கோவா விடுதலையில் ஆர்.எஸ்.எஸ். பங்கு

1947 ஆம் வருடம் நாட்டிற்கு ஆங்கில ஆட்சியாளர்களிடம் விடுதலை கிடைத்தது என்பதை நாமறிவோம். இன்றைக்கு இருக்கின்ற பாரதம் அன்று நம்முடன் இருந்ததா? 1947க்குப் பிறகு நமது நாட்டுடன் இணைந்த பகுதிகள்  எவையெவை என்பது பற்றி பலருக்குத் தெரியாது. நமது நாட்டின் முழுமையான, உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு நமது பாடப்புத்தகங்களில் இடம்பெறாதது  இதற்கு ஒரு காரணமாகும். தேசவிரோத கம்யூனிச சிந்தனை கொண்டவர்கள் மற்றொரு காரணம். கம்யூனிச சிந்தனை கொண்டவர்களால் தயாரிக்கப்பட்ட தப்பும் தவறுமான நூல்கள் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் திணிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் நாட்டின் ஒட்டு மொத்த வரலாறு மக்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.

1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகுதான் ஜம்மு&காஷ்மீர், ஜூனாகத், ஹைதராபாத், டமன்&டியூ மற்றும் தாத்ரா&நகரஹவேலி, கோவா, புதுச்சேரி ஆகிய பகுதிகள் நமது நாட்டுடன் இணைந்தன.

ஜம்மு&காஷ்மீர் 1947 அக்டோபர் 26 ஆம் தேதியன்றும், ஜூனாகத் (குஜராத்தில் உள்ளது) 1947 நவம்பர் 9 ஆம் தேதியன்றும், 1948 செப்டம்பர் 18 ஆம் தேதியன்றும் ஹைதராபாத்தும், டமன்&டியூ, தாத்ரா&நகர்ஹவேலி 1954 ஆம் வருடமும், கோவா 1961 ஆம் வருடமும், புதுச்சேரி 1963 ஆம் வருடமும்தான்   நமது நாட்டுடன் இணைந்து இன்று பாரத தேசத்தின் பிரிக்கமுடியாத அங்கங்களாகிவிட்டன.

டமன்&டியூ, தாத்ரா&நகர்ஹவேலி, கோவா, போன்ற மேற்கு கடற்கரையில் மும்பைக்கு அருகில் உள்ள பகுதிகளான இவைகள் ஆங்கிலேயர்கள் இந்நாட்டில் ஆதிக்கம் செய்வதற்கு முன்பிருந்தே சுமார் 451 வருடங்கள் போர்ச்சுகீசியர்கள் வசம் இருந்தன.

கோவாவில் போர்ச்சுக்கீசிய கிறிஸ்துவ  மிஷனரிகள் செய்த படுபாதாகச் செயல்களும், படுகொலைகளும், வன்கொடுமைகளும் முழுமையாக மூடிமறைக்கப்பட்டு மிஷினரிகள் அன்பானவர்கள், தொண்டுசெய்பவர்கள், ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கல்வி கொடுத்தவர்கள் என்று ஒரு மாயை 70 வருடங்களாக நமது நாட்டில் திட்டமிட்ட ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்துள்ளது, சொன்னாலும் நம்பமாட்டார்கள். அதனால் கோவா ஹிந்துக்கள் சந்தித்த அடக்குமுறைகள் பற்றி இன்று நமது நாட்டில் உள்ள பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.

1950 ஆம் வருடம் சுதந்திர பாரத அரசு போர்ச்சுக்கள் நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்பேச்சுவார்த்தை எவ்வித பலனையும் அளிக்கவில்லை. போர்ச்சுக்கல் தனது பிடிவாதத்தை மேலும் அதிகமாக்கியது. கோவா காலணிப் பகுதியல்ல என்றும் ஆங்கிலேயர்கள் இந்தியக் கடற்கரைக்கு வருவதற்குப் பலஆண்டுகளுக்கு முன்பே எங்கள் வசம் வந்த நாடென்றும் வாதிட்டனர். அதனால் கோவாவை விட்டுத்தரமுடியாது என்று தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரை பாரதத்துடன் இணைப்பதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் எவ்வளவு தீவிரமான ஆர்வம் காட்டினரோ அதேபோன்று கோவா, டமன்&டியூ, தாத்ரா நகர் ஹவேலியை மீட்பதிலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முன்னணியில் இருந்தனர். இவைகளும் வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டன.

