இறுக்கும் இரு தங்கங்கள்

பொன் என்ற மஞ்சள் நிறத் தங்கம் தெரியும். இன்னொரு தங்கம்? கருப்புத் தங்கம் என்றழைக்கப்படும் பெட்ரோல்தான் அது. பலர் காலையில் தினசரியில் தவறாமல் பார்ப்பது இன்றைய விலை கிராமுக்கு / லிட்டருக்கு என்ன? பெட்ரோல், – டீசல் விலை அப்படி அல்ல. ஒரு மொபெட்டையோ டிவிஎஸ் 50 வண்டியோ வைத்துக்கொண்டு கடை கடையாக அப்பளம்,- பிஸ்கட்-, மிட்டாய் கொண்டு சென்று வியாபாரம் செய்யும் சிறு வணிகர்கள், கடனுக்கு ஆட்டோ வாங்கி ஒட்டி சம்பாதிக்கும் ஒரு எளியவர் போன்றவர்களை நினைத்துப் பாருங்கள். அதைவிட மத்திய தர வர்க்கத்தினரின் நிலை ஒருவிதத்தில் இன்னமும் கவலைக்குரியது.
நிதி நிறுவனங்களின் கவர்ச்சியான விளம் பரங்களில் மயங்கி இரு சக்கர வாகனமும் புற நகரப் பகுதியில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடும் வாங்கியாயிற்று., அந்த விதத்தில் விலையுயர்வு மத்தியமர்களுக்கு மத்தளம் போல் இரு பக்கமும் அடி.

நிதர்சனம் இதுதானே!

பொருளாதார அறிஞர்களைக் கேட்டால் தங்கத்தில் முதலீடு செய்வது வீண் என்பார்கள். ‘தங்கத்தை இறக்குமதி செய்வதற்காக நாம் எவ்வளவு அந்நியச் செலவாணியை ஒதுக்க வேண்டியுள்ளது.  அதன் பொருளாதார தொடர் விளைவுகளை ஏற்படுத்துகிறது பாருங்கள்’ என்றெல்லாம் புள்ளி விவரங்களை அடுக்குவார்கள். இது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி யோசிக்கும் போது திட்டமிட சரிதான். ஆனால் ஒரு இல்லத்தரசியிடம், ஒரு சிறு – குறு விவசாயிடம், ஒரு சிறு வணிகரிடம் சென்று கேளுங்கள். அவர்கள் ‘எதிர்பாராத, அவசரத் தேவைகளுக்கு தங்கம் எப்படி கை கொடுக்கிறது’ என்று உங்களுக்குப் புரிய வைப்பார்கள். அதனால்தானே கிராமங்களில் உள்ள கிளைகளில் மட்டும் நகைக்கடன்களை கொடுத்துக் கொண்டிருந்த வங்கிகள் (தனியார் வங்கிகள் உட்பட), இன்று மாநகரக் கிளைகளில் கூட கொடுக்கிறார்கள். தேவை பெருகியதால் தானே, இந்த போக்கு தென்படுகிறது. மூவாசைகளைத் துறக்க வேண்டும் என்று முன்னோர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்து விட்டார்கள் தினசரியில்/ தொலைக்காட்சியில் அன்றாடம் படிக்கிறோம் / பார்க்கிறோம் நகைப்பறிப்பு செய்திகளை. ஆனால், தங்கத்தின் மோகம் போகவில்லை. சரி, இப்படியே விட்டு விடலாமா என்றும் இருக்கவும் முடியாது தானே?

அரசுகள் என்ன செய்ய முடியும்?

பெட்ரோல், – எரிவாயுவை எடுத்துக்கொண்டால் அரசு தரப்பிலிருந்து யோசித்தால் பல நெருக்கடிகளுக்கு நடுவிலும் அரசு கையைக் கட்டிக்கொண்டு இருந்து விடவில்லை என்பது புலப்படும். பெட்ரோலுக்கு மாற்றாக மின் மோட்டார் வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளை வேகப்படுத்துகிறார்கள். சமையல் எரிவாயுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கோபர் காஸ் முதல் சூரிய ஒளி சக்தி அடுப்பு வரை பரப்புரை செய்கிறார்கள். மானியம் அளித்து நம் செலவைக் கட்டுப்படுத்துகிறார்கள். பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துகிறார்கள். குறிப்பாக, 2014க்குப் பிறகு மத்திய அரசு சாலை/ரயில் கட்டு மானங்களை விரைவுபடுத்தியுள்ளது. அதே போலத் தான் பல நகர் / மாநகர மெட்ரோ ரயில் திட்டங்களும்.

சென்னை ஒன்றே போதுமே நாம் புரிந்து கொள்ள

சமையல் எரிவாயு வசதி பல கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ‘உஜ்வலா’ திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் மேலும் ஒரு கோடி குடும்பங்களுக்கு வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. பெட்ரோல்/சமையல் எரிவாயு போன்றவற்றை சாலை வழியாக டாங்கர்களில் கொண்டுசெல்வதற்குப் பதிலாக குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டமும் விரைவு படுத்தப்படுகிறது. அதனால், எரிபொருள் செலவு, சுற்றுச்சூழல் மாசு, சாலை நெருக்கடிகள், விபத்துகள் குறையும். இந்தாண்டு 10 மாநகரங்களில் வீடுகளுக்கு குழாய்வழி எரிவாயு இணைப்பு கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தங்கத்தின் விலையைப் பொறுத்தவரையில் அரசு வசமுள்ள வாய்ப்புகள் குறைவு. இதன் விலையை சர்வதேச சந்தையே நிர்ணயிக்கிறது. – அதிகம் போனால் இப்பொழுது செய்துள்ளது போல இறக்குமதி வரியைக் குறைக்கலாம். தங்க சேமிப்புப் பத்திரங்களில் முதலீட்டை ஊக்குவிக்கலாம்.

நம் பொறுப்பு என்ன?

நாம் நம் அளவில் எப்படியெல்லாம் எரிபொருள் சிக்கனத்தைக் கடை பிடிக்கலாம் என்று திட்டமிட்டு ஒரு பகுதியிலிருந்து ஒரே திசையில் காரில் / ஸ்கூட்டரில் வேலைக்குச் செல்பவர்கள் கூட்டாக சேர்ந்து செலவைப் பகிர்ந்து கொண்டு பயன் பெறலாம். நிறுவனங்களின் கூட்டமைப்பின் என்ற எரிபொருள் வலைதளத்தில், பொதுமக்கள் முதல் பெரிய பெரிய ஆலைகள் வரை எப்படி எரிபொருளைச் சேமிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம். தங்கத்தைப் பொறுத்தவரையில் சுய கட்டுப்பாடு ஒன்று தான் வழி. தங்க சேமிப்பு பத்திரங்கள், தங்க இ.டி.எப் போன்ற திட்டங்களில் விவரம் அறிந்து சிறுகச்சிறுக முதலீடு செய்லாம்.