பயங்கரவாதத் தலைவர் படம் வெளியானது

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ‘இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அல் கொய்தா’ (ஏ.கியு.ஐ.எஸ்) 2019ல் கொல்லப்பட்ட அதன் தலைவர் அசிம் உமரின் முதல் வீடியோவை வெளியிட்டது. அவர் உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் பிறந்தவர். அந்த வீடியோவில் உமர், சக பயங்கரவாதிகளிடம் உரை நிகழ்த்துகிறார். உமர் 1970களில் உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் பிறந்தார், பின்னர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். அவர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்வதற்கு முன்பு தாருல் உலூம் தியோபந்தில் படித்ததாக கூறப்படுகிறது. சனா உல் ஹக் அல்லது அசிம் உமர் ஏ.கியு.ஐ.எஸ் அமைப்பின் தொடக்கத்திலிருந்து தலைவராக இருந்தார். அல் கொய்தாவின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள மூசா கலா மாவட்டத்தில் உள்ள தலிபான் மறைவிடத்தின் மீது அமெரிக்கா ஆப்கானிஸ்தான் அரசுகளின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் செப்டம்பர் 23 அன்று கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அவரது கொலை ஒரு பெரிய திருப்புமுனையாக பார்க்கப்பட்டது. எனினும், அவரது அடையாளம் அல் கொய்தாவால் பாதுகாக்கப்பட்டது. அசிம் உமரிடம் அறியப்பட்ட டிஜிட்டல் தடம் எதுவும் இல்லை. அவர் எந்த எந்த உரையாடல் பதிவு செய்தியையும் வெளியிடவில்லை, புகைப்படம் கூட எடுக்கப்படவில்லை. எனவே இந்த வீடியோ வெளியீடு அசாதாரணமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அல் கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த முகமது ஆசிப் மற்றும் அப்துல் ரெஹ்மான் ஆகியோரை டெல்லி காவல்துறை கைது செய்ததைத் தொடர்ந்து அசிம் உமரின் அடையாளம் சனா உல் ஹக் என்பது பகிரங்கமானது. இந்த கைதுகள் பாதுகாப்பு முகமைகளுக்கு ஏ.கியு.ஐ.எஸ் தலைவரின் ஓவியத்தை தயாரிக்க உதவியது. அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அசிம் உமர், பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் வசித்து வந்தார். அவர், தியோபந்தில் உள்ள தாருல் உலூம் செமினரியில் பட்டம் பெற்றவர். பின்னர், பாகிஸ்தானுக்குச் சென்ற அவர், தனது குடும்பத்தினருடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டார். பயங்கரவாதி மசூத் அசார் நிறுவிய பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஹர்கத் உல் முஜாஹிதீனில் அவர் சேர்ந்தார். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இஸ்லாமாபாத்தின் லால் மசூதியின் தலைவரான அப்துல் அஜிஸ் காசிக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஒரு பெரிய பயங்கரவாத வலையமைப்பு மறுசீரமைப்பின் போது அவர் அல் கொய்தாவுக்கு மாறியதாக தெரிகிறது.