பல மொழிகளில் ராமாயணம்

ராமாயணத்தை இயற்றியர் வால்மீகி. அவர் சமஸ்கிருதத்தில் செய்யுள் வடிவில் இயற்றிய ராமாயணத்தை அப்படியே வாசிக்க இன்று எத்தனை பேரால் முடியும்?! தமிழர்களான நாம் அறிந்து கொள்ள எளிதானது கம்ப ராமாயணமே. தவிரவும் தூர்தர்ஷன் புண்ணியத்தால் துளசி தாசரின் ராமசரித மானஸை ஒட்டி ராமானந்த சாகர் என்பவர் எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்ட ராமாயணத்தை நாம் 80 களில் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த இரண்டு ராமாயணங்களைத் தவிர மேலும் பலவிதமான ராமாயணங்கள் கிழக்காசிய  நாடுகளில் வழங்கி வருகின்றன. அவை என்னென்ன என்று இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

மூல நூலான சமஸ்க்ருதத்தில் உள்ள ராம கதாவில் இருந்து முதன் முதலில் மொழிபெயர்க்க பட்டது தமிழ் உள்ள கம்பராமாயணம் தான்..

Image result for saamkirit ramayanam,"

 

சமஸ்கிருத ராமாயணங்கள்

வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப்போக்கில் மேலும் பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

  • அத்யாத்ம ராமாயணம்
  • வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
  • லகு யோக வசிஸ்டா
  • ஆனந்த ராமாயணம்
  • அகஸ்திய ராமாயணம்
  • அத்புத ராமாயணம்

இவை தவிர மகாபாரதம் மற்றும் பாகவத புராணம் இரண்டிலுமே ராமாயணத்தைப் பற்றிய விவரணைகள் இடம்பெற்றுள்ளன. மகாபாரதத்தில் வன பர்வத்தில் ‘ராமோக்யான பர்வ’ எனும் பெயரிலும் பாகவத புராணத்தில் ‘9 வது ஸ்கந்தத்திலும்’ ராம கதை இடம்பெறுகிறது. இவை தவிர விஷ்ணு புராணத்திலும், அக்னி புராணத்திலும் கூட ராமகதையைப் பற்றி சுருக்கமாக விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றுள் செய்யுள் வடிவின்றி உரைநடை வடிவில் நமக்கு அறியக் கிடைத்தது துளசிதாசர் அருளிய ராம சரித மானஸ் எனப்படும் ராமாயணக் கதையே!

வால்மீகி ராமாயணம் சமஸ்கிருத செய்யுள் வடிவம் கொண்டது. அதை வாசித்துத் தெளிந்த துளசி தாசர் அதை வடமொழியில் மொழிபெயர்த்தார். அதையே இன்றளவும் ராமாயணம் என்ற பெயரில் நாம் பற்பல விதமாக விளங்கிக் கொள்கிறோம்.

சமஸ்கிருத ராமாயணங்கள் தவிர பிராந்திய மொழிகளிலும் பலவிதமான ராமாயணங்கள் புழங்குகின்றன.

வட இந்தியா

அவற்றில் வட இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் ராமாயணம் தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள துளசிதாசரின் ராமசரிதமானஸ். இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.

ஜம்மு & கஷ்மீர்

இது தவிர ஜம்மு & கஷ்மீரில் ‘ராமாவதார சரிதை’ இன்னொரு விதமான ராமாயணம் புழங்குகிறது. அது எழுதப்பட்ட காலம் 19 ஆம் நூற்றாண்டு.

குஜராத்

குஜராத்தில் 17 ஆம் நூற்றாண்டில் துளசிதாசரின் ராமசரிதமானஸை அடியொற்றி துளசி கிருத ராமாயணத்தை பிரேமானந்த ஸ்வாமி எனும் புகழ்பெற்ற குஜராத்தி கவிஞர் இயற்றினார்.

மகாராஷ்ட்ரா

மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார். மகாராஷ்டிரத்தில் முன்னதாக 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்ட
மற்றொரு ராமாயணமும் புழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாம்

அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில்  மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது.

வங்காளம்

வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட   கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.

ஒதிஷா

ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர் இயற்றிய ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது.

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும் கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.

கர்நாடகா

கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம் (ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன. தவிரவும்.. கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ராமகதையாக கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் கம்பர் இயற்றிய ‘கம்பராமாயணம்’.

கேரளா

கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய  ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளம்

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி
பெற்றவை.

கோவா

கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால் கொங்கணியில் இயற்றப்பட்ட  ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள் போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசம்

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி, ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத்
திகழ்கின்றன.

இந்தியா தவிர அயல்நாடுகளிலும் ராமகதை இன்றளவும் சொல்லப்பட்டு வருவது அதன் பெருமைக்குச் சான்று.

  • கம்போடியாவில் ரீம்கர்
  • தாய்லாந்தில் ராமாகீய்ன்
  • லாவோஸில் பிர லாக் பிர லாம்
  • பர்மாவில் யம ஸாட்டாவ்
  • மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
  • இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
  • பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
  • இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
  • ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
  • ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
  • சீனா, திபெத் & யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

ஆக, இப்படி ஏராளமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன. ஆக, நிஜமாகவே வால்மீகி ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ராமனின் கதையை நாம் உள்ளது உள்ளபடி அறிய வேண்டுமெனில் நாமும் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டு மூலநூலை வாசிப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை போலிருக்கிறது. இதில் எதுவும் அசலுக்கு நிகராகாது. ஆயினும் அசலைக் காட்டிலும் இலக்கியச் சுவையிலும், கதை நேர்த்தியிலும் பண்பாட்டுப் பெருமையிலும் பிராந்திய மொழியில் இயற்றப்பட்ட ராமாயணங்கள் ஒருபடி மேலானவை என்றும் அந்தந்த பிரதேசத்து மக்களால் கருதப்படுகின்றன என்பதையும் இங்கே நாம்
குறிப்பிட்டாக வேண்டும்.