யுகாதியில் அவதரித்த யுக புருஷன்

தமிழ் மூதாட்டி ஔவையார் புறநானூற்றுப் பாடலிலே,

நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ,
அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

என்கிறாரே, என்ன பொருள்?

ஒரு நாடு வளம்பொருந்திய நாடாக இருக்கலாம்; வறுமை நிலவக்கூடிய நாடாக இருக்கலாம். அது ஒருநாட்டிற்குப் பெருமை சேர்ப்பது அல்ல. அந்த நாட்டு மக்கள் தேசபக்தியோடு இருக்கிறார்களா? தேசிய சிந்தனையோடு இருக்கிறார்களா? ஒருங்கிணைந்து வாழ்ந்து தேசத்திற்காகப் பாடுபடுகிறார்களா? ஆமெனில்தான் அந்த நாட்டிற்கு உயர்வு ஏற்படும் என ஔவையார் எடுத்துரைக்கிறார்.

அப்படி நம் தேசமானது உயர்ந்த நிலைக்கு வருவதற்கும், நாட்டு மக்களிடையே தேசத்திற்காக தியாகம் செய்வது, தேசத்திற்காக ஒருங்கிணைந்து சேவை செய்வது போன்ற சிறந்த நற்குணங்கள் கூடிய மனிதர்களை உருவாக்கக்கூடிய அமைப்புதான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம். அந்த அமைப்பை 1925ல் துவக்கியவர்தான் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார். யுகாதி திருநாளில் அவதரித்த ஹெட்கேவார் சிறுவயதுமுதலே தேசபக்தி, தெய்வபக்தி வாய்ந்தவராக முன்னுதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்.

சங்கம் துவங்கிய பின்னணி என்னவென சற்றே ஆராய்வோமா. வள்ளுவர் மடிமை என்கின்ற அதிகாரத்தின் 608 வது  குறளில்

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். என்கிறார்,

மடிமை எனில் சோம்பல்; சேர்ந்து செயல்படும் தன்மையின்மை; இது எந்த தேசத்தில் வாழும் மக்களுக்கு இருக்கிறதோ, அந்த தேசமானது தன் எதிரிகளுக்கு எளிமையாக அடிமையாகிவிடும் என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறியிருக்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக உயர்ந்த கண்ணோட்டத்தையும் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்டுள்ள நாடு நம் தேசம். இடையிலே பல்வேறு காரணங்களாலே நம்மிடையே தலைதூக்கிய பலவீனத்தைப் பயன்படுத்தி, நம் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, நாட்டிற்குள்ளே நுழைந்த முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நம்மை அடிமைப்படுத்தினார்கள். தேசத்தின் உயர்ந்த பாரம்பரியத்தை மறந்து அடிமைத்தனத்தில் மூழ்கிய காரணத்தினால் நமது தேசத்தினுடைய மக்கள் உயர்ந்த வாழ்க்கை வாழ்கின்ற தன்மையை மறந்து அடிமைத்தனத்தில் சிக்கிக்கொண்டனர். அடிமைச் சுழலில் சிக்கிய மக்களின் சிந்தனையை மாற்றி மீண்டும் ஒரு மகோன்னத நிலைக்கு நம்முடைய தேசத்தை உயர்த்தப் பாடுபடுவதற்கு அவதரித்தவர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார்.
***

பலமான உடற்கட்டு, கண்களில் அசாதாரண ஒளி, பெரிய மீசை என்று முரட்டுத் தோற்றத்தைக் கொண்டவராக இருந்தாலும், அணுகுவதற்கு எளிமையான, பழகுவதற்கு இனிய மனிதராக, சாந்தமும், பண்பும், பணிவும் மிளிர வாழ்ந்தவர் டாக்டர் ஹெட்கேவார். மருத்துவப் படிப்பை முடித்தபிறகு தன் வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்தவர். தன் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டபோதும் புன்சிரிப்போடும் அமை தியான முகத்தோடும் அனைவரையும் அரவணைத்து சங்கத்தை உருவாக்கி மக்கள் மனதிலிருந்து அடிமைத்தனத்தை நீக்கி, சமுதாயத்திற்கு வழிகாட்டக்கூடிய ஒரு தலைவராக வாழ்வாங்கு வாழ்விக்க வந்த ஒரு மகானாக விளங்குகிறார் டாக்டர் ஹெட்கேவார்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்னும் குறளுக்கு ஏற்றாற்போல் உலகத்திற்கே வழிகாட்டியாக விளங்கிய பாரத தேசம் ஏன் அடிமையாயிற்று என்று யோசித்தவர் டாக்டர்ஜி. ஆங்கிலேயனை வெளியேற்றுவதற்கானப் போராட்டத்தில் ஈடுபட்டது காங்கிரஸ். ஆங்கிலேயன் இந்த தேசத்தைவிட்டு வெளியேறினால் தேசத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொல்லி மக்களிடத்திலே கற்பனையை விதைத்தார்கள் காங்கிரஸார். மாறாக, ஏன் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள், நமது தேசம் ஏன் அடிமையானது என்று தீர்க்கமாக சிந்தித்தார். வல்லமையில், வாழ்க்கை முறை, கலாச்சாரத்தில் உச்சத்தைத் தொட்ட நாம் அடிமையானதற்குக் காரணம் நம்மிடத்திலே அன்று காணப்பட்ட ஒற்றுமையின்மை. இதைப் பயன்படுத்தித்தான் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள். அந்த பலவீனத்தைப் போக்கி மீண்டும் மக்களி டத்திலே ஒற்றுமையை கொண்டு வருவதற் காகவும், தேசத்தினுடைய பெருமையை மக்கள் உணர்வதற்காகவும் ஆர்.எஸ்.எஸ் என்ற மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்தார்.  அந்த அமைப்பை  உருவாக்குவதற்காகத் தன்னு டைய வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டார்.

