பஸ்தார் பழங்குடியினரின் புதுமையான துணிவகைகள்

பஸ்தார் என்றாலே மாவோயிஸ்டுகள் அடிக்கடி அட்டூழியம் நடத்தும் மாவட்டம் என்னும் பிம்பம்தான் பரவலாக மேலோங்கி யுள்ளது. காட்டுப்பகுதியில் அரசுக்கு இணையாக மாவோயிஸ்டுகள் போட்டி அரசு நடத்துவது படிப்படியாக காலாவதியாகிக் கொண்டிருக்கிறது.

பஸ்தார் பழங்குடியின மக்களின் அருமை களையும் பெருமைகளையும் வெளிச்சப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப் பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பஸ்தார் மாவட்டம் இயற்கை வளம் மிக்கது. இங்குள்ள பழங்குடியினர் கலைத்திறன் மிக்கவர்கள். துணி, மூங்கில், உலோகம், சுடுமண் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி ஈர்ப்புமிக்க படைப்புகள் பலவற்றை உருவாக்கியுள்ளனர். பழங்குடியினர் உடைகளைப் பிரபலப்படுத்துவற்காக அண்மையில் திருவிழா நடத்தப்பட்டது. இது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

பஸ்தார் மாவட்ட ஆட்சியர் ரஜத் பன்ஸால் மகோத்ஸவத்தை வெகுசிறப்பான முறையில் நடத்தி முடித்துள்ளார். பழங்குடியினரின் படைப்புகளை வெளிமாநிலங்களில் மட்டு மல்லாமல், வெளிநாடுகளிலும் லாபகரமாக சந்தைப்படுத்த முடியும் என்பது நிலை நாட்டப்பட்டுள்ளது. பழங்குடியினர் துணிவகைகளுக்கு இயற்கையான சாயத்தையே ஏற்றுகின்றனர். இதனால் இத்துணிவகைகள் நுகர்வோருக்கு எவ்வகையிலும் ஊறு செய்யாது என்பது உறுதி. சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மிகச்சிறப்பான முறையில் நெசவுத்தொழில் நடைபெற்றுள்ள பற்றிய பதிவுகள் கிடைத்துள்ளன.

துணிகளுக்கு சாயத்தை ஏற்ற பெரும்பாலும் நோனி மரத்திலிருந்து பெறப்படும் பொருட்களையே பழங்குடியினர் பயன்படுத்துகின்றனர். நோனியின் பழத்திலிருந்து சாறு பிழிந்து அதை ஆரோக்கிய பானம் என விற்பனை செய்யும் போக்கு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பஸ்தார் பகுதியில் பல்வேறு சமூகங்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. இவற்றுள் பங்காஸ், மகர்கள், சந்தர்கள் ஆகியோர் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். மகர்களும் சந்தர்களும் மென்மையற்ற துணிவகைகளை நெய்கிறார்கள். பங்காஸ் கலைத்திறன் மிகுந்த நெசவாளிகள்.

பங்காஸ், கவிஞர் கபீரின் வழிவந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது. கபீரும் நெசவுத் தொழில் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் என்பதை அவரது வரலாறு எடுத்துரைக்கிறது. பங்காஸ் சமூகத்தினருக்கு கபீர் பந்தீஸ் என்னும் பெயரும் உள்ளது. பஸ்தார் நெசவாளர்கள் பல்வேறு துணி வகைகளைக் கலைநயத்துடன் தயாரித்து வருகின்றனர். பட்டா என்பது கலை வேலைப்பாடு மிகுந்த சேலை. பொதுவாக, இது நான்கு மீட்டர் நீளமும், ஒருமீட்டர் அகலமும் கொண்டது.

பிச்சோரி என்பது ஆண்கள் இடையில் அணியும் வேட்டி. இதைத் திருமண விழாவின்போது மணமகன் அணிவது வழக்கம். ஷால் எனப்படும் துணிவகை இரண்டு மீட்டர் நீளம், ஒருமீட்டர் அகலம் கொண்டது. சதர் என்பது ஷாலைவிட சற்று சிறியது. இது 90 அங்குல நீளமும், 45 அங்குல அகலமும் கொண்டதாகும். அங்கோச்சா என்பது தோளில் அணியும் துண்டு. கண்ஸ் பந்தி என்பது அலங்கார வேஷ்டி. பெந்தா மூன்றரை மீட்டர் நீளம் சுமார் 18 அங்குல அகலம் கொண்டது. இதை ஆண்கள் முக்கிய விழாக்களின்போது தலைப்பாகையாகக் கட்டிக்கொள்கின்றனர்.