேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் இருவரும் கலந்து பேசி முடிவெடுப்பது ஆரோக்கியம்.

எதை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்?

– ந. பிரியா, நாகப்பட்டினம்

இதேபோன்று ஒரு கேள்வி மகாபாரதத்தில் யக்ஷன் தர்மரிடத்தில் கேட்கிறான். தைரியத்தை இழந்தால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்” என்கிறார் தர்மர். இந்தக் காலத்திலும் இது பொருந்தும்தானே…

இஸ்ரேலின்  முன்னேற்றத்திற்கு  காரணம்  என்ன?

– கு. நந்தகோபால், திருவள்ளூர்

இஸ்ரேலைச் சுற்றி ஏராளமான முஸ்லிம் நாடுகள். தன் மீது கை வைத்தால் உடனே பதிலுக்கு பதிலடி கொடுக்கும் தைரியம். மக்களே தீவிரமான தேசபக்தர்கள். அங்கு மதச்சார்பின்மை பேச நம்மூர்  வீரமணி, ஸ்டாலின், வை.கோ, திருமா, சீமான் போன்றோர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாமா என்ற சர்ச்சை  தொடர்கிறதே?

– ம. திவ்யா, சென்னை

கேரளாவில் நடப்பது கம்யூனிச ஆட்சி. அவர்களுக்கு மதத்தில் நம்பிக்கை கிடையாது. அதிலும் ஹிந்துமதம் என்பது அவர்களுக்குக் கிள்ளுக்கீரை. கோயில் விஷயத்தில் மதச்சார்பற்ற, அதிலும் மத நம்பிக்கையில்லாத அரசு தலையிட உரிமை கிடையாது. ஊட்டி, கொடைக்கானல் போன்று சபரிமலை ஒரு சுற்றுலாத்தலம் இல்லை.

ராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராவார் என்று சோனியா அறிவித்துள்ளாரே?

– ப. சதீஷ், கோவை

சுதந்திரம் கிடைத்த உடனேயே காந்திஜி காங்கிரசைக் கலைக்க விரும்பினார். பதவி சுகத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு அதில் உடன்பாடில்லை. அப்போது காந்திஜி எதிர்பார்த்ததை இப்போது ராகுல் நிறைவேற்றி வைப்பாரோ என்னவோ…

பரதனாரே… தமிழருவி மணியன் பற்றி தங்கள் அபிப்ராயம்?

– ச. குமார், பரமக்குடி

இரண்டு திராவிட கட்சிகளையும் (திமுக, அதிமுக) மூட்டை கட்டி வங்கக் கடலில் எறிந்தாலே தவிர தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை” என்ற தமிழருவி மணியன் கருத்து நூற்றுக்கு நூறு பரனாருக்கு உடன்பாடானது.