‘உல்பா’ அமைப்புடன் பேச்சு மத்திய அரசு விருப்பம்

‘வட கிழக்கு மாநிலங்களில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வகையில், ‘உல்பா’ அமைப்பினருடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது,” என, அசாம் மாநில அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

வடகிழக்கு மாநிலமான அசாமை பிரித்து, தனியாக போடோலாந்து மாநிலம் அமைக்க வலியுறுத்தி, 40 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்த குழுக்களுடன், அரசு, அமைதி ஒப்பந்தம் செய்துள்ளது.இதன் மூலம், நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அசாமில் செயல்படும் மிக முக்கியமான தீவிரவாத அமைப்பான, அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி எனப்படும், உல்பாவுடனும் பேச்சு நடத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.இது குறித்து, அசாம் மாநில கல்வி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, நேற்று கூறியதாவது:போடோலாந்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, போராட்டம் நடத்தி வந்த அமைப்புகளுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது; இது, வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை. இதுபோலவே, வட கிழக்கு மாநிலங்களிலும் நிலவும் மற்ற பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது.’உல்பா’ அமைப்புடன் பேச்சு நடத்த தயார் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெளிவாக தெரிவித்துள்ளார். எனவே, உல்பா அமைப்பினர் இதற்கு சம்மதம் தெரிவித்தால், பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய தயார். பேச்சு நடத்த வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுப்பது, இதுதான் முதல் முறை; இந்த வாய்ப்பை, உல்பா அமைப்பினர் பயன்படுத்த வேண்டும்.

வட கிழக்கு மாநிலங்களில் நிந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே மத்திய, மாநில அரசுகளின் விருப்பம். உல்பா அமைப்பின் தலைவர் பரூவா, பேச்சு நடத்துவதற்கு தகுந்த சூழலை உருவாக்க வேண்டும். வட கிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவ வேண்டும் என்றால், ஒரு சில அமைப்புகளுடன் மட்டும் பேச்சு நடத்தினால் மட்டும் போதாது என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதனால் தான், இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.