ம.தி.மு.கவை கைகழுவிய திருப்பூர் துரைசாமி

ம.தி.மு.க அவைத்தலைவராக இருந்தவர் திருப்பூர் துரைசாமி. ம.தி.மு.க தலைவர் வைகோவின் மகன் துரை வைகோ கட்சி பொறுப்புகளில் தலையிடுவதையடுத்து இவர் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதுகுறித்து சமீபத்தில் அவர் வைகோவுக்கு எழுதிய கடிதத்தில், ‘மதிமுக கட்சியை துவங்கியபோது வாரிசு அரசியலுக்கு எதிரான வைகோவின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் அண்மைக்காலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக பல கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்துவிட்டனர். கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துள்ளது. இதை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. தொண்டர்கள் மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க ம.தி.மு.க’வை தாய் கட்சியான தி.மு.கவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது’ என வலியுறுத்தியிருந்தார். ஆனால் இதுகுறித்து துரைசாமி ஒரு அறிக்கை வெளியிட்டதத் தவிர, வைகோ தரப்பில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் துரைசாமி தி.மு.கவில் இணைவார் என கூறப்பட்டது. இந்த சூழலில், ம.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக துரைசாமி அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உண்மைத் தொண்டர்களுக்காக கட்சியை தி.மு.கவுடன் இணைத்து விடுவது நல்லது. ஏனெனில் ம.தி.மு.கவுக்கு என்று தனியாக எந்த எதிர்காலமும் இல்லை. எனவே, மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். அதே வேளையில், எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணமும் இல்லை. ஆனால் கோவை பெரியார் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடிக்கிறேன்” என கூறினார்.