கோவையில் என்.ஐ.ஏ., சோதனை ஐந்து பேரிடம் தீவிர விசாரணை

கோவையில், பயங்கரவாதிகள் ஊடுருவல் பரபரப்பு சற்று தணிந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதியின், ‘வீடியோ’வை வெளியிட்டதாக, ஐந்து பேரின் வீடுகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இலங்கையில், ஏப்., 21ம் தேதி, ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில், 250க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.இதில் தொடர்புடைய பயங்கரவாதி, ஜக்ரன்ஹசீமுடன் தொடர்பில் இருந்ததாக, கோவையைச் சேர்ந்த, ஆறு பேரின் வீடுகளில், மத்திய புலனாய்வு அமைப்பு எனப்படும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றினர்.

கடந்த வாரம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த, ஆறு பயங்கரவாதிகள், வினாயகர் சதுர்த்தி விழாவில், அசம்பாவிதம் ஏற்படுத்த, கோவை வழியே ஊடுருவி உள்ளதாக, தகவல் வெளியானது.இதையடுத்து, கோவைக்கு, ‘ரெட் அலெர்ட்’ விடுக்கப்பட்டது. நகர் முழுவதும், தீவிர சோதனை மற்றும் கமாண்டோ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.தற்போது இயல்பு நிலை, மெல்ல திரும்பி, போலீஸ் பாதுகாப்பு படிபடியாக குறைக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம், கொச்சி மற்றும் கோவையிலுள்ள, என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தொடர்பாக, சமூக வலைதளங்களில், யாராவது தகவல் பரப்பி வருகின்றனரா என, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அப்போது, கோவையைச் சேர்ந்த, ஐந்து பேர், இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதியின் வீடியோவை, சமூகவலைதளங்களில் பரப்பியது, தெரிய வந்தது.

இதையடுத்து, கோவை உக்கடம், பிலால் நகர், கோட்டைமேடு பகுதிகளைச் சேர்ந்த சனாபர் அலி, 24, உமர் பாரூக், 32, சமேசா முபின், 27, முகமது யாசீர், 26, சதாம் உசேன், 27 ஆகியோரின் வீடுகளில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, தனித் தனி குழுக்களாக சென்று, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த இடங்களில், மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை, காலை, 10:00 மணிக்கு நிறைவடைந்தது.

ஐந்து பேரிடம் நடத்திய சோதனையில், ஒரு மடிகணினி, ஐந்து மொபைல்போன்கள், ‘சிம் கார்டு, மெமரி கார்டு, சிடி’ உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்தில், ஐந்து பேரிடமும், அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ‘வீடியோ’ வெளியீடு தொடர்பாக, விசாரணை நடத்த, ஐந்து பேரும், கொச்சி அலுவலகத்தில், இன்று ஆஜராக வேண்டும் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.