வாசிப்பு இயக்கத்தின் சேவை வளர்க!

நாளிதழ்களையும் நூல்களையும் வாசிக்கும் பழக்கம் கடந்த சில தசாப்தங்களாகவே படிப்படியாக குறைந்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் பதிப்புத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இளந்தலைமுறையினர் சமூக ஊடகத்தில் மிகவும் கவனம் செலுத்துகின்றனர். இதை தவறு எனக் கூற முடியாது. காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப மாறுதல் முன்னேற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

சமூக ஊடகங்களில் உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்பட்டபோதிலும் அவற்றின் நம்பகத்தன்மைக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. போலி நாணயம், நல்ல நாணயத்தை துரத்தியடிக்கும் என்று கூறப்படுவதற்கு இணங்க சமூக ஊடகங்களில் மெய்களை பொய்கள் விரட்டியடிக்கின்றன என்ற கூற்றில் உண்மையில்லை என்று கூற முடியாது. கொரோனா காலத்தில் சில அனுகூலங்களும் ஏற்பட்டுள்ளன என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது. வீட்டிலேயே தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து நூல்களை வாசிப்பதில் பலரின் கவனம் திரும்பியது.

இது வரவேற்கத்தக்க மாறுதலாகும். தரமான புத்தகங்கள், வாசிக்கக்கூடிய அளவுக்கு மலிவான விலையில் கிடைத்தால் வாசிப்பின் மீது மக்களின் நாட்டம் திரும்பும், கால ஓட்டத்தில் இது அதிகரிக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.எதையும் உதாரணத்துடன் கூறினால் அதற்கு மதிப்பு அதிகம். மகாராஷ்ட்ராவில் ‘’லெட்ஸ் ரீட் இந்தியா’’ (வாசிப்போம் இந்தியா) என்ற இயக்கம் வாசிப்பை பரவலாக்கவும் விரிவாக்கவும் மேற்கொண்ட முன்னெடுப்பு மகத்தான ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுள்ளது, மெச்சத்தகுந்தது.

குறுகிய காலத்திலேயே இந்த இயக்கம் பத்து லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை சேகரித்துவிட்டது. இந்த இயக்கத்திடம் அனைத்து துறைகள் சார்ந்த புத்தகங்களும் உள்ளன. இந்த இயக்கத்தை உருவாக்கியவர்களின் ஒருவரான பிரஃபுல்ல வான்கடே, நாங்கள் எதிர்பார்த்ததைவிட வாசிப்பு இயக்கத்துக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இதை உந்துவிசையாகக் கொண்டு ஊக்கத்துடன் செயல்படுவோம் என்று உறுதிபட உரைத்துள்ளார்.

இந்த அமைப்பு, வேன்கள் வாயிலாக வாசகர்களின் இருப்பிடங்களுக்கே புத்தகங்களைக் கொண்டு செல்கிறது. நூல்களை வாசிக்க ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கப்படுகிறது. வாசித்த புத்தகத்தைப் பற்றி சுமார் 300 வார்த்தைகளில் வாசகர் விமர்சனத்தை எழுதி சமர்ப்பிக்க வேண்டும் என்பதே நிபந்தனை. இதை பூர்த்தி செய்தால் மட்டுமே, வாசிப்பதற்காக அடுத்த புத்தகம் அளிக்கப்படும்.

மகாராஷ்ட்ராவில் உள்ள எல்லா மாவட்டங்களையும் வாசிப்பு இயக்கம் எட்டிவிட்டது. தொலைதூரத்தில் உள்ள குக்கிராமங்களுக்கும் கூட இந்த அமைப்பின் புத்தக வேன்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பயணிக்கின்றன. இதற்காக பிரத்யேக இணையதளமும் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளதால் எந்த புத்தகம் தேவை என்பதை முடிவு செய்வது சுலபமாக உள்ளது.

இந்த அமைப்பு மகாராஷ்ட்ரா, கோவா, மத்தியபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் செயல்படவேண்டும் என்று தொடக்கத்தில் இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் கொரோனா காரணமாக மகாராஷ்டாவை தாண்டி இதை விரிவுபடுத்தமுடியவில்லை. எனினும் படிப்படியாக அண்டை மாநிலங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும். எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் இது வியாபிக்கும் என்று இந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இதற்காக யூடியூப் சேனல் தொடங்கவும் இவ்வமைப்பினர் உத்தேசித்துள்ளனர்.