நீதிதேவன் மயக்கம்!

திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் அப்போது திரையில் தேசியக் கொடியை ஒளிபரப்ப வேண்டும் என்றும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தேசியகீதம் இசைக்கும்போது அனைவரும் எழுந்துநின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்த உத்தரவு நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. விதிவிலக்காக சில ஊர்களில் சிலர் குழப்பம் விளைவித்ததைத் தவிர பொதுவாக அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. திரையில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக்கொடியைப் பார்க்கும்போதும் தேசியகீதத்தைக் கேட்கும் போதும் உண்மையிலேயே மெய்சிலிர்த்தது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்துநின்று தங்களது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்காதோருக்கு தேசப்பற்று குறைவாக இருக்கிறது என்று கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

நல்லவேளை, மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் இந்த பிரச்சினையை மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் விட்டுவிட வேண்டும் என்று தெரிவித்தார். வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்தனர்.

தேசிய கீதம் பாடும்போது எழுந்துநிற்க வேண்டும் என்பது காலம் காலமாக இருந்து வருகின்ற மரபு. நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களால் நாளைக்கு பள்ளி, கல்லூரி, அரசு விழாக்களில் கூட தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் வாதிடவும் வாய்ப்புள்ளது.

காஷ்மீர் முதல் குமரி வரை பாரதம் ஒரேநாடு, ஒரே மக்கள் என்ற கருத்து மக்கள் மத்தியில் வலுப்பெற வேண்டும்.

தேசியக்கொடி, தேசியகீதம் இரண்டும் புனிதமானவை.  அதற்குரிய மரியாதையை செலுத்துவது ஒவ்வொரு குடிமகனுடைய கடமை.

‘வந்தேமாதரம்’. ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்ற கோஷங்கள் நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்து எல்லாம் ஒலிக்க வேண்டும்.

‘தேசமே தெய்வம்’ என்ற உணர்வு நாடு முழுவதும் பீறிட்டு எழவேண்டும்.