இன்றைய தேவை பாரத செயலிகள்

இந்திய அரசாங்கம் நடத்திய ஆத்மநிர்பர் செயலிகள் போட்டியில் இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்ற செயலி தான் இந்த “கூ” (KOO). பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்த செயலியின் சிறப்பு அம்சங்களை “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பகிர்ந்தார். கூகுள் நிறுவனம் நடத்தும் போட்டியான அன்றாடம் பயன்படும் செயலிகளில் ஒன்று என சிறப்புப் பரிசும் பெற்றது.

அப்ரமேய ராதாகிருஷ்ணா மற்றும் மயாங்க் பிடவட்கா கடந்த மார்ச் 2020, இந்த செயலியை வெளியிட்டனர். மிகக் குறுகிய காலத்தில் பத்து லட்சம் தரவிறக்கங்களைத் தாண்டி சமூகவலைதள செயலிகளுள் 7’வது இடத்தில் தற்போது உள்ளது. மொபைல் எண்ணுடன் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளதால் போலிக் கணக்குகள் தவிர்க்கப்படும். ‘கூ’ செயலியிலே மொபைல் எண்ணுடன்தான் உள்ளே நுழையவே முடியும். தள வடிவமைப்பும் வண்ணப்பூச்சும் சிறப்பாக உள்ளது. தொடர்பவர்களைக் காட்டுவது, யார் எத்தனை பேர் தொடர்ந்திருக்கிறார்கள் என சொல்வது முதலானவையும் சிறப்பாக உள்ளது.

டிவிட்டரின் முக்கிய அம்சமான ஹேஷ்டேக் டிரெண்டிங்க் இங்கேயும் உள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மாற்றாக இங்கே ஆத்மநிர்பர் திட்டத்தின்மூலம் இதுபோல பல செயலிகள் அறிமுகப்படுதப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. டிக்டாக் செயலிக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட மித்ரன், சிங்காரி போன்றவையும் வாட்ஸப்புக்கு மாற்றாகத் தயாராகி வரும் சந்தேஷ் போன்றவையும் நம் நாட்டின் தொழில்நுட்ப திறனை, நமது இளைஞர்களின் உத்வேகத்தைக் காட்டுகின்றன.

இந்திய செயலிகளின் அவசியத்திற்கான காரணம் வெளிநாட்டின் செயலிகளான பேஸ்புக், டுவிட்டர் போன்றவை நமது ஸ்திரத் தன்மையை சோதித்துப் பார்ப்பதுடன், இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியாக நமது நாட்டின் தேர்தல்களில் தலையிடுவது, நமது நாட்டைப் பற்றிய அவதூறான செய்திகளைப் பரவ விடுவது, நமது முப்படைகளின் ரகசியத்தை கசிய விடுவது போன்ற செயல்களுள் ஈடுபடுவது தான்.

ஆத்மநிர்பர் திட்டத்தின் மூலம் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் இன்று பல நாடுகளுக்குப் பயன் அளிப்பதுபோல் மென்பொருள் தொழில்நுட்பத்தில் எந்த நாட்டுக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத்தான் சுதேசித் தயாரிப்பான இந்த செயலிகள் மீண்டும் உலகிற்கு உணர்த்துகின்றன. நமது தயாரிப்புகளை நாம் முன்னெடுத்து செல்வதுடன், அயல்நாட்டு தயாரிப்புகளை தள்ளிவைப்போம். யோகாவில் மட்டும் அல்ல, மருத்துவத்திலும், மென்பொருள் தயாரிப்பிலும் நமது நாடு எப்பொழுதும் முன்னோடியாக இருக்கும் என நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதை மெய்ப்படச் செய்வோம்.