மனத்தின் குரல்

பிரதமரின் மனத்தின் குரல் நிகழ்ச்சியின் 88வது உரையில் இடம்பெற்ற சில தகவல்கள்:

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இந்த முறை அதிகபட்ச கடிதங்களும், செய்திகளும் தேசத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பிரதம மந்திரி அருங்காட்சியகம் குறித்து வந்துள்ளது. இம்மாதம் அம்பேத்கரின் பிறந்த நாளன்று பிரதம மந்திரி அருங்காட்சியகம் நாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. குருகிராமை சேர்ந்த சார்த்தக் என்ற ஒரு நேயர், பிரதம மந்திரி அருங்காட்சியகத்தைப் பார்த்து விட்டு, பல ஆண்டுகளாக செய்தி மின்னூடகங்கள், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்களோடு தொடர்பில் இருப்பதால் தன்னுடைய பொது அறிவு நன்றாக இருக்கும் என்று கருதியதாகவும், ஆனால் பிரதம மந்திரி அருங்காட்சியகம் சென்றபோது, நாட்டிற்குத் தலைமை தாங்குவோர் பற்றிய பல விஷயங்கள் தனக்குத் தெரியவில்லை என்பதை உணர்ந்ததாகவும் செய்தி அனுப்பியுள்ளார்.

சுதந்திரத்தின் அமிர்த மஹோத்ஸவமானது ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளித்து வருகிறது என்பது தேசத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒன்று. வரலாறு தொடர்பாக மக்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது என தெரிவித்த பிரதமர், ரயில் அருங்காட்சியகம், தபால் தலைகளின் தேசிய அருங்காட்சியகம், திரைப்பட அருங்காட்சியகம், பாரம்பரிய, கலாச்சார பொருட்கள் கொண்ட அருங்காட்சியங்கள் போன்ற பல்வேறு அருங்காட்சியகங்களை மக்கள் பார்வையிட்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்படி கோரிக்கை விடுத்தார்.

ரொக்கமில்லா டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை குறித்து பேசிய பிரதமர், இதனை நேரடியாக செயல்படுத்த பரிசோதனை முயற்சி செய்த டெல்லியை சேர்ந்த இரு பெண்களான சாகரிகா, ப்ரேக்ஷாவை குறித்துக் கூறினார். இவர்கள், கைகளில் பணமின்றி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே ஊர் சுற்றி வந்தனர். தள்ளுவண்டிக் கடைகளிலும், இணைய வசதி இல்லாத இடங்களிலும்கூட கூட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொண்டனர் என்பதை விளக்கி, மக்களும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை முயற்சித்துப் பார்க்க தூண்டினார்.

மேலும், நமது தேசத்தில் சுமார், 20,000 கோடி ரூபாய்க்கான பணப்பரிவர்த்தனைகள் நாளொன்றிற்கு நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில், யு.பி.ஐ பரிவர்த்தனை சுமார் 10 இலட்சம் கோடி ரூபாயை எட்டியது. தேசத்தில் நிதித்துறையில் தொழில்நுட்பத்தோடு இணைந்த பல புதிய ஸ்டார்ட் அப்புகளும் முன்னேற்றம் கண்டு வருகின்றன என மோடி தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகளின் அசாதாரணமான திறமைகளின் ஆதாயம், தேசத்திற்கும் உலகிற்கும் கிடைக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளால் என்ன சாதிக்க முடியும் என்பதை டோக்கியோ பேராலிம்பிக்ஸிஸ் நிரூபித்தது. இந்த நண்பர்களுக்குத் தொழில்நுட்பத்தின் சக்தி கிடைக்கும்போது, இவர்கள், மேலும் பெரிய சாதனைகளைப் படைக்கின்றார்கள். தேசத்தின் பல ஸ்டார்ட் அப் அமைப்புகளும் கூட, இத்திசையில் பணி செய்து வருகிறார்கள் என கூறிய பிரதமர், அப்படிப்பட்ட ஒரு அமைப்பான ‘வாய்ஸ் ஆப் ஸ்பெஷல்லி ஏபில் பீப்புள்’ என்ற அமைப்பைக் குறித்து எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு சொட்டு நீரும், அமிழ்துக்கு ஒப்பானது என, நீர் பராமரிப்பு குறித்து பேசிய மோடி, அமிர்த மஹோத்சவத்தின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகளை உருவாக்குவது, நாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஒரு போராட்ட வீரரின் நினைவுச் சின்னத்தை அந்த அமிர்த நீர்நிலையோடு இணைப்பது குறித்து மக்களுக்கு ஊக்கமளித்தார். இளைஞர்கள் இந்த இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என கோரிய அவர், அதற்கு உதாரணமாக, சமீபத்தில் யூபியின் ராம்புரின் கிராமப் பஞ்சாயத்து நிலத்தில் மாசடைந்து இருந்த ஒரு குளம், பஞ்சாயத்து அமைப்பின் தீவிர முயற்சியால், அந்தப் பகுதி மக்கள், பள்ளிக் குழந்தைகளின் உதவியோடு மீளுயிர் பெற்றது. குளத்தின் கரைகளில் தடுப்புச் சுவர்கள், சுற்றுச் சுவர்கள், உணவிடங்கள், நீரூற்றுக்கள், ஒளியமைப்புகள் என பலவகையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டது குறித்து எடுத்துரைத்தார்.