போர்த்துக்கீசிய ஆதிக்கத்தில் இருந்த கோவா பகுதிகளை மீட்கவேண்டும் என்று முதலில் குரல் எழுப்பியவர் டாக்டர் ராம் மனோகர் லோஹியா. அதைத்தொடர்ந்து 1954 ஆம் வருடம் ராஜா வாகங்கர், நானா கஜரேக்கர் என்ற இரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தாத்ரா நகர்ஹவேலி மற்றும் டமன் பகுதிகளுக்கு பலமுறை சென்று சுற்றிப்பார்த்து விவரங்களை அறிந்து வந்தனர். 1954 இல் நேஷனல் மூவ்மென்ட் பார் லிபரேஷன் ஆர்கனைசேஷன் (NMLO) மற்றும் ஆசாத் கோமண்டக் தள் (AGD) என்கிற பெயரில் ஒரு போராட்டக்குழுவை ஆர்.எஸ்.எஸ். துவக்கி பல்வேறு நபர்களை ஒருங்கிணைத்தது.

1954 ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று புனே நகர ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த விநாயக்ராவ் ஆப்டே என்பவர் தலைமையில் சுமார் 100 ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் தாத்ரா-நகர்ஹவேலியை சுற்றிவளைத்தனர். அதைத் தொடர்ந்து சில்வாசா நகரில் இருந்த போர்ச்சுக்கீசிய படைவீரர்கள் மீது கொரில்லா முறையைக் கையாண்டு தீடிர் தாக்குதல் நடத்தினர். இதில் 175 போர்ச்சுக்கீசிய சிப்பாய்களை நிபந்தனையின்றி சரணடைய வைத்தனர். அங்கு பாரத தேசத்தின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அன்றைய தினமே அப்பகுதி நமது நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதன்பிறகும் கூட கோவாவை விட்டுத் தருவதாக இல்லை என்று போர்த்துக்கீசியர் அறிவித்தனர்.

1955 ஆம் வருடம் ஆர்.எஸ்.எஸ். கோவாவை பாரதத்துடன் இணைத்திட மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. வழக்கம்போல் நேரு அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கோவா தலைநகர் பனாஜியில் அரசு தலைமை செயலகத்தின் மீதேறி பாரத நாட்டு மூவர்ண தேசியக்  கொடியை பறக்கவிட்ட பெருமை, பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரையே சாரும். அதற்காக அவர் கைது செய்யப்பட்டு லிஸ்பன் (போர்ச்சுக்கல்) சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் கடும் சித்திரவதைக்கு ஆளானார். 1961இல் கோவா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட அவர் விடுதலை செய்யப்படவில்லை. 17 ஆண்டுகள் சிறையில் இருந்தார் அவர்.

