யாருக்கு வெற்றி?

தமிழகம் அவ்வளவுதான். இனி அதனை திராவிடம் எனும் படுகுழியிலிருந்து அதனை மீட்கவே முடியாது என்று கவலையோடு இருந்த தேசியவாதிகளுக்கு உற்சாகம் தந்துள்ளது உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க பெற்ற வாக்குகள்.

தி.மு.கவின் அரசியல் பலம், மாபெரும் கூட்டணி, அதிகார பலம், பணபலம், ரௌடிகள் பலம், ஊடக பலம், சிறுபான்மையினர் வாக்கு வங்கி, காவல்துறை ஒத்துழைப்பு, தூங்கிய மாநில தேர்தல் ஆணையம், வாக்குகளை பிரிக்க எடுக்கப்பட்ட உத்திகள் என அனைத்தையும் தாண்டி இந்த வெற்றி கிட்டியுள்ளது. ஒற்றை ஓட்டு பா.ஜ.க என கிண்டலடித்த திராவிட கும்பலின் கதறல்களை ஆங்காங்கே கேட்க முடிகிறது. அவர்களின் மனத்தில் எழுந்துள்ள பயம் வெளிப்படையாகவே தெரிகிறது. இனி அதிரடியாக பல நல்ல அரசியல் மாற்றங்கள் நிகழும் என தோன்றுகிறது.

இத்தனைக்கும் ஒரு ரூபாய்கூட வாக்காளர்களுக்கு அளிக்காமல் நேர்மையாக தேர்தலை சந்தித்தது பா.ஜ.க. தனியாகவே போட்டியிட்டது. 12,000 இடங்களில் சுமார் 4,000 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. இவை அனைத்தும் மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். பா.ஜ.க வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய கிடைத்தது 15 நாட்களுக்கும் குறைவே. எனினும் இந்த அதிசயம் நிகழ்த்தப்பட்டுள்ளது. பல வார்டுகளில் அ.தி.மு.க தோல்விக்கு காரணமாக இருந்தது பா.ஜ.கதான். சில இடங்களில் தி.மு.கவும் அழகாக ஓரம் கட்டப்பட்டது.

வார்டுகள் அடிப்படையில் அதிகப்படியான வெற்றி இல்லை என்றாலும் வாக்கு வங்கியில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது பா.ஜ.க. இதே வேகத்தில் பயணித்தால் வரும் 2024ல் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 2026ல் தமிழகத்தின் ஆட்சி அல்லது வலுவான எதிர்கட்சி என்ற இடத்தை பா.ஜ.க பிடிப்பது சாத்தியமே என்ற உற்சாகம் எழுந்துள்ளது. இதற்கு பாடுபட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். முக்கியமாக, தேசிய உணர்வுடன் நம்பிக்கையுடன் பா.ஜ.கவுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.

இனி தமிழகம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. விரைவில் திராவிட மாயை அகலும்; தேசியம் ஜெயிக்கும் என்றே தோன்றுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால், இத்தேர்தலில் உண்மையாகவே வெற்றி பெற்றது பா.ஜ.கவும் மக்களும் அமைத்த கூட்டணிதான். இந்த வெற்றியை கொண்டாட வேண்டியவர்களும் அவர்கள் மட்டும்தான்.

மதிமுகன்