கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை ரத்தாகுமா ?

கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், ‘அறநிலையத்துறை அதிகாரிகள், அரசின், ‘ரிமோட் கன்ட்ரோல்’ பொம்மைகளாக செயல்படுகின்றனரா? கோவில் நிலங்கள் எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற விபரங்கள் இல்லாமல், அரசாணையை எப்படி அமல்படுத்த முடியும்?’ எனக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

சேலம், கன்னன்குறிச்சியைச் சேர்ந்த, ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக வருவாய் துறை, 2019 ஆக., 30ல், அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில், ஆட்சேபனை இல்லாத, அரசு புறம்போக்கு நிலத்தில், நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கவும், ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களை அகற்றி, அவர்களுக்கு தகுந்த இடத்தை கண்டறிந்து, பட்டா வழங்குவது குறித்தும், தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அரசாணை, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கும், பச்சை கொடி காட்டுகிறது. அரசு புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களையும், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களையும், சமமாக பார்க்க முடியாது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு, பட்டா வழங்குவது, அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரானது; அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவுக்கு அரசு பதில் அளிக்க, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, வருவாய் துறை தாக்கல் செய்த பதில் மனு:கோவில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தால், அந்த ஏழை குடும்பங்களின் நலனை பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக, கோவில் நிலத்தை வாங்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, மாவட்ட வாரியாக, கோவில் வாரியாக திட்டம் வகுத்து, அரசுக்கு அனுப்பப்படும்.அரசிடம் உத்தரவு பெற்ற பின், வரன்முறை செய்யப்படும். வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு, வீட்டு வசதி அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதனால், கோவில் அதிகாரிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும்.

குறிப்பிட்ட நிலம் கோவிலுக்கு தேவைப்படவில்லை என்றால், தகுதியான ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பரிசீலிக்கலாம். அதற்கான இழப்பீட்டு தொகை, சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வழங்கப்படும்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் மகாராஜாவும் ஆஜராகினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றனர்.அதற்கு, நீதிபதிகள், ‘பிரதான மனுவை நிலுவையில் வைக்கிறோம். இடைக்கால மனு மீது உத்தரவு பிறப்பிக்கிறோம். ஏற்கனவே, அரசின் நிலையை, பதில் மனுவில் தெரிவித்து விட்டீர்கள்’ என்றனர். மேலும், நீதிபதிகள்,

அரசு, தான் பிறப்பித்த உத்தரவு வழியாக, கோவில் நிலங்களை விற்க, அறநிலையத்துறையை வற்புறுத்துகிறதா? அரசு பிறப்பித்த உத்தரவு, கோவில்களுக்கு எப்படி பலன் அளிக்கும்? அரசின் ஊதுகுழலாகவும், ‘ரிமோட் கன்ட்ரோல்’ வழியாக இயக்கப்படும் பொம்மைகளாகவும், அறநிலையத்துறை அதிகாரிகள் இருக்கின்றனர்.

தமிழகத்தில், அறநிலையத்துறையின் கீழ், 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன; அவற்றுக்கு சொந்தமாக எவ்வளவு நிலங்கள் உள்ளன? அவற்றில் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன; குத்தகை நிலங்கள் எவ்வளவு உள்ளன என்கிற விபரங்கள் முதலில் தேவை.இந்த விபரங்கள் இல்லாமல், எப்படி அரசாணையை அமல்படுத்த முடியும்? குறிப்பிட்ட கோவில்களை தேர்ந்தெடுத்து, அரசாணையை எப்படி அமல்படுத்த முடியும்?இவ்வாறு, நீதிபதிகள் கூறினர். பின், அரசாணைக்கு தடை கோரிய இடைக்கால மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.