ஓ.டி.டி. அத்துமீறல்களுக்கு கடிவாளம்

பாதி உண்மைகள் குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் மீதி பாதி பொய்யின் திரட்சியாக இருக்கும். ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது படத்தை தவறாகப் பிம்பப்படுத்தி அலங்கோலமாக பேஸ்புக்கில் ஒருநபர் பதிவிட்டதால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அவர் கடும் மன உளைச்சலை தாங்க முடியாமல்தான் உயிரை மாய்த்துக்கொண்டார். இதைப்போல கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சில கவனத்தைப் பெறாமலேயே போயிருக்கக்கூடும்.

சமூக ஊடகங்களில் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இதனால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகள் நம்மை கவலையில் ஆழ்த்துகின்றன. ஓ.டி.டி. பிளாட்பாரம்கள், டிஜிட்டல் மீடியா சேனல்கள், சோசியல் மெசேஜிங் சர்விஸஸ் உள்ளிட்டவை நம் சமூகத்தை மாற்றியுள்ளன என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதனால் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர், பயனடைந்தும் வருகின்றனர் என்பதையும் புறந்தள்ளிவிடமுடியாது. ஆனால் அதே நேரத்தில், புதிய வாய்ப்புகள் சவால்களையும் உருவாக்கியுள்ளன. இதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

பிரச்சினை வந்தால் அதற்குத் தீர்வும் கிடைக்கும். பிரச்சினையின் ஆணிவேர் என்ன என்பதை துல்லியமாக அடையாளம் கண்டுகொண்டால் எளிதில் தீர்வை எட்டி
விடலாம். காலத்துக்கு ஏற்ப மாறுதல்கள் கட்டாயம் தேவை. ஆனால் இந்த மாறுதல்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் ஊறு விளைவிக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 2011ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் (இண்டர்மீடியரிஸ் கைட் லைன்ஸ்) 2021ல் திருத்தப்பட்டு புதிய (இண்டர்மீடியரி கைட் லைன்ஸ் அண்ட் டிஜிட்டல் மீடியா எதிக்ஸ் கோட்) விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், கூகுல் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக அரசு எடுத்துள்ள இந்த முதல் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்டவற்றுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். அரசு முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையை சரியான கோணத்தில் புரிந்துகொள்ளவேண்டும்.இந்த விதிமுறைகள் தனிநபர்களின் பேச்சுரிமை சார்ந்த ஜனநாயக சுதந்திரத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடியவை என்று சிலர் விமர்சிக்கிறார்கள். இது மக்களின் பேச்சுரிமையை, கருத்துரிமையை பறிக்கும் முன்னெடுப்பு என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதை வேறொரு கோணத்தில் பார்த்தால் காவல் நாயாக இது விளங்குகிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம். இது உரிமையைப் பறிக்க முற்படவில்லை. மாறாக உரிமை சிதைக்கப்படக் கூடாது என்ற அடிப்படையிலேயே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறைதீர் அமைப்பு
கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்டவை குறைதீர்ப்புக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விதிமுறை கூறுகிறது. இந்த சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல் ஒருவரை அவமரியாதை செய்யும் வகையிலோ அவதூறு செய்யும் வகையிலோ அல்லது ஆபாசமான பிம்பத்தை பதிவு செய்யும் வகையிலோ ஒருவரின் அந்தரக்கத்தை ஊடுருவும் வகையிலோ பணத்தை வெளுக்க ஊக்குவிக்கும் வகையிலோ அல்லது சூதாட்டத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலோ, குழந்தையின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ இருந்தால் அது ஆட்சேபணைக்குறியது. அது தடுக்கப்பட வேண்டியதுதான்.

தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கக்கூடிய தகவலைப் பகிர்ந்துகொள்ள இடமளிக்கப் படமாட்டாது. கலவரத்தைத் தூண்டும் கருத்துக்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது. சாப்ட்வேர் வைரஸை பரப்ப இடமளிக்கப்படமாட்டாது. பொருளாதார ரீதியான முறைகேடுகளை ஊக்குவிக்க எவ்வகையிலும் இடமளிக்கப்படமாட்டாது. தனிநபரை சீண்டவும் இடமளிக்கப்படமாட்டாது. இத்தகைய பிரச்சினைகள் எழுந்தால், இன்டர்மீடியரிஸ் குறைதீர்ப்பு அதிகாரியின் கவனத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயத்தை கொண்டுசெல்லலாம். அவர் 24 மணிநேரத்துக்குள் இதற்கு அத்தாட்சி அளிப்பார். 15 நாட்களுக்குள் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்.

24 மணிநேரத்துக்குள்
அரைகுறை ஆடையுடனோ அல்லது முழு நிர்வாணமாகவோ சம்பந்தப்பட்ட நபரின் படத்தை பிம்பப்படுத்தினால் அல்லது வெட்டி ஒட்டி உருவாக்கப்பட்ட பிம்பத்தை பதிவேற்றம் செய்தால் 24 மணிநேரத்துக்குள் அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பயனருக்கு கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்டவை இது குறித்து முன்கூட்டியே நோட்டிஸ் அனுப்பும், உரிய விளக்கத்தையும் கேட்போம். இதற்கு பிறகே உரிமை நடவடிக்கை எடுக்கும்.

36 மணிநேரத்துக்குள்
நாட்டில் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும், ஊறு விளைவிக்கக்கூடிய விஷயம் என்பது கண்டறியப்பட்டால், 36 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தின் ஆணைப்படியோ அல்லது அரசின் உரிய முகமையின் உத்தரவுப்படியோ சம்பந்தப்பட்ட பதிவு நீக்கப்படும். 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட சமூக ஊடக இண்டர்மீடியரில் மேலே குறிப்பிட்ட ஆட்சேபகரமான விஷயத்தை முதலில் பதிவேற்றம் செய்தவருக்கு ஐந்தாண்டு காலத்துக்கும் மேற்பட்ட தண்டனை கிடைக்கக்கூடிய நிலை சட்ட ரீதியாக எழுந்தால் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பயனர்களின் தனி உரிமையை இது பாதிக்கிறது என்ற கருத்தும் உரக்க ஒலிக்கிறது. குறிப்பிட்ட விஷயத்தை முதலில் பதிவேற்றம் செய்தவர் யார் என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசிடம் பகிர்ந்துகொள்ளவேண்டிய நிலை வந்தால் அது கடும் பிரச்சினையை ஏற்படுத்தும். பெரும்பாலான நிறுவனங்கள் பதிவை முழுமையாகப் படிப்பதில்லை. அதற்கான அவகாசமும் இருப்பதில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கலந்துரையாடலுக்கான பாதுகாப்பான மேடை என்பதை இழந்துவிடவேண்டிய நிலையும் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவிடும் என்பதையும் பலர் எடுத்துரைத்துள்ளனர். ஆனால் பதிவில் அடங்கியுள்ள விஷயத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை என்ற ஷரத்து இதில் இடம்பெற்றுள்ளது என்பதை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஓ.டி.டி. பிளாட்பாரம்களுக்கு நடத்தை விதிகள்
அண்மைக்காலமாக ஓ.டி.டி. பிளாட்பாரம்களில் ஹிந்து கடவுள்களையும் தேவதைகளையும் அவமதிக்கும் பதிவுகள் அரங்கேற்றப்பட்டுள்ளதை பொதுநல நாட்டம் கொண்ட பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக ஓ.டி.டி. பிளாட்பாரம்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவின் மத, இன, பிராந்திய உணர்வுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் கருத்துப் பதிவு இருக்கவேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் வன்முறையைத் தூண்டும் வகையிலோ அல்லது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலோ பதிவு இருக்கக்கூடாது என்பதையும் அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