எப்படி சூரியன் தினசரி தோன்றி இந்த உலகத்திற்கு வெளிச்சம் தருகிறானோ அப்படி நமது தேச மக்களிடையே ஒற்றுமை என்கின்ற வெளிச்சத்தை உருவாக்கி, மக்கள் வல்லவர்களாக நல்லவர்களாக உருவாவதற்காக முன்னுதாரணமான வாழ்க்கை வாழ்வதற்காக அவர் நமக்களித்த பொக்கிஷம்தான் ஷாகா. ஷாகா மூலமாக ”வ்யக்தி நிர்மாண்” (சிறந்த மனிதர்களை உருவாக்குதல்) எனும் மாபெரும் வேள்வியைத் தோற்றுவித்தார் ஹெட்கேவார்.  1925ல் சங்கத்தைத் தொடங்கி 1940ல் தாம் இறைவனடி சேர்ந்த 15 ஆண்டுகளுக்குள் ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்கியதுடன் மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கி, தேசம் தன் வலிமையை உணர்ந்துகொள்ளச் செய்த பகீரதன் அவர். மனதில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக நல்ல சிறந்த மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரு களமாக இருப்பதுதான் ஷாகா. ஷாகாவின் மூலமாக ஒன்றாக சந்தித்து, ஒன்றாக சிந்தித்து, ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக வளரும் தன்மை ஓங்கவே, தேசத்தின் மறுமலர்ச்சிக்கு காரணமாக அமைந்தது ஆர்.எஸ்எஸ்.

அந்த உத்தம புருஷனுடைய பிறந்த நாளில் அவர் தொடங்கி, வாழ்ந்து காட்டிய பாதையில் வாழ்வதன்மூலமாக மீண்டும் இந்த பாரதத்தை மகோன்னத நிலைக்கு கொண்டு செல்ல நாம் அவர் பிறந்த இந்த நன்னாளிலே உறுதி ஏற்போம்; அதைச் செயல்படுத்துவோம். — இதுதான் அவருக்கும் அவரைத் தந்த பாரத மாதாவுக்கும்  நாம் பட்ட கடனைத் தீர்க்கும் முறை.

அந்த ஏப்ரல் 1ம் இந்த ஜூன் 21ம்!

சுயநலம் இல்லாமல் பிறந்து வாழ்ந்து மறைவது என்பது அரும்பண்பு. இன்று உலகமே வியந்து பார்க்கும் பாரதத்தின் ஆர்.எஸ்.எஸ்ஸை நிறுவிய டாக்டர் ஹெட்கேவார் பிறவி தேசபக்தர்; தேசத்தை மட்டுமே மக்கள் மனதில் பதிக்க வேண்டும் என்பதற்காகவே சாதாரண நாளில் பிறக்காமல் யுகாதி நன்னாளில் (1889 ஏப்ரல் 1) பிறந்தார். அப்போதுதானே மக்கள் தனக்கு விழா எடுக்காமல் யுகாதி கொண்டாடுவதில் ஈடுபடு வார்கள்.-இவ்வாறு சுயநலமே இல்லாமல் வாழ்ந்த டாக்டர்ஜியின் தன்மை பற்றித் தமிழக ஆர்.எஸ்.எஸ் செயலராக இருந்த மதுரை வழக்கறிஞர் அமரர் ஆ. தக்ஷிணாமூர்த்தி 1974, சென்னை சக்தி காரியாலயத் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசுகையில் சுவையாகக் குறிப்பிட்டார். இதன் நீட்சியாக இன்னொரு கருத்து: டாக்டர்ஜி மறைந்தது ஜூன் 21 அன்று. சர்வதேச யோகா தினம் தான் ஞாபகம் வருகிறது அல்லவா? பிறந்தது போலவே அவர் மறைந்ததும் தன் நினைவு நாள் மக்களுக்கு ஞாபகம் வரக்கூடாது என்று அவர் கருதியது போல ஜூன் 21 அன்று!

