தொழிலாளர்களிடம் தேசிய சிந்தனை இருக்கிறது ‘லேபர்’ பட இயக்குநர்

”தமிழ் படங்களில் நிறைய கதைகள் வந்திருந்தாலும் கட்டடத் தொழிலாளர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. அவர்களின் கதையை ஆபாசமில்லாமல், பாட்டுகள் இல்லாமல், சண்டைக் காட்சிகள் இல்லாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லி யிருக்கிறேன்” என்று தனது ’லேபர்‘ படத்தைப் பற்றி பெருமிதத்துடன் விஜயபாரதத்திடம் தெரிவிக்கிறார் இயக்குநர் சத்தியபதி.

தங்களைப் பற்றி…
திண்டிவனம் பக்கத்தில் நல்லாவூர் என்ற கிராமம்தான் எனது ஊர். சினிமா ஆசையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்தேன். ஒளிப்பதிவு, தியேட்டர் ஆப்பரேட்டர், 2, 3 இயக்குநர்களிடம் உதவி இயக்குநர் என பல படி தாண்டி இப்போது இந்தப் படத்தை கதை, ஒளிப்பதிவு செய்து இயக்கினேன்.

முதல் படத்திலேயே கட்டிடத் தொழிலாளர்களைப் பற்றி சொல்லி இருக்கிறீர்களே?
வணிகரீதியில் ஒரு படத்தை எடுப்பதற்குத்தான் முதலில் திட்டமிட்டேன். எனக்கு நிறைய கட்டிட மேஸ்திரிகள் நண்பர்கள். அவர்களின் மூலம் கட்டிடத் தொழிலாளர்
களின் கஷ்டங்கள் புரிந்தது. அதையே எடுக்க ஆரம்பித்தேன். கட்டிட வேலைகளை நேரடியாகக் காட்டியிருக்கிறேன். படத்தில் நடித்தவர்களையும் மேக்கப் இல்லாமல் இயல்பாக காட்டியிருக்கிறேன்.

இதற்காக களப்பணி செய்தபோது மக்கள் மனநிலை எப்படி இருந்தது?
தொழிலாளர்களிடையே தேசிய சிந்தனை இயல்பாக இருக்கிறது. வடமாநில தொழிலாளர்கள் நிறைய பேர் வந்து நம்மூர் தொழிலாளர்கள் மத்தியில் சகஜமாக கலந்துவிட்டதைப் பார்க்க முடிந்தது. சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் நமக்கு உதவியும் செய்தார்கள். படத்தின் கிளைமாக்ஸில் பெண் கட்டிடத் தொழிலாளி, ஹிந்தி கற்க விரும்புவதாக காட்சி வைத்தது பரவலாக கவனத்தை ஈர்த்தது.

”லேபர்” படத்துக்கு ஏதாவது அங்கீகாரம் கிடைத்துள்ளதா?
சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டு காண்பித்தோம். பார்வையாளர்களிடையே பரவலான பாராட்டுதல்களைப் பெற்றது. கோவை சர்வதேச திரைப்பட விழாவில் முதல் பரிசு கிடைத்துள்ளது. தேசிய விருதுக்கான பரிசீலனைக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம்.

இதுவரை “லேபர்” படம் திரையரங்கிற்கு வரவில்லையே?
சிறிய பட்ஜெட் படம் என்பதாலும், கரோனா அபாயத்தாலும் இதுவரை விநியோகஸ்தர்கள் சரிவர கிடைக்கவில்லை. நாங்களே நேரடியாக படத்தை திரையிட நினைத்துள்ளோம். படத்தை ராயல் பார்சுனா கிரியேஷன் தயாரித்துள்ளார்கள்.

சீட்டுப் பணத்தை ஏமாற்றி படம் எடுப்பவர்கள் குறித்து படத்தில் பேசியுள்ளீர்களே?
உண்மையைத் தான் சொல்லியிருக்கிறேன். அப்படி ஏமாறுபவர்களில் கட்டிடத் தொழிலாளர்கள் போன்ற சாதாரண மக்கள் தான் அதிகம். அதனால், பொது வங்கிகளில் முதலீடு, காப்பீடு குறித்த விழிப்புணர்வையும் கூறியிருக்கிறேன்.

படத்தில் திருநங்கை ஒருவர் தலை காட்டுகிறாரே?
அந்த கதாபாத்திரத்தில் வருபவர் ஜீவா சுப்பிரமணியம் என்ற திருநங்கை. அவர்களின் உழைப்பையும், குணத்தையும் நேர்மறையாகச் சொல்லியுள்ளேன். திருவண்ணாமலையை அடுத்த போளூரில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் முத்து. பொறியியல் பட்டதாரியான அவர் தான் படத்தின் நாயகன். நாயகி சரண்யா ரவிசந்திரன் சிறு, சிறு வேடங்களில் நடித்து வந்தவர்.
நடுத்தர வயது கட்டடத் தொழிலாளராக வரும் ஆறுமுகம். இந்த நால்வருக்குமே இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமையும். பார்க்கலாம், படம் வெளிவந்து நிச்சயம் வெற்றி பெறும்.

ஹிந்தி கற்க சொல்வது போல ஒரு காட்சியை வைத்துள்ளீர்களே?
ஹிந்தி மொழியும் நம் நாட்டில் பேசப்படும் மொழிகளில் ஒன்றுதானே? அதைக் கற்க சொல்வதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தவிர, கதைக்கு அத்தகைய காட்சி தேவைப்படுகிறது.மாற்று சினிமா என்ற பெயரில் ’ஏமாற்று’ விதைகளைத் தூவும் திரையுலகின் ஒரு பிரிவினரில் தேசிய விதைகளைத் தூவ நினைக்கும் இயக்குநர் சத்தியபதி வித்தியாசமானவரே.

படம் பேசும் கருத்துகள்
கவனம் சிறிது பிசகினாலும் ஆவணப்பட அலுப்பு தட்டும் கதைக்கருவுடன் கத்தி மேல் நடந்திருக்கிறார் இயக்குநர்.’செட்டிங்’ போடாமல் கட்டிட வேலை நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று படப்பிடிப்பு நடத்தியிருப்பது கூடுதல் பலம்.மூன்று தொழிலாளர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், அப்பாவி மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றும் ஒரு சினிமா தயாரிப்பாளர், திருநங்கைகளின் முன்னேற்றம், சாமானிய தொழிலாளர்களிடம் காணப்படும் சகோதரத்துவம் என படம் பேசும்கருத்துகள் ஏராளம். திரைப்படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால் பின்னணி இசையில் முத்திரை பதித்திருக்கிறார் இசையமைப்பாளர் நிஜில் தினகரன். ஒளிப்பதிவு பட நகர்வின் மற்றொரு பலம்.