வேகமெடுக்கும் சிப் உற்பத்தி

பாரதம் உலகில் மகத்தான இடத்தைப் பெற, மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர தேவையானதொரு முன்னெடுப்பை, பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. ஆனால், இது குறித்து நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், நல்ல செய்திகள் எதுவுமே நம்மை வந்து சேராமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வதில் தேர்ந்தவர்கள் நம்மை சுற்றியுள்ள சார்பு ஊடகவாதிகள்.

ஒரு காலத்தில், வால்வு ரேடியோ, டிரான்ஸிஸ்டர் ரேடியோ, யானையளவு கம்ப்யூட்டர்கள் எல்லாம் தற்போது நம் உள்ளங்கைகளில் அடங்கிவிடும் அளவிற்கு சிறியதாகவும் அதிநவீன வசதிகளுடனும் மாறியதற்கு முக்கியக்காரணம் ஐ.சி. (இண்டகிரேட்டட் சிப்) என அழைக்கப்படும் செமிகண்டக்டர்கள்தான். ஒரு மனிதனுக்கு மூளை எவ்வளவு முக்கியமோ அதுபோல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், வாகனங்கள் என அனைத்து விதமான நவீன சாதனங்களும் இயங்க முக்கியமானது இந்த சிப்புகள்.

உலக அளவில் சிப்புகளின் ஒராண்டு தேவை மட்டுமே சுமார் 600 பில்லியன் டாலருக்கும் அதிகம். இந்த உலகளாவியத் தேவைகளை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகள்தான் நிறைவேற்றுகின்றன. தைவான்கூட இதில் சக்கைப்போடு போடுகிறது.ஆனால், நமது பாரதத்தில் சிறந்த மனிதவளம், சிலிகா, இயற்கை வளங்கள் என அனைத்தும் இருந்தும் துரதிருஷ்டவசமாக இன்றுவரை ஒரு செமிகண்டக்டர் தொழிற்சாலைகூட இல்லை. இதனை மாற்ற முடிவெடுத்துள்ள மத்திய அரசு, அந்தப் பெரிய தொழிற்சாலைகளை பாரதத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்துள்ளது.  அழைத்த தும் அவ்வளவு சுலபமாக வந்துவிடுவார்களா இந்த ஜாம்பவான்கள்? அப்படி இங்கே வந்தால் அவர்களுக்கு என்ன லாபம்? ஒரு சிப் தயாரிக்கும் கம்பெனியை நிறுவ பல்லாயிரம் கோடிகள் தேவைப்படும்போது, ஒழுங்காக ஓரிடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தங்கள் தொழிலைத் தேவையில்லாமல் வேறொரு நாட்டிற்கு யாராவது மாற்றுவார்களா?

ஆம், அது தெரிந்துதான் இதற்கு ஓர் அட்டகாசமான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது மத்திய அரசு. ‘எங்கள் நாட்டில் உங்களது தொழிற்சாலைகளை நிறுவுங்கள், எங்கள் அரசிற்கு தேவைப்படும் ஐ.சிக்களை உங்களிடமே வாங்கிக் கொள்கிறோம். ஒரு பில்லியன் டாலர்கள் (சுமார் 7,300 கோடி ரூபாய்) ஊக்கத்தொகை வழங்கப்படும்’ என்று கூறியுள்ளது பாரத அரசு. ஒரு பில்லியன் டாலர்கள் என்பது யாரும் எதிர்பார்த்திராத மிகப்பெரிய ஊக்கத்தொகை. அதுவும் அவர்கள் திறக்கும் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் ஊக்கத்தொகை. இது நிச்சயமாக அனைத்து முன்னணி ஐ.சி தயாரிப்பாளர்களையும் பாரதத்திற்கு ஈர்க்கும். சரி, இதனால் நமக்கு என்ன பயன்? படித்த, திறமையான பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும் லட்சக்கணக்கானவர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். பல இளம் தொழில்முனைவோர் உருவாவார்கள். சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி பெறும். 2026- – 27ல் பாரதத்தில் ஐந்து டிரில்லியன் பொருளாதார கனவு மெய்ப்படும்.