என்ன ஆச்சு தமிழகத்திற்கு?!

டெல்லி நாடாளுமன்ற கூட்டங்களில் பாஜகவுடன்  காங்கிரசினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வரிந்து கட்டிக் கொண்டு மோதுவார்கள். கூட்டம் முடிந்தபிறகு கேண்டீனில் இந்த கட்சித் தலைவர்கள் ஒன்றாக உட்கார்ந்து சிரித்துப் பேசி தேநீர், சிற்றுண்டி அருந்துவதை அன்றாடம் பார்க்க முடியும். ஆனால் தமிழகத்தில் இதற்கு நேர்மாறாக flowerவும் சட்டமன்றத்திற்கு வெளியில் கூட பரம எதிரிகளாக நடந்து கொள்வார்கள். அதிமுக அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ திமுகவினரின் திருமண விருந்துக்குக்கூட போகத் தயங்குவார்கள்.

இத்தகைய தமிழகத்தில்தான் ஓர் அதிசயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்த்துவரும் கட்சித் தலைவர்கள் ராகுல், ஸ்டாலின், வை.கோ, திருமா, ராஜாத்தி அம்மையார் என பலரும் மருத்துவமனைக்குச் சென்று ஜெயா விரைவில் குணமாக வேண்டும் என்று விரும்புவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகிறார்கள். இத்தகைய அரசியல் நாகரிகம் பாராட்டப்படவேண்டியது.

சமீபத்தில், பாஜகவின் மூத்த தலைவர் இல. கணேசன் மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கலைஞர் கருணாநிதி தனது அறிக்கையில், இல. கணேசனுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் இத்தகைய நட்புறவு பாராட்டப்பட வேண்டும்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திருமா வளவன் வீட்டிற்குச் சென்று அவரிடம்  நட்பு ரீதியில் பேசிவிட்டு வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜய்காந்தை நேரில் சந்தித்துள்ளார்.

அரசியலில் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். அதற்கும் மேலாக அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் நட்புரீதியில் பழகி வருவது சமுதாயத்தில் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும். இனி இதுபோல தொடர்ந்தால் சரி!