காவி திருவள்ளுவர் – திருவள்ளுவர் உடையின் வண்ணம் காவிதான் ஆதி!

வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் திருவள்ளுவர் பிறந்த தினம். அதுவர இன்னும் 6 மாதம் உள்ளது. அவரின் பிறப்பை மாற்றிய பெருமை திமுகவையே சாரும். அதுவர இன்னும் 3 மாதம் இருக்கிறது. திருவள்ளுவரை பற்றி தை மாதத்திற்குள் உலகத் தமிழ் மாநாடு ஏதும் நடக்கப்போவதாகத் தெரியவில்லை. இதெல்லாம் இல்லாதபோதும், திடீரென 5 நாட்களாக திருவள்ளுவர் ‘‘மீடியா நாயகனாக உலாவருகிறார்’’? ஏன் எதற்கு? எப்படி?

பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில், அன்றைய தின அரசியலை ஒட்டிய திருக்குறள் தினசரி பதிவிடுவது  வழக்கம். நவம்பர் 4ம் தேதி கற்றதனால் ஆன பயன் என்சொல் குறளை எழுதி, ‘‘கடவுளை தூற்றி, இறை நம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன்?’’ எனக்கேட்டு, வள்ளுவரின் கி.பி.1800 கால ஒரிஜினல் காவியுடை, நெற்றியில் திருநீறு, கழுத்தில் உத்திராட்ச மாலை அணிந்த படத்தை வெளியிட்டிருந்தார்கள்.

பாஜக தூஷணை மீடியாக்களுக்கு ‘‘அவல்’’ கிடைத்துவிட்டது. என்னிடமே 3 தொலைக்காட்சிகளிலிருந்து திமுக – தமிழ்தேசிய வாதிகளின் வினைக்கு எதிர்வினை கேட்டார்கள்! அன்று மாலை எப்போதும் போல அது ஊடகங்களின் ”விவாதத் தலைப்பானது”! அப்படியாக இந்த வாரம் ”திருவள்ளுவர் வாரம்” ஆனது இன்றுவரை தொடர்கிறது.

எதற்காக ‘‘காவித்திருவள்ளுவரை’’ கையில் எடுத்தது திமுக அணி?    காரணம் இல்லாமல் இல்லை! திமுக தலைமையிடம் அறிவாலயம் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்த    ஒன்று. அதை தற்போது பாஜக கையிலெடுத்து sc/st கமிஷனிடம் புகார் அளித்ததும் குற்றச்சாட்டு மீண்டும் புத்துயிர் பெற்றது. இது திமுக வயிற்றில் புளியை கரைத்தது. ‘‘நாங்கள் நிரூபிக்க வேண்டிய இடத்தில் நிரூபிப்போம் என ஸ்டாலின் உள்ளுக்குள் பயத்தோடு வெளியில் வீராவேசம் காட்டினார். அந்த விவாதங்களை பின்னுக்குத் தள்ள காவித்திருவள்ளுவர்  பரபரப்பு இவருக்கு பயன்பட்டது.

மற்றொரு காரணம், இன்றுவரை தமிழின் ஏகபோக குத்தகைதாரர்  திமுக என்று இருந்தது. திடீரென அந்த ஹோல் சேல் பிசினசில், பாஜகவும் பிரதமர் மோடியும் முதலீடு செய்து பங்குதாரர் ஆகிவருகின்றனர். இது ஸ்டாலினுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. பாஜக கொஞ்சம் முதலீடு செய்திருந்தால் ஸ்டாலின் பயந்திருக்கமாட்டார். ஆனால் கடந்த 5 வருடத்தில் ஓவராக முதலீடு செய்து வருகிறது பாஜக.

பிரதமரின் ஒவ்வொரு பேச்சிலும் திருக்குறள், நாலடியார் போன்ற பாடல் குறிப்புக்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றி போகும் நாடுகளெல்லாம் பேச்சு. தற்போது தாய்லாந்தில் ‘தாய்’ மொழியில் திருக்குறள் மொழி பெயர்த்து வெளியீடு. போதாதா ஸ்டாலினின் பயத்திற்கு!

ஆனால் என்ன பயமானாலும் கவலைப்படாத திமுக இப்போது ஏன் மிரள்கிறது? அங்குதான் ‘‘உண்மை உயர்ந்து நிற்கிறது!’’ திமுக என்னமோ தமிழை தூக்கிப்பிடித்துத்தான் ஆட்சியை பிடித்தது. திருவள்ளுவருக்கு சிலை வைத்தது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்ன?

