திருப்பாவை – 5

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர்  யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்; செப்பு — ஏலோர் எம்பாவாய்.

“பரமபதத்தில் நித்திய சூரிகளுக்கும், வேதங்களுக்கும் எட்டாத பெருமை உடையவனாக
விளங்குபவன் கண்ணன். அவனே இப்போது பசுக்களுக்கும், இடைக்குலத்திற்கும்
எளியனாகக் கலந்து கட்டியணைத்துப் பரிமாறும் நிலைக்கு வந்தது நம் பாக்கியமா
அல்லது அவனது குண நலன்களா ?? அவன் முதல் முதலில் கண்ணனாகப் பிறந்தது எந்த
இடத்தில்? வடமதுரையில் தானே ?? அவன் வாமனாவாதரத்தில் சித்தாஸ்ரமத்தில்
அமர்ந்து தவம் புரிந்த இடம் அன்றோ வடமதுரை என்னும் புண்ணிய பூமி
??யமுனையைக் கடந்து, திருவாய்ப்பாடியில் கண்ணன் வந்து பிறந்தது நமக்கு எல்லாம்
எத்தகைய பெருமை ?

இவ்வாறு பலவித வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், வடமதுரையில்
அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை
நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு
போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமையும் சேர்த்தவனல்லவா
கண்ணன்??!!

இவன் வயிற்றில் யசோதை கட்டிய கயிறின் தழும்பை இன்றும் நாம் காணலாமே, தனது
வயிற்றில் நிலைத்து நின்று கட்டிய தழும்பைக்கொண்டே தாமோதரன் என்கின்ற பெயரை
தனக்கு இட்டுக் கொண்டானோ கண்ணன் ?? அவனை அன்றி வேறொருவனையோ
வேறொரு பலனையே நாடாத மனப்பான்மையுடன் இருப்பதே நமக்குத் பெரிய தூய்மை!!!
இது போதுமே அவனை அணுக, இதனினும் வேறு பெரிய தகுதி ஏது ? அவனுக்கு நாம்
இடும் காணிக்கை என்ன ? கையில் அகப்படும் பூக்களை நாம் பக்தியோடு செய்தால்
எந்தப் பூவாயினும் தூயதாகி விடுமே !அவற்றை அவன் மீதோ, அவன் திருவடிகளின்
மீதோ மனம்போலத் தூவுவோம். கைகள் அடைந்த பலன் பெறுவோம். வாயினாலும்
பேசுகிறார்களே என்று அவன் எண்ணி பரவசமாகி விடுவான். மனத்தாலும், அவன்
திருமேனியையும் , குணங்களையும், அவன் செய்த உதவிகளையும் எண்ணி
இன்புறுவோம். மனம், மொழி, மெய் ஆகிய முக் கருவிகளாலும் அவனைச் சரணடைந்திட்
டோமானால் பின்பு நமக்கு வரும் நன்மையைக் கேளுங்கள் !!

இத்தகைய அணுகுமுறைகளை நாம் மேற்கொண்டோமானால், இதுவரை நாம்
செய்திருந்த பாவங்கள் எல்லாம் கழிந்து போகும். இனிமேல் நாம் அறியாமல்
செய்யவிருக்கும் பாவங்களும் நம்மிடம் ஒட்டாமல் மறைந்து போகும். இங்ங்னம்
பாவங்கள் அனைத்தும் தீயில் இட்ட பஞ்சு போல தீய்ந்து போகும். இந்த
உண்மைகளையெல்லாம் உள்ளத்தில் கொண்டு அவன் திருநாமங்களை
உச்சரித்து,அவன் குணங்களை பேசி, பாடி, சரணடைய வாருங்கள்.,"என்று மற்ற
தோழிமார்களை அழைக்கின்றனர் இடைப்பெண்கள்.