அவதூறு சக்திகளின் அஸ்தமன காலம்

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 24ம் தேதி திறந்து வைத்தார். பிரதமர் கலந்து கொள்கிறார் என்ற செய்தி வெளியானவுடனேயே கம்யூனிஸ்ட் நல்லகண்ணு, திருமாவளவன் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு ஒரே காரணம், ஈஷா யோகா மையம் ஒரு ஹிந்துத்வ அமைப்பு என்பதால்தான். ஒருவேளை பிரதமர் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்றிருந்தால் அதைப் பாராட்டியிருப்பார்கள்.

 

ஈஷா யோகா மையத்தை இவர்கள் எதிர்ப்பதற்கு காட்டும் காரணம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஆக்கிரமித்து இயற்கை வாழ்வாதாரங்களை சீரழிக்கிறார்கள் என்பதுதான். ஆனால் அதே மேற்குத் தொடர்ச்சி மலையின் மற்றொரு பகுதியில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து டி.ஜி.எஸ் தினகரன் வகையறாக்கள் காருண்யா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறார்கள். நல்லூர் நகர் என்ற அந்த பகுதி இப்போது காருண்யா நகர் என்றாகிவிட்டது. அதைப் பற்றி இவர்கள் வாயே திறப்பதில்லை. காருண்யா நகர் என்பது 750 ஏக்கர் நிலப்பரப்பாகும்.

 

ஈஷா யோகா மையத்தில் பெண்களை ஏமாற்றி துறவிகளாக்கி வருகிறார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு. ஆனால் கேரளத்திலிருந்து ஏராளமான இளம் பெண்களை ஆசைகாட்டி கொண்டுவந்து அவர்களை ‘கன்னியாஸ்திரீ’களாக மாற்றிக் கொண்டிருக்கும் பால் தினகரனின் மோசடிகளை இவர்கள் கண்டுகொள்வதில்லை.

 

சமீபகாலமாக ஹிந்து நலன்களுக்காக பாடுபடும் துறவிகள், தொண்டு அமைப்புகள் மீது திட்டமிட்ட ரீதியில் பொய்யான பிரச்சாரங்களை பரப்புவதன் பின்னணியில் ஒரு சதித் திட்டமே உள்ளது. இதில் மதம் மாற்றும் சக்திகளுக்கு பெரும் பங்கு உள்ளது. தங்கள் மதமாற்ற மோசடிக்குத் தடையாக உள்ள ஈஷாவை அழிக்க நினைக்கிறார்கள். இவர்களுக்கு திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுகள், பூவுலகின் நண்பர்கள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் ஜால்ரா தட்டி வருகின்றன.

 

ஹிந்துக்கள் உஷாராகிவிட்டார்கள்; தேச விரோத, சதி காரர்களின் திட்டங்களை அம்பலப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் இனி ஒரு ஹிந்து அமைப்பு மீது சேறுவாரி இறைக்க எந்த சக்திக்கும் துணிவு வரக்கூடாது என்ற நிலை தேவை.