பா.ஜ., பிரமுகர் கொலையாளிகளை தேடும் பணியில் தனிப்படை தீவிரம்

திருச்சியில், பா.ஜ., பிரமுகர் கொலை சம்பவம் தொடர்பாக, கொலையாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி, வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜய ரகு, 39. பா.ஜ.,வின் பாலக்கரை மண்டல செயலரான இவர், காந்தி மார்க்கெட் பகுதியில், ‘டூ வீலர்’களுக்கு டோக்கன் கொடுக்கும் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு, மார்க்கெட்டில், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் பணியில், விஜய ரகு ஈடுபட்டிருந்த போது, உப்புப்பாறை பகுதியைச் சேர்ந்த முகமது பாபு, 20, சிலருடன் அங்கு வந்தார். விஜயரகுவுடன் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகமது பாபு, மறைத்து வைத்திருந்த அரிவாளால், விஜய ரகுவை கால் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்து, தப்பினார். காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணையில், விஜய ரகு மகளுக்கு, முகமது பாபு காதல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. கடந்த ஆண்டு மே மாதம், முகமது பாபுவுக்கும், விஜய ரகுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், முகமது பாபு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சிலர், ‘முகமது பாபு வெளியில் வந்தால், உன்னை கொன்று விடுவான்’ எனவும் விஜய ரகுவை மிரட்டியுள்ளனர். காந்தி மார்க்கெட் போலீசார், முகமது பாபு மற்றும் சிலர், விஜய ரகுவை அரிவாளால் வெட்டி, தப்பி ஓடியதாக, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகமது பாபு மற்றும் கூட்டாளிகளை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். முகமது பாபு மீது, 2012ம் ஆண்டு முதல், அரியமங்கலம் மற்றும் காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன்களில், 15 வழக்குகள் பதிவாகி உள்ளன. சம்பவத்தன்று, விஜய ரகுவை வெட்டிய போது, பாபுவுடன், இருவர் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

என்.ஐ.ஏ., விசாரணை வேண்டும்

விஜய ரகு குடும்பத்துக்கு ஆறுதல் கூற, நேற்று திருச்சி வந்த, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: ‘குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக, விஜய ரகு பிரசாரம் செய்ததற்காக படுகொலை செய்யப்பட்டவில்லை; மதப் பிரச்னை இதில் இல்லை’ என, மத்திய மண்டல ஐ.ஜி., சொல்லியிருக்கிறார். முகமது பாபு, விஜய ரகுவின் மகளை, ஓராண்டாக தொந்தரவு செய்திருக்கிறார். இதை, விஜய ரகுவின் குடும்பத்தார் தட்டிக் கேட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி கைதான, முகமது பாபு, சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வந்துள்ளார். ஒவ்வொரு முறை, விஜய ரகு குடும்பத்தார் தாக்கப்படும் போதும், போலீசில் புகார் கொடுத்து, பாதுகாப்பு கோரியுள்ளனர். போலீசார் முன் எச்சரிக்கையாக, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தாலோ, முகமது பாபு மீது நடவடிக்கை எடுத்திருந்தாலோ, இந்த படுகொலை நடந்திருக்காது. குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக, துண்டு பிரசுரம் வழங்கிய இடத்தில் வைத்தே, விஜயரகுவை கொலை செய்துள்ளனர். இதன் பின்னணியில் மத அடிப்படைவாதம் உள்ளது. எனவே, இந்த கொலை சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகவை எனும், என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.