காத்திருந்தால் போதும், தடுப்பூசி சக்தி தரும்

சமீபகாலமாக கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா நோய் ஏற்படுவது குறித்து மக்களிடையே ஐயம் ஏற்படுகிறது. இதைக்களைய வேண்டிய கடமை நமக்கு உண்டு. தற்போது நமது நாட்டில் வழங்கப்பட்டுவரும் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளாலும் கொரோனா நோயை உருவாக்க இயலாது. பிறகு எப்படி தடுப்பூசி பெற்றவர்களுக்கு கொரோனா ஏற்படுகின்றது?

கொரோனா வைரஸ் ஒருவரை தொற்றிய பின் அதன் அறிகுறிகளான காய்ச்சல், இருமல் போன்றவை தோன்றுவதற்கு மூன்று நாள் முதல் இரண்டு வாரம்வரை ஆகலாம். சராசரியாக ஐந்து நாட்களில் அறிகுறிகள் தோன்றும். அதாவது, வெள்ளிக்கிழமை ஒருவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு ஞாயிறு அன்று காய்ச்சல், நுகர்தல் சுவைத்தல் திறன் இழப்பு போன்றவை தோன்றினால் அது தடுப்பூசியினால் ஏற்பட்டது என நினைத்துவிடக் கூடாது.

அந்த நபர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முந்தைய சில நாட்களில் ஏதோ ஒரு குடும்ப நிகழ்வில் அல்லது பொது இடத்தில் இருந்து தொற்றைப் பெற்றிருக்கிறார் என அர்த்தம். தொற்று உள்ளே வந்து அறிகுறிகள் தோன்றும் வரை அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக, ‘கோவிஷீல்டு’க்கு முதல் டோஸில் இருந்து 22 நாட்கள் காத்திருக்க வேண்டும். ‘கோவேக்சினு’க்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டு 28 நாட்கள் காத்திருக்க வேண்டும். எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்ட உடனே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடுவதில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு கொரோனா வராது என்பதில்லை. வந்தால் சீரியஸ் ஆகாது.
(ஒரு டாக்டர் தரும் தகவல்)