உலகிலே நீர் தான் அனைத்து உயிர்களின் வாழ்வாதாரம். ஆகையால் தான் நமது முன்னோர்கள், நீர் பராமரிப்பிற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். நீரின் இருப்பும் தட்டுப்பாடும் தேசத்தின் முன்னேற்றத்தையும், வேகத்தையும் தீர்மானிக்கும். மனத்தின் குரலில், தூய்மை போன்ற பல விஷயங்களோடு கூடவே நான் நீர் பராமரிப்பு பற்றி மீண்டும் மீண்டும் கூறிவருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் நீரின் அவசியம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிந்து, ஹரப்பா போன்ற நாகரீகங்களில் கூட நீர் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது என கூறிய நரேந்திர மோடி, குஜராத். கட்சின் ரணிலே இருக்கும் மால்தாரி பழங்குடியினர், மத்திய பிரதேசத்தின் பீல் பழங்குடியினர் அக்காலம்தொட்டு தண்ணீர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதையும் உதாரணம் காட்டினார்.

சில நாட்கள் முன்பாக, மாணவர்களோடு தேர்வுகளை எதிர்கொள்வோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்த பிரதமர், சில மாணவர்கள் கணிதப் பாடம் பயமுறுத்துவதாக கூறினர். கணிதம் பாரதியர்கள் அனைவருக்கும் சுலபமானதாக இருக்க வேண்டும். விஞ்ஞானத்தின் அனைத்துக் கோட்பாடுகளும் ஒரு கணித சூத்திரத்தின் மூலமாகவே விளக்கப்படுகிறது. கணிதம் தொடர்பாக மிக அதிகமாக ஆய்வுகளும், பங்களிப்புக்களும் அளித்தவர்கள் நம் நாட்டவர்கள்தான். நமது தேசத்தவர்கள் பூஜ்யம் என்பதை கண்டுபிடித்திருக்காவிட்டால் உலகில் இத்தனை விஞ்ஞான முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்காது. நாம் பூஜ்யத்தை மட்டுமல்ல, கூடவே முடிவிலி அதாவது இன்ஃபினிட்டியையுமே கூட வெளிப்படுத்தி இருக்கிறோம். பில்லியன், டிரில்லியன் என்பதைத்தாண்டி வரிசைப்படுத்தியுள்ளோம். உதாரணமாக, ஒரு மஹோக் என்பது ஒன்று என்ற எண்ணிற்குப் பிறகு 62 பூஜ்யங்கள் கொண்டது என கூறினார்.

நமது தேசத்தில் பைனரி எண்களை குறித்து சிந்தித்த ஆச்சார்யர் பிங்களர் போன்ற ரிஷிகள், வேத கணிதத்தை வெளிப்படுத்திய ஸ்ரீ பாரதீ கிருஷ்ண தீர்த்த ஜி மஹாராஜ், ஆரியபட்டர் தொடங்கி ராமானுஜன் வரை, கணிதத்தின் பல கோட்பாடுகள், நம் நாட்டிலே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என தெரிவித்த பிரதமர், வேத கணிதத்தைக் கற்பிக்கும் கொல்காதாவின் கௌரவ் டேகரீவால் என்பவருடன் இதுகுறித்து நேரலையில் உரையாற்றினார்.

முடிவில், மக்கள் தங்கள் ஆலோசனைகளை நமோ செயலியிலும், மைகவ் வாயிலாகவும் அனுப்பிவைக்க கோரிய பிரதமர், வரும் நாட்களில் ஈத் பண்டிகை, அட்சய திரிதியையும், பகவான் பரசுராமரின் ஜெயந்தி, பைசாக் புத்த பூர்ணிமா போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றன. அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளுக்கான நல்வாழ்த்துக்கள். இந்தத் திருநாட்களை உல்லாசமாகவும், சகோதரத்துவத்தோடும் நன்றாகக் கொண்டாடுங்கள்.  கொரோனா தொடர்பாகவும் விழிப்போடு இருங்கள் என தெரிவித்தார்.