திண்டுக்கல் பூட்டு, செட்டி நாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு

500 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வரும் திண்டுக்கல் பூட்டுவின் பாகங்கள் பித்தளையினால் அமைக்கப்பட்டதால் உப்புக்காற்றாலும், மாறுபாடான பருவ நிலையாலும் பாதிக்கப்படாமல் காலம் கடந்து நிற்கும்.இந்தத் தரமே இப்பூட்டுக்கான நற்பெயரை பெற்றுத் தந்தது. இந்த வகை பூட்டுக்கள் 50 ஆண்டுக்கும் மேலாக உழைக்க கூடியவை. இந்த பூட்டுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மாங்காய் பூட்டு, சென்டினல், வட்டக் காவலன், ரயில்வே லாக், லண்டன் லாக் என்ற எக்சைஸ் லாக், உண்டியல், பணப்பெட்டி, பெட்டி லாக் பல்வேறு வகையான பூட்டுக்கள் திண்டுக்கல்லில் தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரிய பூட்டு என்றால் அது மாங்காய் பூட்டு எனப்படும் ‘பேட் லாக்’ மட்டுமே. புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் இத்தொழில் மேலும் மலர்ச்சி ஏற்படும்.

செட்டிநாடு என்றாலே நினைவுக்கு வருவது செட்டிநாட்டு உணவு, பலகாரங்களோடு சாயம் போகாத காட்டன் கண்டாங்கி சேலைக்கும் இடம் உண்டு. பாரம்பரிய அடர் வண்ணங்களில், சிறிதும் பெரிதுமாக பட்டையான கோடுகள், கட்டங்கள் நிறைந்த அவற்றின் டிசைனும் சிறப்பு தான்.

இந்த சேலைகளை 200 ஆண்டுகளுக்கும் மேலாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் 700க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறியில் நெசவு செய்கின்றனர்.இச்சேலைகளில் கட்டங்கள் மற்றும் கோடுகளின் வண்ணம் தான் மாறுமே தவிர பார்டரில் ருத்ராட்சம், கோயில் கோபுரம், மயில், அன்னம், போன்ற பராம்பரியமான டிசைன்களே அதிகம் இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைக்குபுவிசார் குறியீடு கிடைத்துள்ளது.