ஆளுமைக் கற்பனைத் திறன்

திரும்பத் திரும்பச் சொல்கிறோம். “நம்முடைய எண்ணங்கள் நல்லபடியாக உயர உயர… வளம்மிகு வண்ணமயமாகும் நம்முடைய வாழ்க்கை”. வெறும் கையில் முழம் போடாமல் நம் கண் முன்னே செய்து காட்டியோர் வெற்றிச் செய்தியைக் கையில் ஏந்திக் கொண்டு சொன்னால் இத்தகைய கிரியேட்டிவ் தத்துவம் நம்பும்படியாக இருக்கும்.

நெப்போலியன் போனபார்ட் – இதுபோன்ற விஷயத்திலும், வெற்றிக் கனியீட்டும் திட் டங்கள் வரைவதிலும் கில்லாடி. முந்தைய ரஷியாவின் முதலாம் அலெக்ஸாண்டர் அரசரின் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் எதிர்கொண்டு தோற்கடிக்கிறார். அப்படி வெற்றி வாகை சூடிய நாள் 7.9.1812.சரி.. நெப்போலியனின் யுக்திதான் என்ன? நம்மூர் ராஜபார்ட் போல தனது சாதனைகளுக்குக் ஆயத்தமாக போருக்கு முந்தைய இரவுகளில் தனது தூக்கத்தைக் குறைத்துக்கொள்வார். பிரெஞ்சு நாட்டு தேசப்படத்தைத் தனக்கு முன்னால் விரித்துப் போட்டுக் கொண்டு தனது சிப்பாய்களைப் பல திசைகளில் … பாதைகளில்… நகர்த்தித் தனது படையின் நகர்வுகள் ஒவ்வொன்றுக்கும் நங்கூரமாகத் திட்டங்கள் பல தீட்டுவாராம். தலை வனுக்கேற்ற மறப் பண்பு அதுதானே.

தாமஸ் ஆல்வா எடிஸனும் – தனது கற்பனைகளைப் படமாக அப்படியே கண்முன்னே கொண்டுவந்து “திட்ட வரை நகல்” தீட்டுகிற வியத்தகு விஞ்ஞானி. லிபி காலம் தொட்டு சிபி ராமசாமி காலம் வரை, ஏன் இன்று வரைக்கும் மருத்துவர், மாணாக்கர் என்று மனக் கற்பனைக் குதிரைகளை ஓடவிட்டு சாதனை படைத்து வருகின்றனர். இவர்களுடைய (அ)சாத்திய கற்பனைகள்தான் பின்னாளில் அற்புதமான சாதனைகளுக்குப் புடம்போட்டன என்பது நாம் நம்மோட ஆழ்மனதில் நிலைநிறுத்த வேண்டிய முக்கியச் செய்தி. நமது வீட்டுச் செல்வங்கள் மேலாண்மை, வேளாண்மை, பொறியியல் என்று பல உயர் படிப்புக்களில சிறந்து விளங்க வேண்டும், சரித்திரம் படைக்க வேண்டும் எனப் பெற்றோர் கேட்கிற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் நேர்மறை விடை கிடைக்கிறதும் பெரும்பாலும் இந்த முறையில்தான்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் எதிர்காலப் பொன்னான பாரதம் காண தற்கால மாணாக்கர்களைக் கனவுகள் காண உற்சாகப்படுத்திய வரலாறு அனைவரும் அறிந்ததே. நமது எண்ணங்களைத் திரும்பத் திரும்ப உருப்போட்டு நம்முடைய ஆழ்மனதுக்கு அவற்றை எடுத்துக் கொண்டு போகிறோம். சிலப்பல நேரங்களில் நம்முடைய ஆழ்மனதிலிருந்து பல நினைவுகளை ஞாபகத்திற்குக் கொணர நம்மால்முடியும்.சில அறுவை சிகிச்சைகளின்போது நோயாளிகளின் உள்கிடக்கைகள் என்னென்ன வென்று ஒரு வரலாறே எழுதுகிற அளவுக்கு பக்கம் பக்கமாக வார்த்தைகளாக வெளியேவரும் நிகழ்வுகளைப் பார்த்தும் இருக்கிறோம். மனோவியலாளர்கள், கிரைம் கண்டுபிடிப்பாளர்கள் இதுபற்றி நிறைய புத்தகங்கள் படைத்திருக்கிறார்கள்.

ஆக, நம்முடைய வாழ்க்கையில் நமது பேரி இலக்குகள், ஆசை எல்லாவற்றையும் மனசில் கற்பனைகளாக ஊறப்போட்டு, அவற்றை விரிவாக்கி விற் பன்னர்களாக உருவெடுப்போம்.அவற்றிற்கான முன் தயாரிப்புகள்தான். நம்முடைய அபிலாஷைகள், கற்பனைகள் அப்புறம் சொல்லவேண்டுமா, அவற்றைத் தொடர்ந்து நாம் சந்திக்கப்போகிற வியத்தகு சாதனைகள் என்பதை.

ஆர்.கிருஷ்ணமூர்த்தி மென்திறன் பயிற்சியாளர்