இருவரையும் career என்ற cancer தீண்ட முடியவில்லை

ஆர்.எஸ்.எஸ்ஸில் ஸ்வயம்சேவகர்கள் ஆடிப் பவுர்ணமி குருபூஜை அன்று புனிதமான காவிக்கொடி என்னும் குருவுக்கு குருதட்சிணை சமர்ப்பணம் செய்கிறார்கள். எதிலும் டாக்டர் ஹெட்கேவார் ஒவ்வொரு ஸ்வயம்சேவகருக்கும் முன்னுதாரணம். இதிலும்கூட! வீட்டில் வறுமை. நண்பர்களின் வற்புறுத்தலால் காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவ அதிகாரியாக சேர்ந்தார். மாதச் சம்பளம் 30 ரூபாய். நான்கு மாதக் காலம் பணிபுரிந்து விலகினார். கிடைத்த 120 ரூபாயை அப்படியே குருபூஜை அன்று காவிக்கொடிக்கு சமர்ப்பித்துவிட்டார். அதன்பிறகு, அவர் டாக்டராகத் தொழில் புரியவும் இல்லை, சம்பாதிக்கவும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையில் பிழைப்புக்கு வழி தேட அவர் எந்த வேலையும் நாடவில்லை. நாடு அவரை நாடித் தேடி ஆட்கொண்டது. பல ஆண்டுகளுக்குமுன் சென்னை கிருஷ்ண கான சபா அரங்கில் நடந்த ஆர். எஸ். எஸ் குரு பூஜை விழாவில் பேசுகையில் அகில பாரத பொதுச்செயலாளர் (இன்று சர்சங்கசாலக்) டாக்டர் மோகன் பாகவத் குறிப்பிட்ட தகவல் இது. இதைக் கேட்கும்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி கோல்வால்கர் வாழ்க்கை ஞாபகம் வரும். இளமையில் அவர் “எம். எஸ்.கோல்வல்கர், எம்.எஸ்சி, எல்எல்.பி” என்று நாகபுரியில் தன் வீட்டுவாசலில் பலகை தொங்கவிட்டதோடு சரி. வழக்கறிஞர் தொழிலிலும் அவர் மனது செலுத்தவில்லை, தேசமும் அவரை விடுவதாக இல்லை. குருநாதர் எப்படியோ சீடரும் அப்படியே! இருவருக்கும் வாழ்க்கைதான் 100%; அதில் career என்பதற்கு 1 % கூட இடம் இல்லை! இவர்களின் அச்சாக, ஆயிரக்கணக்கான ஹிந்து இளைஞர்கள் கடந்த 95 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கையில் வாழ்க்கைக்கு மட்டுமே 100% அதில் career என்பதற்கு 1 % இடம் கூட கிடையாது என்று தீர்மானித்தார்களே, அதுதான் சங்க வெற்றியின் சூட்சுமம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளிப்பட்ட சத்தியம்

லோகமான்ய பாலகங்காதர திலகர் 1920ல் மறைந்தார். அந்தக் காலகட்டத்தில் அரவிந்தர் புதுச்சேரியில் தியானம், யோகம் என்று தவத்தில் ஈடுபட்டிருந்தார். திலகர் தளபதியாக இருந்த டாக்டர் பாலகிருஷ்ண முன்ஜேயும் திலகரின் வெகுஜன இயக்கங் களில் தீவிரமாகப் பங்கேற்ற டாக்டர் ஹெட்கேவாரும், அரவிந்தரை சந்தித்து அவரை சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை வகிக்க அழைக்கவேண்டும் என்று புதுச்சேரிக்கு ரயிலில் புறப்பட்டார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துசேர்ந்தனர். டாக்டர் முன்ஜேக்கு அடர்த்தியான தாடி. அவர் குல்லா அணிந்தி ருப்பார். பார்ப்பதற்கு முகமதியர் போல் இருப்பார். ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகருக்கும் டாக்டர் முன்ஜேக்கும் வாக்குவாதம். டிக்கெட் பரிசோதகர் கோபத்துடன், “என்ன நினைத்துக் கொண்டி ருக்கிறீர்கள்? உங்கள் ஆட்சிக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது…” என்று முன்ஜேயைப் பார்த்து சீறினார். பின்னாளில் டாக்டர் ஹெட்கேவார் இதுகுறித்து விவரிக்கையில் “பாரதத்தில் சாதாரண மக்கள் மனதில் முஸ்லிம் ஆட்சிக்காலம் அந்நிய ஆட்சிக் காலம் என்ற எண்ணம் பதிந்திருந்தது என்பதையே அந்த டிக்கெட் பரிசோதகரின் சொற்கள் காட்டின” என்பார்.