அரசுப் பள்ளியிலிருந்து, தனியார் பள்ளி வரை தமிழில் எழுத படிக்கத் தெரியாத மாணவர் மாணவியர் எண்ணற்றோர். இது மாபெரும் சீர்கேடல்லவா? திமுக குழுமம் நடத்தும் 45 பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தியில்தான் பேசவேண்டும். தமிழில் பேசினால் தண்டனை! இது தமிழ்த் துரோகமல்லவா? இது திமுக ஆட்சியில் தமிழ் நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் கிடைத்த பரிசு! 20 ஆண்டுக்காலம் மத்திய அரசில் பங்குபெற்று பதவி சுகம் மட்டும் கண்ட திமுக, தமிழை இந்தியா முழுதும் கொண்டு செல்லவில்லை என்னும் கவலை தமிழ் மக்களிடம் உள்ளது.

மாறாக 5 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியா முழுதும் திருவள்ளுவர் சிலை ஊர்வலம், கங்கைக் கரையில் திருவள்ளுவருக்கு சிலை. ராஜராஜன், ராஜேந்திர சோழன் 1000வது முடிசூட்டு விழா கொண்டாட்டம், அவர்களின் நினைவு தபால் நிலை, மும்பை துறைமுக கப்பல் படை பகுதிக்கு ராஜேந்திரசோழன் பெயர், மத்திய அரசு மத்திய பள்ளிகளில் திருக்குறள் பாடம் என்று நேர்மையான  செயல்பாடுகள் திமுக செல்வாக்கை தமிழ்நாட்டில் பின்னுக்கு தள்ளிவிட்டது.

இதனால்தான், காவித்திருவள்ளுவரை, தங்கள் முகம் மறைக்கும் விஷயமாக திமுக கையில் எடுத்தது. ஆனால் காவிதான் திருவள்ளுவரின் ஒரிஜினல் உடை என்பதை மக்கள் அறிய இந்த ஊடகவிவாதங்கள் உதவியதால் திமுகவிற்கு எதிராக அது ‘பூமராங்க்’ ஆகியது.

சரி,  திருவள்ளுவர் காவிக்கு எப்போது போனார்?

வெள்ளைக்கு எப்போது மாறினார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா?

கி.பி. 1800 வரை திருவள்ளுவரின் படம் எதுவும் எங்கும் இல்லை. அதற்கு பிறகு பிரிட்டிஷ் அரசுதான் திருவள்ளுவருக்கு உருவம் வரைந்தது. அக்கால கட்டத்தில் பெரும்பாலான, ரிஷி, முனிவர், ஞானி, யோகி, புலவர், நாயன்மார், ஆழ்வார்கள் காவி, திருநீறு, உத்திராட்ச மாலையில்தான் இருந்துள்ளனர். நாம் 15,16,18ம் நூற்றாண்டு ஏன் 1950 வரை பொதுக்கூட்டம், ஊர்வலம், சாலை போக்குவரத்து படங்களை பார்த்தால் அதில் ஆண்கள் தார்ப்பாய்ச்சிதான் வேட்டி கட்டியிருப்பர். அது அந்த கால உடையலங்காரம்!

இதை மையமாக வைத்து திருவள்ளுவர் சித்திரம் தீட்டத்தப்பட்டது. 1885 முருகேச முதலியாரின் திருவள்ளுவர் புத்தகம் 1910, 1935ல் புத்தகங்களிலும் யாழ்ப்பாணம் தமிழ் லைப்ரரியில் திருவள்ளுவர் ஜடாமுடி, பொட்டு, திருநீறோடுதான் காட்சி தருகிறார். இதை 1959 – 60 களில் அன்றைய காங்கிரஸ் அரசு மாற்றி வரைந்து தபால் தலையும் வெளியிட்டது. இப்படி மாற்றி வரைந்தது ஏன்? இதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

காங்கிரஸ் திமுக அரசுகளுக்கு யார் இந்த அனுமதி கொடுத்தார்கள்?

அன்று எதிர்ப்பு எழவில்லை? இன்று ஒரிஜினலுக்கு போகும்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

கடவுள் நம்பிக்கையும், மதநம்பிக்கை அற்றவர்கள் இதற்கு எதிராக கூக்குறல் இடுவது ஏன்?

வள்ளுவரை வைத்து காவி எதிர்ப்பு அரசியலை கையிலெடுத்து திமுக அவரைத் தன் கூட்டுக்குள் நிற்க வைத்து முகத்தை புண்ணாக்கிக் கொண்டது தான் மிச்சம்!