சீதாராம்ஜி

நடையில் நின்றுயர் சேவகர்!

 

நமது நாட்டின் விவசாயம், கிராமக் கலாச்சாரம், பசு பாதுகாப்பு பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்விஷயங்களை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச்செல்வதற்காகவும், கடந்த நாலரை வருடங்களாக பாரதம் முழுவதும் பரிக்கிரம பாத யாத்திரை” மேற்கொண்டு வருகிறார் சீதாராம் கெடில்யா.

 

இவர் 2012 ஆகஸ்டு 9 அன்று, கன்னியாகுமரியில் தனது யாத்திரையை தொடங்கினார். அன்றிலிருந்து நாள் ஒன்றிற்கு 10 கிமீ விதம் நடந்து அங்குள்ள கிராமத்திற்கு சென்று, கிராம மக்களிடம், கலாச்சாரம் குறித்த விஷயங்களை பிரசாரம் செய்து வருகிறார்.

 

கேரளம் வழியாக கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் என நம் பாரத தேசத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று விவசாயிகளை சந்தித்து, இயற்கை விவசாயத்தின், நம் கலாசாரத்தின் பெருமைகளைக் கூறி இவற்றை காக்க வேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்திவருகிறார்.

 

மேலும் தனது வடமாநிலப் பயணத்தின்போது நேப்பாள், பூட்டான் ஆகிய அண்டை நாடுகளுக்கும் சென்று, அங்குள்ள விவசாய மக்களை சந்தித்துப்பேசினார். இவரின் தினசரி பயணம் காலை ‘கோ’ பூஜையில் தொடங்குகிறது. பூஜையை முடித்தபின், பத்து கி.மீ. தள்ளி உள்ள கிராமத்திற்கு நடந்து செல்வார்.

 

அங்கு பல்வேறு சமூக மக்களையும் அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்து உரையாடுவார். அவர்களிடம் அன்பு, குடும்ப ஒழுக்கம், மற்றும் கிராமியக் கலைகளைப் பற்றி எடுத்துக்கூறுவார். உரையாடலுக்குபின் அந்த கிராமத்தில் உள்ள கல்விக்கூடத்திற்குச் சென்று, அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு பெரியோரை வணங்குதல், கூட்டுப்பிரார்த்தனை, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய நற்பண்புகளை போதிப்பார்.

 

மதியம் ஒருவேளை மட்டும் யாசகம் பெற்று உணவு உண்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பார்.

 

மாலையில் கிராம மக்களைத்திரட்டி நம் தேசத்தைப்பற்றியும் கிராமங்களைப்பற்றியும் குறிப்பிட்டு, நம் தேசம் இந்த உலகுக்கு உயிர். இதற்கு கிராமங்களே உயிர். எனவே தேசம் வளர கிராமங்கள் காக்கப்படவேண்டும். இதனை நிறைவேற்ற கிராமங்களின் செழிப்பான விவசாயம், நீர் மேலாண்மை, கிராமக்கலாச்சாரம் முதலியவன காக்க ஆவண செய்யவேண்டும்” என்று கூறுவார். இப்படியாக இவரது ஒருநாள் நிகழ்ச்சி அமையும்.

 

இதுபோல தொடர்ந்து நாலரை வருடங்களாக 22,000 கிலோ மீட்டர் நடந்து கிராமம் கிராமமாக சென்று தேச நலனுக்காக மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார் சீதாராம். இவ்வாறு நாட்டு நலனுக்காக செய்யப்படும் இந்த பாதயாத்திரையை வரும் 2017 ஜூலை 9 குருபூர்ணிமா அன்று கன்னியாகுமரியிலேயே நிறைவு செய்ய இருக்கிறார்.

(ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத சேவா பிரமுக்காக சமுதாய சேவையில் ஈடுபட்டிருந்தவர் சீதாராம்ஜி).