ஹிந்து பெண்களை கடத்தி மதமாற்றம் பாகிஸ்தானிற்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த சிறுமியர், பெண்கள் கடத்தப்பட்டு, மதம் மாற்றி, கட்டாய திருமணம் செய்யப்படுவது தொடர்பாக, பாக்., துாதரக மூத்த அதிகாரியை அழைத்து, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில், ஹிந்து மதத்தினர், 2 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர், சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர். கடந்த வாரம், இங்குள்ள மட்டியாரி மாவட்டத்தில், பாரதி பாய் என்ற பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருந்தது.அப்போது, போலீஸ் உடையில், ஆயுத கும்பலுடன் புகுந்த, சாருக் குல் என்ற முஸ்லிம் இளைஞர், பாரதி பாயை கடத்திச் சென்று, முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரம் குறித்து, போலீசிடம் அறிக்கை தருமாறு, சிந்து மாகாண சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், ஹரி ராம் கிஷோரி கேட்டுள்ளார்.இம்மாத துவக்கத்தில், சிந்து மாகாணத்தில், ஜகோபாபாத் மாவட்டத்தில், ஒரு முஸ்லிம் இளைஞர், 15 வயது சிறுமியை கடத்திச் சென்று, மதம் மாற்றி கட்டாய திருமணம் செய்துள்ளார். இதே மாகாணத்தில், ஜன., 14ல், இந்து மதத்தைச் சேர்ந்த, இரு சிறுமியர் கடத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கடந்த, 17ல், டில்லியில் உள்ள பாக்., துாதரக உயர் அதிகாரியை அழைத்து, பாக்.,கில் சிறுமியரும், பெண்களும் கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்படுவதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று, பாரதி பாய் கடத்தல் தொடர்பாக மீண்டும், பாக்., துாதரக உயர் அதிகாரியை அழைத்து, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த உயரதிகாரியிடம், ‘பாக்., அரசு, இந்து பெண்கள் கடத்தல் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அங்குள்ள சிறுபான்மையினர் நலனை காக்க வேண்டும்’ என, இந்தியா வலியுறுத்தியதாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, கடந்த ஆண்டு, டிசம்பரில் பாரதி பாய், முஸ்லிமாக மாறி, பெயரை மாற்றி, தன்னை திருமணம் செய்ததற்கான ஆவணங்களை, ஷாருக் குல், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.அந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.