வணக்கம்

மூழ்கும் கப்பல் காங்கிரஸ் :

தமிழக காங்கிரஸ் மட்டுமல்ல அதன் அகில பாரதத் தலைமையே அழிவின் விளிம்பில்தான் உள்ளது. காரணம், காங்கிரஸ் எக்காலத்திலும் நேர்மறையான அரசியலை முன்னெடுத்ததே இல்லை. மக்களை ஜாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன் என பிரித்தாளும் சூழ்ச்சியையே அது எக்காலத்திலும் செய்து வந்தது. எந்த விஷயத்தையும் எதிர்மறையாகவே சிந்தித்து செயல்படுத்தி வந்தது என்பதுதான் அதன் தற்போதைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். அவர்கள் தேச முன்னேற்றத்தை குறித்து சிந்தித்ததைவிட சொந்த குடும்பத்தை குறித்து கவலைப்பட்டதே அதிகம்.

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற வெள்ளைக்காரனால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசை கைப்பற்றி, இன்றுவரை தன் குடும்பக் கட்சியாக வைத்திருக்கும் நேருவின் குடும்பம் செய்யும் குடும்ப அரசியல். ஹிமாலய ஊழல்கள், ஏழைகள் குறித்து கவலை கொள்ளாதது, உட்கட்சி ஜனநாயகம், உழைப்பவருக்கு மரியாதை, அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்காதது போன்ற பல காரணங்கள் அடுத்ததாகவே வருகின்றன.

தற்போதுள்ள காங்கிரஸ் கட்சி என்பது, சோனியா, ராகுல், பிரியங்கா என்ற மூவர் மட்டுமே என்ற நிலை உருவாகியுள்ளது. தங்களை எதிர்த்து பேசும் அனைத்து மூத்த தலைவர்களின் அதிகாரங்களும் பிடுங்கப்பட்டுவிட்டன. அவர்கள் அரசியல் அனாதையாக்கப் பட்டுள்ளனர். இந்த குடும்பத்திற்கு ஆமாம் சாமி போடுபவர்களுக்கு மட்டுமே காங்கிரஸ் தலைமையின் கடைக்கண் பார்வை கிடைக்கும். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கு மட்டுமே கட்சியில் பதவியும் தேர்தலில் சீட்டும் கிடைக்கும். இப்படி இருந்தால் காங்கிரஸ் கட்சியில் மலர்ச்சி எங்கிருந்து வரும், எப்படி வளரும்?

காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியை பற்றி அறிய அதிகம் பின்னால் போக வேண்டாம். சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, கடந்த 1984ல் காங்கிரஸ் 49 சதவீத வாக்குகளுடன் பெற்று 415 தொகுதிகளை வென்று ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. அதே சமயம் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க 7 சதவீத வாக்குகளுடன் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்தது. ஆனால், 2014ல் 31 சதவீதத்துடன் 282 தொகுதிகளையும், 2019ல் 37.36 சதவீதத வாக்குகளை பெற்று 303 தொகுதிகளையும் வென்று இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியோ பலமான பெரிய கூட்டணியுடன் இணைந்து போராடியும் 2014ல் 19.52 சதவீத வாக்குகளுடன் 44 தொகுதிகளையும், 2019ல் 19.49 சதவீத வாக்குகளை பெற்று 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தனித்த பெரிய எதிர் கட்சிக்கான அந்தஸ்தைகூட அது கடந்த இரண்டு தேர்தல்களில் இழந்துவிட்டது என்பதே உண்மை.

காங்கிரஸின் வீழ்ச்சியும் பா.ஜ.கவின் எழுச்சியும் குறித்து ஆராய்ந்தால், ஒரு தேசியக் கட்சியின் வளர்ச்சிக்கு அடிப்படை தேசப்பற்றுதானே தவிர சுயநலம் அல்ல. ஒரு கட்சியின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணம் எதிராளியல்ல. தன் சொந்த மக்கள் நலனை விட தேச மக்களின் நலனே முக்கியம் போன்றவையே பதிலாக கிடைக்கும். ஒரு கட்சியின் ஆக்கமும் அழிவும் அக்கட்சியின் செயல்பாட்டிலும் மக்கள் அதன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையிலுமே உள்ளது. சூழ்ச்சி, தந்திரம் போன்றவற்றில் இல்லை. அப்படி ஒருவேளை சூழ்ச்சியால் வெற்றி கிடைத்தாலும் அது நீண்ட காலம் நிலைக்காது என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது.

  • மதிமுகன்