புகார் அளிக்க வழி
ஓ.டி.டி. பிளாட்பாரம் அல்லது டிஜிட்டல் மீடியாவுக்கு எதிரான புகாரைக் கூறினால் அதன் வாயிலாக இவ்வாறு நிவாரணம் பெறலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சம்பந்தப்பட்ட அமைப்புகளே குறைதீர்ப்பு அலுவலரை நியமித்துக்கொள்ளலாம். அவரிடம், பிரச்சினையை, பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் கொண்டுசெல்லலாம். 24 மணி நேரத்துக்குள் புகாரைப் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை குறைதீர்ப்பு அலுவலர் வழங்குவார். பதினைந்து நாட்களுக்குள் குறையை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட பப்ளிஷர் நடவடிக்கை எடுப்பார்.

இந்த நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர் செல்ஃப் ரெகுலேட்டிங் பாடிக்கு மேல்முறையீடு செய்யலாம். இந்த அமைப்பில் சம்பந்தப்பட்ட பப்ளிஷரும் ஓர் உறுப்பினராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.இதிலும் திருப்திகரமான தீர்வு கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட நபர் கருதினால் ஓவர் சைடு மெக்கானிசத்துக்கு அப்பீல் செய்யலாம். இதை சம்பந்தப்பட்ட அமைச்சகமே அமைத்துள்ளது. சமூக ஊடகத் துறையில் அரசு குறுக்கீடு செய்கிறது, தணிக்கையை திணிக்கிறது, என்றெல்லாம் கூக்குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு பின்னணி என்ன என்பதையும் இதனால் எத்தகைய ஆக்கப்பூர்வ விளைவுகள் ஏற்படுகின்றன என்பதையும் விமர்சகர்கள் பொருட்படுத்தவில்லை.

எனவே, அரசின் நடவடிக்கை பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது என்பது சரியானது அல்ல. ஓ.டி.டி உள்ளடக்கங்களின் வகைப்பாடுகள் ஓ.டி.டி. பிளாட்பாரம்களில் எத்தகைய விஷயங்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்ற என்பது தொடர்பாக வகைப்பாடுகள் உள்ளன. யூ பிரிவின் கீழ் உள்ளவற்றை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் பார்க்கலாம். ஏ பிரிவின் கீழ் உள்ளவற்றை குழந்தைகள் பார்க்க அனுமதியில்லை. ஏ பிரிவின் கீழ் உள்ளவற்றை குழந்தைகள் பார்க்காமல் தடுத்துவிடலாம். அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை ஆபாச காட்சிகள், கற்பழிப்பு, கூட்டு கற்பழிப்பு சார்ந்த பதிவுகளையும் பின்பங்களையும் காட்சிப்படுத்த தேவையான விதிமுறைகளை இந்திய அரசு இயற்றவேண்டும் என்று 2015ல் ஒரு வழக்கின்போது உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.3.2.2020ல் சமூக ஊடகங்களில் ஆபாசங்கள் குறித்து ஆய்வு நடத்திய மாநிலங்களவையின் இடைக்கால குழு, பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு ஆவண செய்யவேண்டும் என்று பரிந்துரைத்தது. எனவே அரசு திடீரென விதிமுறைகளை வகுக்கவில்லை.

தீர்க்கமாக சிந்தித்த பிறகே உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறினால் சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதைப் போன்ற அசம்பாவிதங்கள் அடுக்கடுக்காக அரங்கேறும். எனவே அரசின் செயல்பாட்டில் நியாயம் உள்ளது என்பதை உணர்ந்துகொண்டு தேவையான கட்டுப்பாடுகளை ஆதரிப்பதே விரும்பத்தக்கது, விவேகமானது என்பதே பெரும் பாலானோரின் கருத்தோட்டமாக உள்ளது.
நன்றி : ஆர்கனைசர் (ஆங்கில வார இதழ்); தமிழில் : அடவி வணங்கி