இடியாப்ப சிக்கலில் இம்ரான் கான்

ஏப்ரல் 15 அன்று பிரான்ஸ் அரசு, பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் நாட்டினரையும் தொழில் அதிபர்களையும் தற்காலிகமாக பாகிஸ்தானை விட்டு வெளியேற சொன்னது. பின்னணி இதோ: முகமது நபியின் கேலிச் சித்திரம் 2020 செப்டம்பர் ’சார்லி ஹெப்டே’ என்ற பிரான்ஸ் பத்திரிகையில் வெளியானது; மீண்டும் அதே பத்திரிகையில் அது வெளியானதால், பாகிஸ்தானில் பல நகரங்களில் போராட்டம் என்ற பெயரில் கலவரம் நடக்கிறது. கட்டுப்படுத்த வகை தெரியாமல் பாகிஸ்தான் அரசு தடுமாறுகிறது. கேலிச் சித்திரம் வெளியானதை, கருத்து சுதந்திரம் என பிரான்ஸ் அதிபர் எமானுவல் மெக்ரோன் நியாயப்படுத்திப் பேசியதால், பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரை உடனடியாக வெளியேற்றக் கோரி கடந்த 10 தினங்களாக பாகிஸ்தானில் ஆர்பாட்டங்கள். அதனால் பிரான்ஸ் அரசு உஷாரானது.

கேலிச் சித்திரத்தை மீண்டும் வெளியிட மெக்ரான் ஒப்புதல் அளித்தது கடவுள் நிந்தனை என்று பாகிஸ்தானிய வலதுசாரி கட்சியான, தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் (டி.எல்.பி) கட்சியின் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பாகிஸ்தானில் நாடு தழுவிய அளவில் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்.இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்த பின்னர், பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 15 அன்று போலீஸாருக்கும் தெஹ்ரீக் கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதலில் நடந்த துப்பாக்கி சண்டையில், இரண்டு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டார்கள், 450க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தார்கள். தெஹ்ரீக் கட்சிக்கு பாகிஸ்தான் அரசு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அங்கீகாரமில்லாத ஓர் அரசியல் கட்சியின் போராட்டத்தின் காரணமாக இம்ரான்கான் வழி தெரியாமல் திண்டாடுகிறார். ஆர்பாட்டக்காரர்கள், நவன்கோட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, துணை கண்கானிப்பாளரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். ஏப்ரல் 18 அன்று துணை ராணுவம் வந்து போலீஸ் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த துணை கண்காணிப்பாளரை மீட்டது.

தெஹ்ரீக் கட்சியினர் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பெட்ரோல் டேங்க் லாரியை கடத்தி சுமார் 50,000 லிட்டர் பெட்ரோல் கடத்தியதாகவும் தெஹ்ரீக் கட்சியினரால், மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரும், துணை ராணுவத்தினர் இருவரும் கடத்தப்பட்டதாகவும் லாகூர் போலீஸ் சொன்னது. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 300 போலீஸார் படுகாயம்.சில மாதங்களுக்கு முன் சவூதி அரேபியா, பாகிஸ்தான் தர வேண்டிய ஒரு பில்லியன் டாலர் கடன் தொகையை உடனே திருப்பித் தர வேண்டும் என உத்தரவிட்டது. அதையடுத்து தெஹ்ரீக் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

பிரான்ஸ் நாட்டிற்கு எதிராக நடக்கும் கலவரத்தை அடக்க முடியாததால், பிரான்ஸ் அரசு மக்ரோனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அடுத்த அடி கொடுத்துள்ளது: பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் தனது மிராஜ் போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் அகோஸ்டா 90பி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்துவது பற்றிய உடன்படிக்கைக்கு கைவிரித்தது.இது பாகிஸ்தானுக்கு மற்றொரு அதிர்ச்சி. மெக்ரோன் இஸ்லாத்தின் மீது துவேஷம் கொண்டவர் என இம்ரான் கான் பேசியதை வைத்து இரு நாட்டு உறவு கசந்தது; இந்த அறிவிப்பும் வரவே பாகிஸ்தானின் வளர்ச்சியில் மண் விழுந்தது.

பிரான்ஸ் நாட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன. 2020 நவம்பர் 16 அன்று, பிரான்ஸ் நாட்டின் ஒரு பள்ளியில் சுதந்திரமான பேச்சு பற்றிய பாடம் நடத்திய வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பட்டி, 2015-ல் சார்லி ஹெப்டோ இதழில் வெளியாகியிருந்தமுகமது நபியின் சில கேலிச்சித்திரங்களைதனது மாணவர்களுக்குக் காட்டியுள்ளார். இதன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 18 வயது செச்சன் பயங்கர வாதி, பள்ளிக்கு வெளியே ஆசிரியர் சாமுவேல் பட்டியை தலையை துண்டித்து கொலை செய்தான். இது பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக போராட்டம் வெடிக்கக் காரணமானது. பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்திலும் தெஹ்ரீக் கட்சிக்கு ஆதரவான சூழ்நிலை உருவாகியுள்ளது.

நாட்டின் பல நகரங்களில் பிரான்ஸுக்கு எதிரான வன்முறை நடத்தி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட சில நாட்களுக்குப் பின்னர், சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள வீடியோக்களில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபடப் போவதாக மிரட்டுவதைக் காணலாம். பிரெஞ்சு தூதரை நாட்டிலிருந்து வெளியேற்ற பாகிஸ்தான்அரசு தவறியதாலேயே கலகமும் இந்த மிரட்டலும் வந்துள்ளதாக அந்த வீடியோ பதிவு சொல்கிறது.இதற்கிடையே தெஹ்ரீக் கட்சிக்கு ஆதரவாக தெஹ்ரீக் -இ -தாலிபான் பாகிஸ்தான் கட்சி பாகிஸ்தானில் நடைபெறும் வன்முறை தாக்குதல்களுக்கு முழு ஆதரவு தருகிறது. பாகிஸ்தானில் நடக்கும் வன்முறையைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் இம்ரான் கானுக்கு முழி பிதுங்குகிறது. போதாக்குறைக்கு சீனாவின் நெருக்குதல் வேறு.

-ஈரோடு சரவணன்