1955 இல் கோவாவை விடுவிக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய போராட்டக் குழு அமைக்கப்பட்டு பனாஜி சென்று சத்யாகிரஹம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிட அதிகமான எண்ணிக்கையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜனசங்க தொண்டர்கள் தலைவர்களே பங்கேற்றனர். ஜனசங்கத் தலைவர்களில் முக்கியமானவரும் கர்நாடகத்தை சேர்ந்தவருமான ஜகந்நாத  ராவ் ஜோஷி அவர்கள் தலைமையில் 3000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கோவாவிற்குள் நுழைந்தனர். ஜகந்நாத ராவ் ஜோஷி உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைச்சாலையில் போர்ச்சுக்கீசிய காவல்துறையினர் தொண்டர்கள் மீது  கடும் தாக்குதல்களை நடத்தினர். இத்தகைய அடக்குமுறைகளையும் மீறி சத்யாகிரஹத்தில் கலந்துகொள்வதற்காக நாடெங்கிலுமிருந்து தொண்டர்கள் கோவாவை நோக்கி வந்தவண்ணமிருந்தனர். 1955 ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற சத்யாகிரஹ போராட்டத்தினர் மீது போர்த்துகீசிய போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தியதில் 30 போராட்டக்காரர்கள் உயிர் இழந்தனர். போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜாபாவு மஹங்கால் என்கிற ஸ்வயம்சேவகர் வந்திருந்தார். ராஜாபாவுவின் ஒரு கண் வழியே துப்பாக்கி குண்டு பாய்ந்த போதிலும் கூட மூவர்ணக் கொடியை கையில் தயங்கியபடியே அவர் வீர மரணம் அடைந்தார். ஆஜாத் கோமண்டக் தள் (AGD) என்ற அமைப்பைத் துவக்கி கோவா விடுதலைக்காக ஆயுதம் எடுத்துப் போராடி வந்த மோகன் ரானடேவும் அவருடைய நண்பர் தெலு மெஸ்கரெனெஸ் என்பவரும் கைது செய்யப்பட்டு 1969 வரை கோவா மற்றும் போர்ச்சுக்கல் சிறையில் இருந்தனர். பிரபல ஹிந்தி திரைப்பட இசை அமைப்பாளரும் ஸ்வயம்சேவகருமான சுதிர் பட்கே மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மோகன் ரானடே எழுதியுள்ள ‘Sarfaroshi ki Tamanna’ என்கிற கோவா விடுதலைப்  போராட்ட நினைவுகளைக் குறித்து எழுதியுள்ள நூலில் நேரு அரசின் அசட்டையினாலும், அதைத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசுகளின் அலட்சியத்தாலும் எவ்வாறு தாங்கள் புறக்கணிக்கப்பட்டோம் என்பதை குறிப்பிட்டுள்ளார். கோவாவை விடுதலை செய்வதற்கு போராளிகள்    மேற்கொண்ட நடவடிக்கைகளை எவ்வாறு நேரு அரசு புறக்கணித்தது என்பதையும் அவர் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் போராட்டத்தில் ஸ்வயம்சேவகர்கள் ஆற்றிய பங்களிப்புகளையும் நினைவு கூர்ந்துள்ளார்.

நமது மத்திய அரசு போர்ச்சுக்கல் அரசுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் போராட்டங்களும் சத்யாகிரஹங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வந்து மத்திய அரசுக்கு ஒரு நெருக்குதலை ஏற்படுத்தியது. இறுதியாக 1961 டிசம்பர் 18-19 ஆகிய தினங்களில் ஒரு சிறிய இந்திய ராணுவப் படையானது கோவாவிற்குள் நுழைந்து கோவாவைக் கைப்பற்றியது. கோவாவை மீட்பதற்காக நடைபெற்ற சத்யாகிரப் போராட்டங்களில் கலந்துகொள்வதற்காக நாடெங்கிலுமிருந்து ஆர்.எஸ்.எஸ்.ஸ்வயம்சேவகர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் முன்வந்தனர். நம் தமிழகத்திலுமிருந்தும் ஸ்வயம்சேவகர்கள், ஜனசங்கத் தொண்டர்கள் கோவாவுக்கு சென்றனர். இதன் விளைவாக கோவா இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்பட்டது.

ஆர்.எஸ் .எஸ் ஸ்வயம் சேவகர்களால் மீட்டப்பட்ட கோவாவின் விடுதலை வரலாறு. ஜெகந்நாதராவ் ஜோஷி என்ற வீர சிங்கத்தின் போராட்ட சரித்திரம் திட்டமிட்டு வரலாற்று ஏடுகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

உண்மையான வரலாற்றை எடுத்துச் சொல்வோம் , பெருமிதம் கொள்வோம் …

ந. சடகோபன்

முன்னாள் ஆசிரியர் , விஜயபாரதம்